கல்கி

இசையரசி எம். எஸ். அவர்களுக்கு கவியரசி சரோஜினி நாயுடு வாழ்த்து... எங்கே? எப்போ? என்ன சொன்னார் தெரியுமா?

செப்டம்பர் 16 எம்.எஸ். சுப்புலட்சுமி பிறந்தநாள்!

கல்கி டெஸ்க்

இன்று செப்டம்பர் 16 கல்கி குழும நிறுவனருள் ஒருவரான எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் பிறந்தநாள். ஹிந்தி மீரா திரைப்பட வெளியீடு சமயம் கவிக்குயில் சரோஜினி, இசைக்குயில் எம். எஸ். இருவரும் சந்தித்த தருணம்…

கல்கி 01-06-1947 இதழில் வெளியான கட்டுரை இதோ…

ஸ்ரீ சதாசிவம் தம்பதியர் புது டில்லிக்கு வந்த காரணத்தைப் பற்றி நேயர்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன்.

சென்ற சில வருஷங்களாக ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் பெயரும் அவருடைய சங்கீதத்தின் சிறப்பும் வட இந்தியாவில் பிரபலமடைந்து வந்திருக்கின்றன. அவருடைய கச்சேரிகளைக் கேட்டு ஆனந்தித்த வட இந்திய நண்பர்கள் பலர் தமிழ் மீரா படத்தைப் பார்த்தார்கள். அதைக் கட்டாயம் ஹிந்தி பாஷையிலும் கொண்டு வர வேண்டும். என்று வற்புறுத்தினார்கள்.

"தமிழ்ப் படத்துக்கு ஹிந்தி உருவம் கொடுத்தால் அது வட இந்தியாவில் வெற்றி பெற முடியுமா?" என்பது பற்றி ஸ்ரீ டி. சதாசிவம் பெரிதும் யோசனை செய்து தயங்கினார். கடைசியில் பல வட இந்திய நண்பர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்தே விடுவது என்று தீர்மானித்தார். ஆறு மாத காலம் பெரு முயற்சி செய்து தமிழ் மீரா படத்தின் பாடல்களையும் சம்பாஷணைகளையும் ஹிந்தி பாஷையாக்கும் பணியைப் பூர்த்தி செய்தார்.

ஹிந்தி மீரா படத்தில், குமாரி ராதாவும் ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மியும் ஹிந்தி பாஷையை நன்றாகப் பயின்று தங்களுடைய பகுதிக்கு உரிய பேச்சுக்களையும் பாட்டுக்களையும் தாங்களே பேசிப் பாடியிருக்கிறார்கள். வட இந்தியர்கள் வியக்கும்படியாக ஹிந்தி பாஷையைத் தெளிவாகவும் அழகாகவும் கையாண்டிருக்கிறார்கள்.

ஹிந்தி மீராவையும் ஸ்ரீமதி எம்.எஸ்.ஸையும் வட இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் கைங்கரியத்தைக் கவியரசி சரோஜினி செய்வதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். ஏற்கெனவே ஸ்ரீமதி எம்.எஸ்.ஸின் வீட்டுக்கு வந்து அவரது கானத்தைக் கேட்டு மனமகிழ்ந்து பாராட்டியவர் ஸ்ரீமதி சரோஜினி என்பதை நேயர்கள் அறிவார்கள். எனவே ஹிந்தி மீரா படத்தின் ஆரம்பத்தில் வெள்ளித் திரையிலேயே தோன்றி, மீரா படத்தைப் பற்றித் தமது அபிப்பிராயத்தைத் தெரிவிக்கக் கவியரசி இசைந்தார். அவரைப் படம் எடுப்பதற்கும் அவருடைய முகவுரையை ஒலிப்பதிவு செய்வதற்குந்தான் ஸ்ரீ சதாசிவம் தம்பதியர் புது டில்லிக்கு வந்திருந்தார்கள். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கவியரசி சரோஜினி, லாலா ஸ்ரீராம் வீட்டில் எம்.எஸ். கச்சேரியை நடத்த ஏற்பாடு செய்தார்.

