தமிழ் எழுத்துலகில் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ’பொன்னியின் செல்வன்’ நாவலை பற்றி கேள்விபடாதவர்களே இருக்கமுடியாது என்றால், அதேபோல் அந்த நாவலில் இடம்பெற்ற வந்தியதேவன், ஐந்தடுக்கு கொண்டைக்காரி குந்தவை, பூங்குழலி, ஆழ்வார்க்கடியான், ஊமை ராணி ஆகியோரின் சித்திரங்களுக்கு வாசகர்கள் மனதில் தனி இடம் உண்டு.
கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களுக்கு ஓவியங்களாக உயிர்கொடுத்தவர் ஓவியர் மணியம் அவர்கள்தான். தமிழ் வார, மாத இதழ்களில் தன்னுடைய ஓவியங்கள் மூலம் உலகளவில் கவனம் பெற்றிருந்தார் ஓவியர் மணியம். அவரது நூற்றாண்டு விழாவினையொட்டி ஓவியர் மணியம் அவர்களின் அற்புத ஓவியங்கள், கலை பயணத்தின் சாதனை பக்கங்களை விவரிக்கும் ’மணியம் 100 -சரித்திரம் படைத்த சித்திரங்கள்’ என்ற பெயரில் நூல் வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னை மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.மேல்நிலைப்பள்ளியின் தக்ஷிணாமூர்த்திர அரங்கத்தில் நடைபெற்றது.
இந்நூலை மூத்த நடிகர் சிவகுமார் வெளியிட, கல்கியின் பேத்தி சீதா ரவி பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஓவியர்கள் மாயா, ஜெயராஜ், ராமு, அமுதபாரதி ஆகிய 4 பேருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், கவிஞர் மற்றும் மூத்த எழுத்தாளர் சுப்ரபாலன், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் சிறப்பு கவுரவம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஓவியர் மணியத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மூத்த எழுத்தாளர் சிவசங்கரி, நடிகர் சிவகுமார், கார்ட்டூனிஸ்ட் மதன், கல்கியின் பேத்தி சீதா ரவி உள்பட 6 பேர் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பேசிய கல்கியின் பேத்தி சீதா ரவி, ” கல்கி அலுவலகத்தில் முன்பு சரஸ்வதி பூஜையின்போது எம்.எஸ் அம்மா தனது இரு மகள்களுடன் இணைந்து வெள்ளை தாமரை மற்றும் நெஞ்சுக்கு நீதி பாடல்களை பாடுவார். அந்த பாடலில் வருகின்ற ”எள்ளத்தனை பொழுதும்” அதனை சரஸ்வதியிடம் வரமாக வாங்கி வந்தவர்தான் ஓவியர் சித்தர் மணியம்.
அவரை ஓவியர் சித்தர் என சொல்வது மிக பொருத்தமாக இருக்கும். ஏன்னென்றால் அப்பேற்பட்ட மாயங்களை தன்னுடைய தூரிகையில் செய்து காண்பித்தவர். அவர் 24 மணிநேரத்தை எவ்வாறு 48 மணிநேரமாக மாற்றி உழைத்தார் என்பதை அவரின் சக ஓவியர் திரு கோபுலு தற்போது வெளியாகியுள்ள ’மணியம் 100 -சரித்திரம் படைத்த சித்திரங்கள்’ நூலில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள ’மணியம் 100 -சரித்திரம் படைத்த சித்திரங்கள்’ புத்தகம் தமிழ் எழுத்துலகில் மிக முக்கியமான புத்தகமாகும். நேர்த்தியான புத்தகத்தின் தோற்றமும் அதில் இடம்பெற்றிருக்கும் உள்ளடக்கமும் பிரம்மிப்பூட்டும் வகையில் அமைந்திருக்கிறது. இதுபோன்ற ஒரு புத்தகம் தமிழில் வெளிவந்திருக்கிறதா? என்பது சந்தேகம்தான். இந்த முயற்சியில் கைகோர்த்த ஓவியர் மணியம் அவர்களின் மகன் ம.செ, எழுத்தாளர் சுப்ர.பாலன், பூம்புகார் பதிப்பகத்தார் மற்றும் ம.செ குடும்பத்தார் ஆகியோருக்கு எனது பாராட்டுக்கள்.
