ஆணுக்கு சமமாக இன்று பெண்களும் அனைத்துத் துறைகளிலும் தடம் பதித்து சாதனைகள் புரிந்து வருகின்றனர். ஆனால், கடந்த நூற்றாண்டு வரை பெண் கல்வி என்பது மறுக்கப்பட்டு வந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. பெண் கல்வி என்பது ஒரு நாட்டுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை, எங்கோ ஒரு நாட்டில் இருந்து தமிழகத்துக்கு வந்து ஒரு பள்ளியை உருவாக்கி கல்வி பற்றிய விழிப்புணர்வை இந்தியப் பெண்களிடையே உருவாக்கிய மாற்றுத்திறனாளி ஆங்கிலேயப் பெண் சாரா டக்கர் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
18ம் நூற்றாண்டில் இவர் எடுத்த இடையறாத முயற்சியில் உருவான ‘சாரா டக்கர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி’தான் அன்று முதல் இன்று வரை நெல்லை மக்களுக்கு கல்வி அறிவை வழங்கும் ஒரு நிறுவனமாக பல கிளைகள் பரப்பி சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. யார் இந்தப் பெண்? ஆங்கிலேயப் பெண்ணான இவருக்கு எப்படி வந்தது தமிழ்ப் பெண்கள் மீதான அக்கறை? எதற்காக இந்தக் கல்லூரியை நெல்லையில் நிறுவினார் என்பதன் பின்னணி சுவாரஸ்யம் மிக்கது.
ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் எம்.எஸ்.சங்கத்தின் செயலாளராக இருந்தவர் ஜான் டக்கர். இவர் திருநெல்வேலி கடாச்சிபுரம் பகுதியில் வசித்ததாக கூறப்படுகிறது. இவரது சகோதரிதான் இங்கிலாந்தில் வசித்த 14 வயதான கால்களை இழந்த மாற்றுத்திறனாளி பெண் சாரா. தனது சகோதரிக்கு இங்கு நிகழும் விஷயங்கள் பற்றி கடிதம் எழுதுவார் ஜான் டக்கர். அப்படி ஒரு முறை எழுதிய கடிதத்தில் இந்தியாவில் பெண்களுக்கு கல்வி அளிக்கப்படாத நிலை பற்றியும் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில்தான் இங்கு இன்னும் பெண்கள் உள்ளனர் என்றும் எழுதி இருந்தார். மாற்றுத்திறனாளியான தான் வீட்டுக்குள் முடங்கினாலும் கல்வி கற்க முடிகிறது. இந்தப் பெண்களுக்கு ஏன் கல்வி மறுக்கப்படுகிறது என சிந்தித்தார். ஆண்கள் ஆசிரியர்களாக இருப்பதால் பெண் பிள்ளைகளை கல்வி கற்க குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை என்பதை அறிந்து பெண்களுக்காகவே கல்வி நிலையம் ஒன்றைத் துவங்க எண்ணினார்.
தனது குறிக்கோள் நிறைவேற கல்வி நிறுவனங்களை அமைக்க மூலதனமாக சகோதரர் ஜான் டக்கரிடம் தனது 24 பவுன் நகையையும் தையல் தொழில் செய்து ஈட்டிய வருமானத்தையும் தர அவரது வேண்டுகோளை ஏற்ற சகோதரரும் திருநெல்வேலி மாவட்டம் கடாட்சபுரத்தில் 1843ல் முதன் முதலாக பெண்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியை அமைக்கும் பணிகளை ஆரம்பித்தார்.
தொடர்ந்து சாரா டக்கர் தனது நண்பர்கள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் சேகரித்த நிதி உதவியுடன் கல்வி நிறுவனத்தின் பணிகள் விரைவில் முடிந்தது. இந்தியாவின் முதல் பெண்களுக்கான கல்வி நிறுவனமும் தொடங்கப்பட்டது. ஒரு கட்டத்தில் நிதிப்பற்றாக்குறை காரணமாக பள்ளி நடத்த முடியாமல் போனதை அறிந்த சாரா டக்கர் அச்சமயம் மரணத் தருவாயில் இருந்தார் எனவும் இதே வேதனையில் மறைந்த தங்கள் தோழியின் கனவு நிறைவேற சாரா டக்கரின் தோழிகள் முடிவு செய்து நிதி திரட்டி பள்ளிக்கு மீண்டும் புத்துயிர் தந்ததாக கூறப்படுகிறது.
இப்பயிற்சிப் பள்ளி ஆங்கிலேயரின் மற்ற கல்வி நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு மேல்நிலைப் பள்ளியானது. 1890ல் ஐந்து மாணவிகளுடன் சாரா டக்கர் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, 2ம் தரக் கல்லூரியாக உயர்ந்து. 1895ம் ஆண்டில், பெண்களுக்கான முதல் கல்லூரியாக மெட்ராஸ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது பெரும் சிறப்பு.
இத்தனை முயற்சிகளை மேற்கொண்டு நெல்லை பெண்கள் கல்வியறிவு பெற உதவிய சாரா டக்கரை ஆசிரியர் ஸ்தானத்தில் இன்றளவும் நன்றியுடன் நினைவு கூறுகின்றனர் நெல்லை பெண்கள்.