ஸ்ரீ சதாசிவம் தம்பதியர் புது டில்லிக்கு வந்த காரியமும் வெற்றிகரமாகப் பூர்த்தியாயிற்று. முதலில் ஹிந்தி மீரா படத்தை ஸ்ரீமதி சரோஜினி பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்ரீமதி சரோஜினியுடன் ஸர்.டி விஜயராகவாச்சாரியார், ஸ்ரீ சந்தானம், லாலா ஸ்ரீராம். அவருடைய குடும்பத்தார், ஸ்ரீமதி ஜான் மத்தாய், ஸ்ரீமதி தேவதாஸ் காந்தி முதலிய சுமார் நூறு பேர் ஹிந்தி மீரா படத்தைப் பார்த்தார்கள். படம் முடிந்து கொட்டகையில் விளக்குப் போட்டபோது சபையின் பெரும்பாலோருடைய கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது.

ஸர். டி. விஜயராகவாச்சாரியார் ஸ்ரீமதி சரோஜினியைப் பார்த்து ''இந்தியாவின் கோகிலம் என்னும் பட்டத்தை இனி நீங்கள் விட்டுக் கொடுத்து விட வேண்டியதுதான்" என்றார். ஸ்ரீமதி சரோஜினியோ தமது பிராயத்தைக் கூட மறந்து, மானைப் போல துள்ளி வந்து,  ஸ்ரீமதி சுப்புலக்ஷ்மியை அன்புடன் கட்டிக் கொண்டு ஆசி கூறினார்.

"படம் அபாரம்; கலையின் சிகரம்! இவ்வளவு உயர்வாயிருக்கும் என்று நான்கூட எதிர்பார்க்கவில்லை" என்றார். இன்னும் "இந்தப் படத்தை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது. நூறு தடவை வேண்டுமானாலும் நான் பார்க்கத் தயார்" என்றார். மேலும் "பாட்டு ஒரு பக்கம் இருக்கட்டும். உங்கள் சங்கீதத்தின் உயர்வுதான் தெரிந்த விஷயமாயிற்றே? இவ்வளவு நன்றாக எப்படி நடித்தீர்கள்? இல்லை நடிப்பு என்றே சொல்லக் கூடாது. மீராவின் வாழ்க்கையை அப்படியே தத்ரூபமாய்ப் பார்ப்பது போல் அல்லவா இருக்கிறது?'' என்று வியந்தார்.

குழந்தை ராதாவின் கன்னத்தில் தட்டி, "இப்படியும் ஒரு குழந்தை உண்டா?" என்று பாராட்டினார்.

படம் பார்த்தவர்களில் மற்றவர்கள் எல்லாரும், கதையில் ஒவ்வொரு கட்டமாக எடுத்துச் சொல்லிச் சொல்லி வியந்தார்கள்.

மறுநாள் ஸ்ரீமதி சரோஜினியின் பூர்வாங்கப் பிரசங்கத்தை ஒலிப்பதிவு செய்து படமும் எடுக்கப்பட்டது. கவியரசி இதற்காக முன்னால் எழுதித் தயார்
செய்து கொண்டு வந்து பேசவில்லை. அந்தச் சமயம் தன் மனத்தில் தோன்றியதையே பேசினார். அவருடைய ஆங்கிலப் பேச்சின் மொழி பெயர்ப்பு வருமாறு:

"தென்னிந்தியாவின் சுப்புலக்ஷ்மியை வட இந்தியாவின் மக்களுக்கு அறிமுகப்படுத்த முன் வந்திருக்கிறேன். அவருடைய தமிழ் மீரா படத்தை
வட இந்தியாவுக்காக ஹிந்தி பாஷையில்ஆக்கி, வட இந்தியாவுக்கு அவர் அளித்திருக்கிறார். வட இந்தியாவுக்கு மீராவிடம் விசேஷ உரிமை உண்டு என்றாலும், மீரா உலகத்துக்கெல்லாமே சொந்தந்தான். எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியைப் பற்றி வட இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகத்துக்கே எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். ஆகையினாலேதான் ஆங்கிலத்தில் பேசுகிறேன்.