அமரர் கல்கி மிகபெரிய தேசபக்தர், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். தேச நலனை தமது பத்திரிகையின் முதலும் இறுதியுமான நோக்கமாக கொண்டவர். அவரின் லட்சிய கனவே நோக்கி பயணிக்க சிலர் இணைந்தார்கள். இணைந்தவர்களில் கல்கி சதாசிவம், எம்.எஸ் அம்மா, டி.கே.சி., ராஜாஜி போன்றவர்கள். சிலர் அமைந்தார்கள், அப்படி அமைந்தவர்களில் முக்கியமானவர் ஓவியர் மணியம். அமரர் கல்கியின் தேசிய கனவு என்பது பாரம்பரிய கலைகளின் புனர் உத்தாரணத்தை உள்ளடக்கியது. அந்த இழையை பற்றிக்கொண்டு கூட நடந்தவர்தான் மணியம். கல்கி அவர்களை போலவே வரலாற்றில் கற்பனைகளை ஈட்டு நிரப்பி வாசகர்களை ஏற்றமடையச் செய்யும் உயர் இலக்கை கொண்டிருந்தார் ஓவியர் மணியம் அவர்களும்.
ஓவியர் மணியம் அவர்கள் தன்னுடைய ஓவியங்களில் என்றுமே உடைந்த சிற்பங்களையோ அல்லது சிதிலமடைந்த சிற்பங்களை அப்படியே வரைந்தது கிடையாது. அவற்றை தமது கற்பனையாலும், மன வளத்தாலும் அந்த காலத்தில் எப்படி பூர்த்தி செய்திருப்பார்கள் என்று யோசித்து முழுமையான வடிவத்தை கொடுப்பார் என புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது சிறப்பான விஷயமாகும்.
ஓவியம் மணியமும் அமரர் கல்கிக்கும் பல விஷயங்களில் ஒற்றுமையுண்டு. கல்கி 55 ஆண்டுகள் வாழ்ந்து ஒரு நூற்றாண்டுக்கான எழுத்துகளை படைத்தார் என்றால், மணியம் அவர்கள் 48 ஆண்டுகள் வாழ்ந்து நூறாண்டுகளுக்கான சித்திரங்களை வரைந்தார். பொன்னியின் செல்வன் நாவலுக்கு ஓவியர் மணியம் வரைந்த ஓவியங்கள் பண்டைய தமிழர்கள் வாழ்ந்த மனச்சித்திரங்கள் வாசகர்களுக்குள் எழுச்சியை ஏற்படுத்த ஓவியர் மணியம் ஓவியங்களும் கல்கி எழுத்துகளும் முக்கிய காரணம் என்பது உலகளவில் போற்றப்படுகிறது.
கல்கி நூற்றாண்டின்போது ஓவியர் மணியம் அவர்களின் ஓவியங்களை நவீன முறையில் மாற்றலாம் என்ற எண்ணம் தோன்றியது. இதற்காக ஓவியர் மருது அவர்களிடம் ஓவியர் மணியம் அவர்கள் வரைந்த சித்திரங்களை கொடுத்து அதனை Modern Illustration ஆக வரைந்து நூற்றாண்டு மலரில் வெளியிட்டு இருந்தோம்.
இந்தகாலத்திலும் பொன்னியன் செல்வன் ஓவியங்கள் கொண்டாடப்படுவதுபோல், மற்ற ஓவியங்கள் கொண்டாடப்படுகிறதா? என்பது சந்தேகம்தான். எல்லாவற்றுக்கும் மேலாக கல்கிக்கும் மணியம் அவர்களுக்கு ஒரு ஒற்றுமை உண்டு. இருவருக்கும் தேவதா விசுவாசம் உள்ள புதல்வர்கள் அமைந்தார்கள். என் அப்பா கல்கி ராஜேந்திரன் அவர்களிடம் ’அப்பா’ என்ற வார்த்தையை சொன்னால்போதும் அவரின் முகம் தாமரை மலர் போல் மலர்ந்துவிடும். அதேபோல்தான் ஓவியர் ம.செவும் இன்றும் அவர் தான் வரையும் ஓவியங்களை தன் தந்தை ஓவியர் மணியம் அவர்களின் படத்தின் முன்பு வைத்து ஆசி பெற்ற பின்பே அச்சுக்கு அனுப்புகிறார்கள். அந்தளவுக்கு இருவருக்கும் தங்களுடைய தந்தையிடம் மிகுந்த பற்றும் மரியாதையும் உண்டு.
பொதுவாக ஆலமரத்தின் நிழலில் மற்ற செடிகள் முளைக்காது என்பார்கள். ஆனால் அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி என்ற ஆலமரத்தின் நிழலில் எழுத்தாளர் ராஜேந்திரனும் ஓவியர் மணியம் என்ற ஆலமரத்தின் கீழ் ஓவியர் ம.செவும் தழைத்து வளர்ந்துள்ளனர். ’மணியம் 100 -சரித்திரம் படைத்த சித்திரங்கள்’ என்ற இந்த புத்தகத்தில் ஓவியம் பற்றி தெரியாதவர்கள் கூட ஓவியம் மணியம் அவர்கள் ஓவியங்கள் வரை மேற்கொண்ட யுக்திகளை புரியம்படி எழுதியுள்ளார். அந்தளவுக்கு வாசகர்களுக்கு மிகவும் பிடித்தமான புத்தகமாக இருக்கும்” என்றார்.
மூத்த எழுத்தாளர் சிவசங்கரி பேசுகையில், ’மணியம் 100 -சரித்திரம் படைத்த சித்திரங்கள்’ என்ற இந்த புத்தகம் சோழ, சேர, பாண்டியன், பல்லவ சாம்ராஜியங்களை தொடங்கிய அஜந்தா, அனுராதபுரம், மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்கள் குறித்து அழகான வர்ணணை மற்றும் பின்கதையோடு மிக அருமையாக குறிப்பிட்டுள்ளார்கள்.
நான் எழுத்து உலகில் நுழைந்த காலகட்டத்தில் தற்போது உள்ளதுபோல் எந்த தொலைபேசி தொழில்நுட்ப வசதியும் கிடையாது. ஆனால், அதற்கு முன்பே பல ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து வசதிகூட இல்லாத காலகட்டத்தில் எழுத்தாளர் கல்கியும், ஓவியர் மணியமும் வரலாற்று தொடர்பான இடங்களுக்கு சென்று அங்கிருந்து சிற்பங்களை ஓவியங்களாக வாசகர்களுக்கு கொடுத்துள்ளனர்.
ஒரு ஓவியத்தை தீட்டுவதற்கு முன்னாள் அதற்காக ஓவியர் மணியம் எடுத்துக்கொண்ட முயற்சிகளை இன்றைக்கு நாம் நினைத்து பார்த்தால் பிரம்மிப்பாக உள்ளது. ஓவியர் மணியம் அவர்கள் தன்னுடைய சித்தரங்களால் மட்டும் சகாவரம் பெறவில்லை. அவரின் மகன் ம.செ மூலம் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறார். புத்தகத்தில் இடம்பெற்றுள்ள படங்கள்,ஓவியங்கள் மற்றும் மணியம் குறித்து எழுத்துகள் ஆகியவை மிக அருமையாக இடம்பெற்றுள்ளது” என்றார்.
கார்ட்டூனிஸ்ட், பத்திரிகையாளர் மதன் பேசுகையில்,” தமிழ்நாட்டின் மிகச் சிறந்த ஓவியர்கள் என்ற இடத்தில் முதலில் இருப்பவர் ஓவியர் மணியம். பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் தன்னுடைய ஓவியங்கள் மூலம் ஓவியம் மணியம் உருவாக்கினார் என்றுதான் சொல்லவேண்டும்.
