குற்றவாளிக் கூண்டில் நெய்!

Ghee used for Tirupati Laddu
Ghee used for Tirupati Laddu
Published on

'ஆலயங்களில் நெய் விளக்கு ஏற்றினால் ஆபத்துக்கள் விலகும்!’ என்பார்கள்!

நெய்யை உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் கூடுமென்பார்கள்!

'அடுத்த வீட்டு நெய்யே! என் பெண்டாட்டி கையே!’ என்ற பழமொழியும் நம்மிடையே பல காலமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

நம் நாட்டு மங்கல விருந்துகளில், பருப்புக்கும், நெய்க்கும் பக்குவமாய் முதலிடம் உண்டு.

‘நெய்…நெய்ன்னு, நொய்…நொய்ங்காம விஷயத்துக்கு வா!’ என்ற உங்களின் ‘மைண்ட் வாய்ஸ்’ எனக்கும் கேட்கிறது!

நமது நாட்டில்தான் அத்தனை விஷயங்களிலும் அரசியல் புகுந்து விடுகிறது! கல்வியில், மருத்துவத்தில், ஆலயங்களில் என்று அரசியல் இல்லாத இடமே இல்லை!

திருப்பதி கோயிலின் உள்ளே சென்ற அரசியல், உலகப் பிரசித்தி பெற்ற அக் கோயிலின் பிரசாதமான லட்டு வழியே இப்போது வெளியே வந்திருக்கிறது! குற்றவாளிக் கூண்டில் நெய் ஏற்றப்பட்டுள்ளது!

அது செய்தது வேறொன்றும் இல்லை!

அரசியல் கட்சிகள் போல், அதுவும் கூட்டணி அமைத்து விட்டதாம்! அதன் கூட்டணி யார்? யார்? என்கிறீர்களா?

மிருகக் கொழுப்பு, மீன் எண்ணெய் போன்றவைதானாம்!

ஆண்ட கட்சி புனிதத்தைக் கெடுக்க, ஆளுங் கட்சி புனிதத்தை மீட்டு விட்டதாம்!

எமக்கு ஒரு சிறு சந்தேகம்!

நல்ல நெய், பசு, எருமை மாடுகளின் பாலில் இருந்துதான் வருகிறது!

எங்கள் கிராமங்களில், 40, 50 வருடங்களுக்கு முன்பு, வீட்டுக்கு 2, 3 கறவை மாடுகள் இருந்தன. மாடு மேய்க்கும் சிறுவர்களும், மேய்ச்சல் நிலங்களும், வேண்டுமளவுக்குத் தண்ணீரும் இருந்தன.

இதையும் படியுங்கள்:
திருப்பதி லட்டு பிரசாதத்தின் வரலாறு அறிவோம்!
Ghee used for Tirupati Laddu

காவிரி, அரசியல்வாதிகளின் பிடியில் சிக்க ஆரம்பித்ததும், ஆடு, மாடுகளுக்குத் தண்ணீர் கிடைப்பதும் அரிதாகிப்போக, விளைச்சலும் நொண்டியடிக்க, மாட்டுக்குக் கூட வைக்கோல் கிடைக்காத அளவுக்குப் பயிர்கள் காய்ந்து போக, பலர் மாடுகளை வந்த விலைக்கு விற்று விட்டனர்.

கிராமங்களில், பால் மாடுகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது.

உலகின் மக்கட்தொகையில் இரண்டாவது இடத்திலிருந்த நாம், தற்போது முதலிடத்தைப் பிடித்து விட்டோம்!

ஒரு காலத்தில் வெறும் 9 பொறியியல் கல்லூரிகளே இருந்த தமிழகத்தில் 500 க்கும் மேற்பட்ட எஞ்சினீரிங் காலேஜ்கள் தோன்றி, பெரும்பாலான மாணவர்களை எஞ்சினீயர்களாக்க, ஐ.டி.,கம்பெனிகளும் பெருக, மக்கள் கையில் பணப்புழக்கம் வெகுவாகவே அதிகரித்து விட்டது.

லட்சங்களில் இருந்த வீடுகளின் விலை கோடிகளைத் தாண்டி விட்டன! கோடிகளில் வீட்டை வாங்குபவர்களுக்கு, உணவுக்கான செலவைப் பற்றிய கவலை இருக்குமா என்ன?

செல்வர்களின் வீட்டுச் சமையலறையை மட்டுமே அலங்கரித்து வந்த நெய் பாட்டில்கள், சாமானியர்களின் வீட்டுச் சமையலறையிலும் குடி புகத் தொடங்கி விட்டன.

ஒரு பக்கம், மாடுகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது; மறு பக்கம் நெய்யின் தேவை அதிகரித்து விட்டது.

நெய்யின் தேவை எவ்வளவு? நெய் உற்பத்தி ஆவது எவ்வளவு? இதற்கான விபரங்கள் இருக்கின்றனவா? என்பது தெரியவில்லை.

‘ஏன்யா உனக்கு இந்தச் சந்தேகம்?’ என்று நீங்கள் முணகலாம்!

என் சந்தேகத்திற்குக் காரணம் உண்டு பாஸ்!

இதையும் படியுங்கள்:
பசு நெய் Vs எருமை நெய்: எது சிறந்தது தெரியுமா?
Ghee used for Tirupati Laddu

உலகம் முழுவதும் ‘சூரிய காந்தி எண்ணை’க்கு ஒரு மவுசு உண்டு.

ஒரு விபரக் குறிப்பு என்ன சொல்லிற்று தெரியுமா?

உலகத்தில் உற்பத்தியாகும் சூரிய காந்தி விதைகளிலிருந்து, நமது சென்னையிலுள்ள அயனவரம் பகுதிக்குக் கூட எண்ணையை உற்பத்தி செய்து கொடுக்க முடியாது! என்பதுதான்.

அதே ஃபார்முலா இங்கும் பொருந்துந்தானே!

உணவுத்துறை விஞ்ஞானிகள் உரிய விளக்கம் அளித்தால்தான் நம் சந்தேகம் தீரும்!

ஏழு மலையான்தான் இதற்கொரு முடிவு ஏற்பட அருள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com