திண்டுக்கல் மாவட்டம் “சின்னாளம்பட்டி” என்கிற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது ‘காந்தி கிராமம்’.
02.02.1946 அன்று மகாத்மா காந்தியடிகள் மதுரை சென்று திரும்பி வருகிறார். அதனை அறிந்த சின்னாளப்பட்டியைச் சுற்றியுள்ள கிராம மக்கள், “மகாத்மாவைச் சந்திக்க வேண்டும்” என்ற ஆர்வத்தில் ஒன்று திரண்டு ரயில் பாதையில் பெருங்கூட்டமாக நிற்க, வேறு வழியில்லாமல் ரயில் நிறுத்தப்படுகிறது. அன்றிலிருந்து அந்த ஊருக்கு “காந்தி கிராமம்” என்ற பெயர் ஏற்பட்டது.
காந்தி கிராமத்திற்கு புகழ் சேர்க்கும் வகையில் 250 ஏக்கர் நிலப்பரப்பில் கிராமியப் பல்கலைக்கழகம் 1956 ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டு இன்றும் இயங்கி வருகின்றது. இப் பல்கலைக்கழகம் கிராமியப் பண்பாட்டு வளர்ச்சிக்காகவும், முக்கியமாகப் பெண் கல்வி முன்னேற்றத்திற்காகவும், திருமதி சௌந்தரம், டாக்டர் ஜி.ராமச்சந்திரன் தம்பதிளால் ஆரம்பிக்கப்பட்டது. டாக்டர் சௌந்தரம் டி.வி.எஸ். நிறுவன அதிபரின் ஒரே மகள் ஆவார். இன்று பல்கலைக்கழகம் 61 பிரிவுகளுடன் விரிவடைந்திருக்கிறது.
கிராம மக்களின் நன்கொடைகளாலும் பூமிதான செயல்பாட்டினாலும் கட்டி எழுப்பப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு லகுமையா என்பவர் 25 ஏக்கர் நிலமும் ரூ.25 ஆயிரம் நன்கொடையும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிராமியப் பல்கலைக்கழகத்தின் காந்தி அருங்காட்சியகம் உள்ளது. காந்தியின் ‘அஸ்தி’ இங்கே பாதுகாக்கப்பட்டு வருவது தனிச்சிறப்பு.
தனி நிர்வாகமாக இயங்கி வந்த இப்பல்கலைக்கழகம் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இப்போது இயங்கி வருகிறது.
கிராமிய சுகாதார ஆய்வாளர் பட்டயப் படிப்பு தமிழ்நாட்டிலேயே இங்குதான் வழங்கப்பட்டு வருகிறது.