கல்கி

கலைஞர் வழுக்கைக்கு அண்ணா சொன்ன டிப்ஸ் என்ன தெரியுமா? | கலைஞர் 100

கலைஞரும் கல்கியும்

கல்கி டெஸ்க்

கலைஞரின் நூற்றாண்டுவிழாவினை ஒட்டி கல்கி இதழின் 80 ஆண்டு கால களஞ்சியத்தில் இருந்து நமது நிருபர் எஸ். சந்திர மௌலி மூழ்கி எடுத்த முத்துக்களின் தொகுப்பு.

கலைஞரது 75வது பிறந்த நாளை ஒட்டி வெளியான 07.06.1998 மற்றும் 14.06.1998 ஆகிய இரு கல்கி இதழ்களில் “கலைஞர் 75” என்ற தலைப்பில் அவரது முற்றிலும் மாறுபட்ட பேட்டி வெளியானது.

கடந்த சில தினங்களாக ஐந்து பகுதிகளாக அந்த சுவாரசியமான பேட்டியை படித்து ரசித்தோம். இதோ அதன் கடைசி பகுதி :

கல்கி : அரசியல் தலைவர் கலைஞருக்கு ஒரு வாக்காளர் மு.கருணாநிதி எனகிற முறையில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

கலைஞர் : விட்டுக் கொடுக்க வேண்டியவற்றுக்கு விட்டுக் கொடுத்து, விடாப் பிடியாக இருக்க வேண்டிய விஷயங்களுக்கு விடாப்பிடியாக இருந்து. எந்தச் சூழலிலும் தன்னை இளக்கிக் கொண்டு மக்களுக்காகப் பணிபுரிவதுதான் மகேசனுக்கு ஆற்றுகின்ற தொண்டு என்கிற முறையில் பாடுபடுகின்ற அரசியல் தலைவர் கலைஞருக்கு யாருமே வாக்களிக்காவிட்டாலும் என் ஒரு வாக்கு நிச்சயமாக உண்டு

கல்கி : அரசியல், இலக்கியத் துறைகளில் பெற்ற நிறைவை ஒரு குடும்பத் தலைவர் என்கிற முறையிலும் பெற்றிருக்கிறீர்களா?

கலைஞர் : குடும்பத் தலைவர் என்கிற முறையில் நிறைவைப் பெற்றிருக்கிறேன். ஆனால், அரசியல், இலக்கியத் துறைகளில் கொண்ட ஈடுபாட்டை குடும்பத்தில் தருவதற்கு எனக்கு அவகாசம் இல்லை.

கல்கி- உங்களுக்குக் கோபம் வந்தால் அதை எப்படி வெளிப்படுத்துவீர்கள்?

கலைஞர் : 'கணமேயுங் காத்தல் அரிது' என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறாரே அத்தகைய கோபம்தான் என்னுடைய கோபம். 'குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது" எங்கிற குறளுக்கு பலரும் பலவாறு பொருள் சொல்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் கோபத்தைத் தாங்க முடியாது என்றுதான் பொருள் சொல்கிறார்கள் ஆனால் நான் எனது திருக்குறள் உரையில் குணக் குன்றுகளாக உயர்ந்து நிற்பவர்கள் தங்களுடைய கோபத் தைக் கணநேரம் கூட வைத்துக் கொள்ள முடியாது" என்று எழுதிருக்கிறேன். அப் படிப்பட்ட கோபம்தான் என்னுடையது.

கல்கி : குறளோவியம், சங்கத் தமிழுக்கு அடுத்து, நீங்கள் தமிழன்னைக்குச் சூட்டப் போகும் ஆபரணம் என்ன?

கலைஞர் : தொல்காப்பியத்துக்கு ஓவியம் தீட்ட நீண்ட நாட்களாக முயற்சி மேற்கொண்டிருக்கிறேன். அதுதான் எனது அடுத்த படைப்பாக இருக்கும்.

கல்கி : உங்களுக்கு டிரைவிங் தெரியுமா? எப்போதாவது காரையோ அல்லது வேறு வாகனத்தையோ ஓட்டியிருக்கிறீர்களா?