ஓவியர் மணியம் அவர்களுக்கு பிறகு கதாபாத்திரங்களை கற்பனை செய்து சித்திரங்களாக திட்டக்கூடிய ஓவியர்கள் வேறு யாரும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கல்கி அவர்கள் மிகப்பெரிய பொறுப்பை ஓவியர் மணியம் அவர்களிடம் கொடுத்திருக்கிறார். அதனை ஓவியர் மணியம் ஏற்று சிறப்பாக செய்துகொடுத்திருக்கிறார்” என்றார்.
அமுதசுரபி ஆசிரியர் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் பேசுகையில், ” இந்த புத்தகத்தை படிக்கும் வாசகர்களுக்கு, ஓவியர் மணியம் அவர்களின் ஓவியங்களை பேசும் சப்தத்தையும், மூச்சுவிடும் ஒலியையும் கேட்க முடியும். சிற்பத்திற்கு முப்பரிமாணம் உண்டும், ஓவியத்திற்கு முப்பரிமாணம்கிடையாது. இரண்டு பரிணாமத்தில் மூன்றாவது பரிணாமத்தை உருவாக்கவேண்டும். அப்படி ஓவியத்தில் சிற்பத்தை படைத்த பெருமை ஓவியர் மணியம் அவர்களுக்கு உண்டு” என்றார்.
ஓவியர், நடிகர் சிவகுமார் பேசுகையில்,”ஓவியர் மணியம் அவர்களின் குடும்பம் முழுமையாக ஆசிர்வாதம் பெற்ற குடும்பம். ஓவிய துறைக்கு நான் மிகுந்த தாமதமாகதான் வந்தேன். பொன்னியின் செல்வன் நாவல் வந்த நேரத்தில் நான் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டிருந்தேன். அப்படிப்பட்ட சூழலில் இருந்த வந்த நான் பின்னர் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து ஆறு வருடம் ஓவியம் வரைய கற்றுக்கொண்டேன். தொடக்ககாலத்தில் மிகுந்த பொருளாதார கஷ்டங்களுக்கு இடையில்தான் நான் ஓவியங்கள் வரைய கற்றுக்கொண்டேன்” என்றார்.
நிகழ்ச்சியில் இறுதியாக ஏற்புரை ஏற்று பேசிய ஓவியர் மணியம் செல்வன்,” என்னுடைய தந்தை ஓவியர் மணியம் அவர்களின் ஓவியங்களில் உள்ள சிறப்புகள் குறித்து நான் ஓவியனாக பின்புதான் தெரிந்துக்கொண்டேன். என்னுடைய தந்தை ஒரு பெரிய பொக்கிஷத்தை சேர்த்துவைத்துவிட்டு சென்றுள்ளார். அதனை ஒரு தங்க சுரங்கமாக பாதுகாத்துவருகிறேன். அதனை வெளிக்கொண்டுவரவேண்டும் என்பதற்காகதான் ’மணியம் 100 -சரித்திரம் படைத்த சித்திரங்கள்’ என்ற புத்தகமாக கொண்டுவந்திருக்கிறோம்.
அதேபோல், கல்கி குடும்பத்தார் இல்லை என்றால் இன்று நாங்கள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஓவியத்தில் ஒரு உயிர்ப்பு தன்மை இருக்கவேண்டும். பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த பலர் என்னிடம் வந்து அப்பா ஓவியர் மணியம் அவர்களின் சித்தரங்கள் குறித்து நினைவுகூர்ந்து பேசினார்கள். என்னுடைய அப்பா அவரின் ஓவிய திறமையை மட்டும் என்னிடம் கொடுத்துவிட்டு செல்லவில்லை, அவருக்கு வரவேண்டிய பாராட்டுகளையும் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
இந்த புத்தக வெளியிட்டு விழாவின் மூலம் என் தந்தைக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்துள்ளேன் என நினைக்கிறேன். என் தந்தையின் ஓவியங்கள் புத்தகங்களாக வெளியிட்டு இருப்பது இன்றைய இளம் ஓவியர்களுக்கு உதவியாக இருக்கவேண்டும் என்பதற்காகதான். ஓவியர் மணியம் அவர்களின் ஓவியங்கள் இன்றைய இளம் ஓவியர்களுக்கு விதையாக அமையும் என நம்புகிறேன்” என்றார்.