Acanthaspis Petax 
கல்கி

Acanthaspis Petax: முதுகில் சவங்களை சுமக்கும் கொலைகாரப் பூச்சி! 

கிரி கணபதி

Reduviidae என்கிற பூச்சி குடும்பத்தில் 6000-க்கும் மேற்பட்ட விசித்திரமான மற்றும் அற்புதமான பூச்சி இனங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் Acanthaspis Petax, இது இறந்த பூச்சிகளின் சடலங்களை தன் முதுகில் சுமக்கும் வித்தியாசமான நடத்தையைக் கொண்டதாகும். இது ஏன் இவ்வாறு செய்கிறது? 

வெறும் 1.5 cm நீளம் வரை மட்டுமே வளரும் இந்த பூச்சிகள் கருப்பு மற்றும் சிவப்பு நிற பட்டைகளை கொண்ட நீளமான, மெல்லிய உடலைக் கொண்டுள்ளன. இவை குறிப்பாக கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய காடுகளில் காணப்படுகின்றன. இது ஒரு கொலைகாரப் பூச்சி (Assassin Bug) இனமாகும். மற்ற பூச்சிகளை வேட்டையாடி, அவற்றின் உடல் திரவங்களை அப்படியே உறிஞ்சி எலும்புக்கூடாக மாற்றிவிடும். பின்னர் அந்த சடலத்தை, தன் முதுகில் ஒட்டிக்கொள்கிறது. சுமார் 20 எறும்புகள் வரை கூட தனது முதுகில் ஒட்டிக் கொள்ளும் திறன் இவற்றிற்கு உண்டு. 

சவங்களை முதுகில் சுமக்கும் நடத்தை: 

Acanthaspis Petax பூச்சிகள் சவங்களை சுமக்கும் நடத்தையானது பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளால் ஆராயப்பட்டு வருகிறது. இந்த நடத்தை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை நடத்தியுள்ளனர். அப்படி நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், Acanthaspis Petax பூச்சிகளின் முதுகில் இருந்த உயிரிழந்த பூச்சிகளை மற்ற பூச்சிகளிடம் காட்டும்போது, அவற்றை நோக்கி பூச்சிகள் வருவதைக் கண்டறிந்தனர். இதன் மூலமாக Acanthaspis Petax பூச்சிகள், தன்னை வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து காத்துக் கொள்ளவும், இரையை ஈர்க்கவும் அந்த சடலங்கலைப் பயன்படுத்தலாம் என கண்டறியப்பட்டது. 

மற்றொரு ஆய்வில், அந்தப் பூச்சிகள் சுமந்திருந்த சடலங்களில் உள்ள வேதிப்பொருட்களை ஆய்வு செய்தனர். அதில் அவற்றில் பல்வேறு வேதிப்பொருட்கள் இருப்பதையும், அந்த வேதிப்பொருட்கள் பிற பூச்சிகளை ஈர்க்கும் தன்மை கொண்டதாக இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். 

இவற்றின் தனித்துவமான நடத்தை பற்றிய ஆராய்ச்சிகள் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த பூச்சிகளின் பல்வேறு இனங்களை ஆய்வு செய்து, அதிலிருந்து புதியதாக ஏதேனும் கண்டுபிடிக்க முடியுமா என விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். 

ஒரு பூச்சி இனம், கொலையும் செய்து அந்த சடலங்களை தன் முதுகில் சுமக்கிறது என்பதை கேள்விப்படும்போது திகிலாக உள்ளது. இயற்கை இன்னும் எத்தனை ஆச்சரியங்களை தன்னுள் வைத்திருக்கிறதோ தெரியவில்லை. 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

SCROLL FOR NEXT