கலைஞர் : நாள் அந்த முயற்சியில் ஈடுபடாதது மக்கள் மீது எனக்குள்ள அன்பைக் காட்டுகிறது.

கல்கி : சீப்பை உபயோகப்படுத்த முடியவில்லையே என்கிற வருத்தம் உங்களுக்கு உண்டா?

கலைஞர் : இதற்கொரு சிறு சம்பவம் சொல்லிகிறேன். எனக்கு முதன் முதலில் ஒரு காலணா அளவுக்கு - இப்போதைய ஒரு ரூபாய் அளவுக்கு வழுக்கை விழுந்த போது, அண்ணா அந்த வழுக்கையைத் தொட்டு, “வழுக்கை விழுது; தொத்தா கிட்டச்சொல்லு ! (தொத்தா என்பவர் அண்ணாவின் சினம்மா) பச்சிலை மருந்து கொடுப்பாங்க. அதைப் போட்டால் சரியாப் போயிடும்' என்று சொன்னார். “இப்படியே இருக்கட்டும் அண்ணா!” என்றேன். ஏனென்று கேட்டார். “வழுக்கை விழுந்து கொஞ்சம் முதிர்ச்சியடைந்தால்தான் என்னை மதிப்பீங்க! இப்போ என்னை சின்னப் பையனாத்தானே நினைச்சுக்கிட்டிருக்கிங்க!" என்றேன். ஆக, வழுக்கை பற்றி நான் கவலைப்பட்டதேவில்லை. அதை மாற்றிக் கொள்வதற்கான எந்த முயற்சியிலும் நான் ஈடுபட்டதில்லை. இருக்கிறபடி. இருக்கட்டும் என்று விட்டு விட்டேன்.

கல்கி : மேடைகளில் கடுமையாகத் தாக்கிப் பேசுகிற அளவுக்கு மாற்றுக் கட்சி களில் உள்ளவர்கள் யாரும் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் நண்பர்களாக இருக்கிறார்களா?

கலைஞர்: நிறைய. உமாபதி மேடைகளில் திட்டித்தான் பேசுவார் என்றாலும் தனிப்பட்ட முறையில் அளவு கடந்த அன்பு காட்டுவார். கண்ணதாசன் என்னைக் கடுமையாகத்தான் விமர்சிப்பார். இருந்தாலும் கடைசி வரை நண்பராகத்தான் இருந்தார். எந்தக் கட்சியிலும் இல்லாத ஒரு வழக்கம் அதிமுகவில்தான் உண்டு நேரில் பார்த்துக் கொள்ளும்போது அவர்கள் பேசக்கூட மாட்டார்கள்.

படங்கள் : ரவிசங்கரன்

கலைஞரது வித்தியாசமான பேட்டியைப் பாராட்டி வந்த வாசகர் கடிதங்கள் ஏராளம். எல்லா கடிதங்களையும் பிரிசுரிப்பது சாத்தியமில்லை அல்லவா? எனவே சாம்பிளுக்கு ஒரு கடிதம் மட்டும் வட்ட மேஜை என்ற “வாசகர்கள் கடிதம்” பகுதியில் வெளியானது. அந்தக் கடிதம் இதோ:

அரசியலுக்கு அப்பாற்பட்டு கடந்த கால பசுமையான நிளைவுகளை பவள விழா நாளில் கலைஞரின் பேட்டியெனப் படித்தபோது முற்றிலும் வித்தியாசமான புத்துணர்ச்சியைப் பெற்றது போல உணர்ந்தேன். அரசியல்வாதி ஜெயலலிதாவிடம் அவருக்குப் பிடித்த விஷயம் என்ன என்பதனை அறிய சஸ்பென்வோடு ஒரு வாரம் காத்திருந்தது கூட இன்ப அவஸ்தைதான்.

கும்பகோணம், ஆர். ஷண்முகம்,

புடவைக் கட்டும் பொழுது பெண்கள் செய்யக்கூடாத 9 தவறுகள்!

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

SCROLL FOR NEXT