''இந்தியாவின் சின்னஞ்சிறு குழந்தைகூட சுப்புலக்ஷ்மியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கும். அவருடைய குரல் இனிமையைப் பற்றியும், அவருடைய தர்ம கைங்கரியங்களின் சிறப்பைப் பற்றியும் அனைவரும் அறிந்திருப்பார்கள். ஆயினும் வட இந்திய மக்கள் அவரை இன்னமும் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவின் தலைசிறந்த கலைவாணிகளில் ஒருவர் சுப்புலக்ஷ்மி என்பதை உணர்ந்து, அன்புடன் போற்றிக் கௌரவிக்க வேண்டும். மீராவின் கதை இந்தியாவின் கதையாகும்; இந்தியாவின் பக்தி மகிமை, ஆத்ம சமர்ப்பணத்தின் பெருமை இவற்றின் கதையாகும். மன்னர் குலத்திலுதித்த கவியரசி மீராவுக்கு உலக சரித்திரத்தில் உவமை சொல்லக் கூடியவர் வேறு யாரும் இல்லை. தெரிஸா, ஸிஸிலியா முதலிய கிறிஸ்துவ பக்த சிரோமணிகள் ஏசு கிறிஸ்துவின் பூரண அருளைப் பெற்றவர்கள். ஆனால் மீராவோ தான் பிரேமை கொண்ட கண்ணனோடு இரண்டறக் கலந்து ஐக்கியமாகி விட்டவள். சுப்புலக்ஷ்மி இந்தப் படத்தில் மீராவாக நடித்திருக்கிறார் என்பது அவ்வளவு பொருத்தமில்லை. மீரா கீதங்களை அவர் பாடும்போது, மீராவே புத்துயிர் பெற்று வந்து நம் முன்னால் பாடுகிறார் என்றே நம்பத் தோன்றுகிறது. சுப்புலக்ஷ்மியின் அற்புதமான கானத்தைக் கேட்பவர்கள் யாரானாலும், இந்தத் தலைசிறந்த கலைவாணியின் உணர்ச்சியூட்டும் முகபாவங்களைப் பார்ப்பவர் யாரானாலும், அவர்கள் தங்கள் உள்ளத்தைப் பறி கொடுத்து மெய்மறந்து விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. சுப்புலக்ஷ்மி மீராவாக நடிக்கிறார் என்ற எண்ணமே யாருக்கும் தோன்றாது. அவரே மீரா என்றுதான் எண்ணத் தோன்றும்.

"இந்த காலத்து பாரத சந்ததியிலே இத்தகைய இணையில்லாத கலைவாணி தோன்றியிருப்பது பற்றி நீங்கள் ஒவ்வொருவரும் பெருமை கொள்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை."

கவியரசி சரோஜினி இப்படிப்பட்ட இணையில்லாத பாராட்டு மொழிகளை ஆங்கில பாஷையில் கவிதா ரஸத்துடன் அள்ளிக் கொட்டியிருக்கிறார். ஹிந்தி மீரா படத்தைப் பார்ப்பவர்கள் கவியரசியையும் திரையில் பார்க்கலாம்; அவருடைய இனிய சொற் பிரவாகத்தைக் கேட்கலாம்.

இத்தனை நாளும் சங்கீதம் முதலிய கலைத் துறைகளில் வட இந்தியாவில் பிரபலமடைந்த தென்னிந்தியர்கள் அதிகம் பேரில்லை. இப்போது ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி தென்னிந்தியாவின் கலைச் சிறப்பை வட இந்தியாவில் நிலை நாட்டிக்கொண்டு வருகிறார். ஹிந்தி மீராவின் மூலமாக தென்னிந்தியாவின் கலைச் சிறப்பு வட இந்தியாவில் என்றுமில்லாத புகழை அடையும் என்று எதிர்பார்க்கலாம்.

படங்கள் நன்றி; கல்கி கேலரி

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT