அம்மியில் வைத்து அரைத்து... 
கல்கி

'மசாலா’ என்ற சொல் எப்படிப் பிறந்தது தெரியுமா?

இரவிசிவன்

ணவில்லாமல் உலகில்  நாம் யாரும் இல்லை! ஆனால், உணவுலகில் இன்றைக்கு மசாலா இல்லாமல் பெரும்பாலான சமையலே இல்லை எனச் சொல்லும் வகையில், கறி மசாலா, கரம் மசாலா, சாம்பார் மசாலா, மசால் வடை, மசாலா தோசை என பல வடிவங்களில் 'மசாலா' - என்ற சொல் இந்தியா  மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ்பெற்று வழக்கத்தில் உள்ளது. 

சமையலின்போது தவிர்க்க முடியாத சொல்லான 'மசாலா' - என்பது பொதுவாக ஒரு இந்தியச் சொல்லாகக் கருதப்பட்டாலும், இது தமிழ் வழங்கிய ஒரு சொல் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

மசிக்கப்பட்ட வாசனைப் பொருள் மசலைப் பொருள்.  அம்மியில் வைத்து அரைத்து மசிக்கப்படுவது = மசாலை.
(தொன்று தொட்டு தமிழர் வீடுகளில் சமையலுக்கான மசாலையரைக்க -தொன்மரபாக  அம்மிக்கல்லைப் பயன்படுத்தி வருகிறோம்).


மசாலை - என்றால் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பலசரக்கு விழுது, விழுதாக நசுக்கப்பட்ட  அல்லது அரைக்கப்பட்ட குழைவான கலவை.

மசாலை

மசாலை என்ற தமிழ்ச்சொல் திரிந்துதான் - பிறமொழிகளில் மசாலா ஆனது.

மசி > மசலை > மசாலை.

மசிதல் = குழைதல், பசைபோலாதல்.

மசி > மசித்தல்  என்றால் குழைத்தல்; கடைந்து குழையச் செய்தல், உணவுப் பொருளை நசுக்கி மாவு அல்லது கூழ் போன்ற மென்மையான நிலைக்கு வரச் செய்தல், பசை போலாக்குதல்.
என்று பொருள்.

மசியல் = குழைந்த உணவு.

தொடக்கத்தில் மசாலை என்ற சொல்
ஈரமான விழுதைக் ( Paste of Spices) குறித்துத் தோன்றினாலும், பிற்காலத்தில் 'உலர்ந்த தூள்' ( Spice powders) கலவைக்கான பொதுவான சொல்லாகவும் உருமாறி, மக்கள் வழக்கிலும் ஊடுருவி நிலைத்து விட்டது.

மசித்த பருப்பு கொண்டு செய்யப்பட்ட வடையே > மசால் வடை!

இத்தகைய சிறப்பு வாய்ந்த மசாலை - என்ற சொல் எங்ஙனம் பிறந்தது என்பதையும் நாம் விளங்கிக் கொள்வோம்.

திரட்சிக் கருத்தைக் குறிக்கும் 'மத்து' என்ற சொல்லின் வினையையொட்டி பிறந்த சொல் 'மசி' ஆகும்.

மத்து > மத்தி > மதி > மசி.

கடைதலைக் குறிக்கும் மதி என்னும் வினைச்சொல்லும், மத்து என்னும் வடிவிலிருந்தே திரிந்ததாகும்.

மத்தித்தல் - என்றால் மத்தினாற் கடைதல் (பிறவினைச்சொல்).
மதித்தல் = கடைதல்போற் கையினால் அழுத்திப் பசையாக்குதல் ( தன்வினைச் சொல்).

மதிதல் > மதியல் > மசியல்.
மசியல் = குழைவான உணவுப் பொருள்.
மசிதல் = கடைந்ததுபோல களியாதல்.

ஆக, மசி என்ற சொல் உலகிற்கு மசாலாவை மட்டும் வழங்கவில்லை, அதற்கு மேல்
Mash, Massage போன்ற ஆங்கிலச் சொற்களும் - இதே மூலத்திலிருந்து பிறந்தவை தான்!

ஆங்கிலத்தில் மசிதலைக் குறிக்கும் சொல் Mash ஆகும்.
மசி ( to mash) = to mix or crush something until it is soft. குழைவாக ஆகும் வரை ஒன்றைக் கலக்கு அல்லது மசியலாக்கு; கூழாக்கு.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT