இந்தியாவிலேயே அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற மாநிலங்களில், 50க்கும் மேற்பட்டவைகளுக்கு புவிசார் குறியீடு பெற்று, தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படுகிறது. புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை வியாபார நோக்கத்தோடு, அதன் பெயரில் போலியாக உருவாக்கி வேறு யாரும் பயன்படுத்துவதை தடுக்க முடியும்.
தமிழகத்தில் திண்டுக்கல் பூட்டு, மதுரை மல்லிகை, பழநி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப் பூண்டு உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட உணவு, வேளாண் மற்றும் பாரம்பரிய உற்பத்தி பொருட்களுக்கு தமிழக அரசு புவிசார் குறியீடு பெற்றுள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த இலவம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் விளையும் முள்ளு கத்தரிக்காய்க்கு கடந்த 2023 பிப்ரவரி மாதம் சிறப்பு மிக்க புவிசார் குறியீடு மத்திய அரசின் மூலம் வழங்கப்பட்டது.
இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய் எனப்படும் இந்த கத்திரிக்காய் இலவம்பாடி மற்றும் அதன் சுற்றுப்பகுதியான தார்வழி, குடிசை, மருதவல்லிபாளையம், நாட்டார்மங்கலம், நரசிங்கபுரம், ஈச்சங்காடு, பொய்கை, புதூர், சக்திய மங்கலம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.
இளஞ்சிவப்பு நிறத்துடன் கலந்த ஊதா நிறத்தில் பளபளப்பாக காணப்படும் இந்த கத்தரிக்காயின் சராசரி எடை 35 கிராம் ஆக இருக்கும். இது வீட்டுக்குள் சாதாரண வெப்ப நிலையில் 3 நாட்களும், குளிர் நிறைந்த பகுதிகளில் சுமார் 8 நாட்களும் தாங்கும்.
நோய் தாக்குதல்களை எதிர்க்கும் தனி சக்தி இதற்கு உண்டு. புரதம் மற்றும் வைட்டமின் சி அதிகளவில் நிறைந்துள்ளது.
இது மற்ற கத்தரி வகைகளை விட சுவை மிகுதியாக இருக்கும். செடியின் அனைத்து பகுதிகளிலும் இருக்கும் முட்கள், பயிரை மிகவும் தனித்துவமாகவும், அடையாளப்டுத்தி காட்ட கூடியதாக இருக்கிறது.
இந்த வகை கத்தரி மென்மையாகவும், சதைப்பற்றுள்ளதாகவும் இருக்கும். மேலும் செடிகளில் கத்தரிகாய் கொத்து கொத்தாக தொங்கும். வேலூர் முள்ளு கத்தரிக்காயை சுடலாம், பார்பிக்யூ செய்யலாம், வறுக்கவும் வறுக்கலாம்.
இவ்வளவு ருசி மிகுந்த இந்த கத்தரிக்காய்க்கு புவி சார் குறியீடு வழங்கப்பட்டதால், அதன் விலையை விவசாயிகளே நிர்ணயிக்கும் நிலைமை ஏற்படும் என்றும் உற்பத்தியை பெருக்கி ஏற்றுமதியை அதிகரித்து வேலை வாய்ப்பு பெருகும் எனவும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர்.
ஆனால், புவிசார் குறியீடு கிடைத்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் இதுநாள் வரையில் தமிழக அரசின் மூலமாகவும், மாவட்ட நிர்வாகத்தின் மூலமாகவும் இதனை ஏற்றுமதி செய்ய எந்த ஒரு பயிற்சியோ அல்லது ஏற்றுமதி வாய்ப்புகளையோ உருவாக்கித் தரப்பட வில்லை. அது மட்டுமின்றி விவசாய பயிர்களுக்கு கிடைக்கும் பயிர் காப்பீடு கூட இந்தப் பகுதியில் விளையும் முள்ளு கத்தரிக்காய்க்கு வழங்கப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டுகளை விவசாயிகள் முன்வைக்கின்றனர்.
இதே சூழல் நீடித்து வந்தால் பாரம்பரிய முள்ளு கத்தரிக்காயின் விதைகள் கூட இல்லாமல் போகும் என ஆதங்கத்தை விவசாயிகள் வெளிப்படுத்தி வருகின்றனர். புவிசார் குறியீடு கிடைத்தும் எந்த பயனுமில்லை என இப்பகுதி விவசாயிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். எனவே இப்பகுதி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பகுதியில் விவசாயிகளுக்கு ஏற்றுமதி பயிற்சி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.