இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி நெருக்கத்தில் வந்து விட்டது! புதிய ஆடைகள், புளகாங்கிதம் அடையச் செய்யும் இனிப்பு வகைகள், வானத்தையே வண்ண மயமாக்கிக் காட்டும் பட்டாசுகள் என்று மூன்றையும் ஒருசேர வழங்கும் திருநாள் இது என்பதாலேயே தீபாவளி தனிச் சிறப்புப் பெறுகிறது! எல்லா வயதினரையும் ஈர்க்கிறது!
தீபாவளிப் பட்டாசுகளின் மேல் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும் அதிக பட்ச சில்லறை விலைக்கும், விற்பனை செய்யப்படும் விலைக்கும், மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம், பல வருடங்களாகவே காணப்படுகிறது! உதாரணமாக ₹100 க்கு விற்கப்படும் பட்டாசு கவரின் மேல் எம்.ஆர்.பி., ₹400 என்று இருக்கிறது. உண்மையில் அந்தப் பட்டாசின் விலை நூறை விடக் குறைவாகத்தான் இருக்கும்.
பல பெரிய கடைகளில் நாம் வாங்கும் பொருட்களுக்குத் தரப்படுகின்ற கணினி பில்லில், எம்.ஆர்.பி., என்று ஒன்றை அதிகமாகப்போட்டு விற்பனை விலையைச் சற்றே குறைத்துக்காட்டி, அவர்கள் கடையில் நாம் பொருட்களை வாங்கியதால் நாம் சேமித்த தொகை என்று ஒன்றைப் போட்டு நம்மைக் கவர்கிறார்கள். அவர்கள் போடுகின்ற எம்.ஆர்.பி.,யே ஒரே நகரிலுள்ள கடைக்குக் கடை வித்தியாசப் படுகிறது. ஒரே நகரில் எம்.ஆர்.பி., வெவ்வேறாக இருக்க, சட்டத்தில் வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.
இது இவ்வாறிருக்க, உணவகங்களின் கதையோ வேறு மாதிரியாக இருக்கிறது. சமீபத்தில் கோவை அன்னபூர்ணா ஓட்டல் முதலாளியை மிகப் பெரிய அரசியல்வாதி ஆக்கி விட்டார்கள், அரசியலில் பங்கேற்றிருக்கும் இரண்டு பெண்கள்! நாம் அரசியலுக்குப் போக வேண்டாம். நடைமுறைக்கு வருவோம். ஏதோ ஓட்டல் முதலாளிகள் நமக்காக வாதாடுவது போல் நடித்தாலும், உண்மையில் பாதிக்கப்படுவது வாடிக்கையாளர்களாகிய நாம்தான்!
இருக்கின்ற தொழில்களிலேயே அதிக லாபம் தரக்கூடியதாக உள்ளது இந்த ஓட்டல் தொழிலே. எனவேதான் தொழிலை நன்றாக நடத்துபவர்களால், மிக விரைவிலேயே நகரெங்கும் மட்டுமல்ல, பல வெளி நாடுகளிலும் உணவகங்களைத் திறந்து, லாபகரமாக நடத்த முடிகிறது. அப்படியிருக்கையில், அரசு மக்களின் நலனில் அக்கறை கொண்டிருக்குமானால், ஜி.எஸ்.டி.,யை ஓட்டல் முதலாளிகள்தான் கட்ட வேண்டுமென்று (அதாவது அவரவர் விற்பனைக்கேற்றவாறு), ஆணை பிறப்பித்திருக்க வேண்டும். அதை அரசு செய்யாதது ஏன் என்று புரியவேயில்லை! ’ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட்ட கதை’ யாக, ஏதோ நமக்காகப் போராடுவதாக காட்டிக்கொண்டு அவர்கள் நம் தலையிலேயே மிளகாய் அரைக்கிறார்கள்! ஆம்!ஜி.எஸ்.டி.,யை நாம்தானே கட்டுகிறோம்.
உணவகங்களில் இன்னும் பெரிய கூத்து என்னவென்றால், விமான நிலையங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை! டீ, காபியின் விலையே ₹150 என்றால், மற்றவற்றின் பக்கமே நம்மால் போக முடியாது. விமானப் பயணம் என்பது முன்பு போல், பணக்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், நடிகர்களுக்கும், பெரும் முதலாளிகளுக்கும், வசதி படைத்த விளையாட்டு வீரர்களுக்கும் என்பதாக இல்லாமல், சாமானியர்களுக்கும் பயன்படும் நிலை வந்து விட்டது.
இந்த விலையைப் பொறுத்துக் கொள்ள முடியாத கொச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், பிரதமருக்குக் கடிதமெழுத, அந்தக் குறிப்பிட்ட விமான நிலையத்தில் மட்டும் விலை குறைக்கப்பட்டதாகச் செய்திகள், பின்னர் வந்தன. அந்நேர்வில், பிரதமர் ‘எல்லா விமான நிலையங்களிலும் இப்படித்தானா?’ என்ற வினாவை எழுப்பி, எல்லா விமான நிலையங்களிலும் குறைக்கவல்லவோ உத்தரவு போட்டிருக்க வேண்டும்!
இவை ஒரு புறமிருக்க, சரியான பராமரிப்பு இல்லாத சாலைகளை வைத்துக் கொண்டு, அடிக்கடி ‘டோல் கேட்’ களில் கட்டணத்தை மட்டும் கூட்டிக் கொண்டே போகிறார்கள்! பல டோல்கேட்கள் காலாவதி காலத்திற்குப் பிறகும் செயல்பட்டு, வாகன ஓட்டிகளிடம் காசு பறிப்பதாக, ஒரு சாரார் குறை கூறி வருகிறார்கள்!
இன்னொரு புரியாத புதிர், ஸ்டார்ட் செய்தாலே ஹெட் லைட்டுகள் எரியும் நமது டூ வீலர்கள்! குளிர்ப் பிரதேசங்களில் எப்பொழுதும் ஹெட் லைட்டுகள் எரிவதால், பெரிதாகப் பிரச்னைகள் ஏதுமில்லை! ஒரு விதத்தில் அது நல்லதுங்கூட! ஏனெனில், அதிகக் குளிரை விரட்ட அந்த வெப்பம் துணை செய்யும்! நமது நாட்டு நிலையோ முற்றிலும் மாறுபட்டது! நமது நாடு ஏற்கெனவே வெப்ப மண்டலப் பிரதேசமாகும். அந்த வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இதில் ஓடும் போதெல்லாம், பகலிலும் எரிந்து வெப்பத்தை அதிகமாக்கும் டூ வீலர் ஹெட் லைட்களை, யார் ‘ஆஃப்’ செய்வது? இதற்கு முன்னர் உற்பத்தி செய்யப்பட்ட வண்டிகளில் இந்தத் தொல்லை இல்லையே! இதற்கு முடிவு கட்டுவது அவ்வளவு கடினமான காரியமா?