Artificial Intelligence 
கல்கி

பட்டணத்தில் பூதம் திரைப்படத்தின் ஜீ பூம்பா... செயற்கை நுண்ணறிவின் யதார்த்தம்!

பிரபு சங்கர்

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் என்பது என்ன?

ஒரு பத்திரிகையாளரோ அல்லது எழுத்தாளரோ ஒரு சம்பவத்தை நேரில் பார்க்கிறார். அது, பொதுக்கூட்டம், விபத்து, விளையாட்டு, கலைப் படைப்பு, ஆன்மிக அல்லது அரசியல் ஊர்வலம் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த சம்பவத்தைப் பார்த்தது பார்த்தபடி எழுதுவார் பத்திரிகையாளர். பார்த்ததோடு, சுற்றுச் சூழல் வர்ணனை, சம்பந்தப்பட்ட நபர்களின் உளவியல், தன் ஊகம் என்று கூடுதலாக எழுதுவார் எழுத்தாளர். 

இப்போது செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் வந்து விட்டது. இது என்ன செய்கிறது? 

குறிப்பிட்ட பத்திரிகையாளரோ, எழுத்தாளரோ சம்பவ இடத்திற்குப் போகவே வேண்டாம். அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகக் கேள்விப்பட்டால், அவர் உடனே செ.நு.வை அணுகலாம். இன்ன தேதியில், இன்ன நேரத்தில், இன்ன இடத்தில் இன்ன சம்பவம் நடந்திருக்கிறது. இதை விவரித்து ஆயிரம் சொற்களுக்குள் ஒரு கட்டுரை உருவாக்கித் தா என்று கேட்டுக் கொண்டால் போதும், ஒருசில விநாடிகளில் அந்தக் கட்டுரை முழுமையாக கணினித் திரையில் தோன்றுகிறது. அவ்வளவுதான் அதை அப்படியே பத்திரிகைக்கு அனுப்பிவிட வேண்டியதுதான். புகைப்படங்களும் கிடைக்கும்! அத்தனை விஷயங்களையும் ஒரு நுணுக்கமும் விட்டுப் போகாமல் தனக்குள் சேகரித்து வைத்திருக்கிறதே, அங்கேதான் செ.நு.வின் தொழில் நுட்பத் திறன் அமைந்திருக்கிறது.

சரி, கட்டுரை வெகு நீளமாக இருக்கிறதா, முக்கியமான விஷயங்களை மட்டும் 300 வார்த்தைகளுக்குள் தா என்று கேட்டுக் கொண்டால் அப்படியே கிடைக்கிறது! பத்திரிகையாளர் கட்டுரை (Article) என்று கேட்டால் செய்திப் பத்திரிகை பாணியில் வரும்; அதே கதை (Story) என்று எழுத்தாளர் கேட்டால், கதைப் போக்கான வர்ணனைகளுடன் கிடைக்கும். 

ஒரு நிகழ்ச்சியை, Story என்று கேட்டுப் பெறுபவர், ‘இதைக் கவிதையாக்கு‘ என்று கேட்டுக் கொண்டால், அதே சம்பவம் கவிதையாக வந்து விழுகிறது. எத்தனை வரிகள், ஆசிரியப்பாவா அல்லது வேறு இலக்கண மரபா என்று தெரிவித்துவிட்டலும் போதும், அந்தத் தேவைக்கேற்ற கவிதை ரெடி!

இந்த ரீதியில் போனால், தட்டச்சு செய்பவர், பக்க வடிவமைப்பவர், ஓவியர், புகைப்படக்காரர், நிருபர், எழுத்தாளர், பிழை திருத்துபவர் என்று யாருமே இல்லாமல் ஒருவரே (ஆசிரியர்?) ஒரு முழு பத்திரிகையையும் கொண்டு வந்துவிட முடியும் போலிருக்கிறது! 

இவ்வளவு ஏன், ஒரு காட்சியை விவரிக்கிறீர்கள். ஒரு பையன்  பூனையைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறான். அவன் காலடியில் இன்னொரு பூனை. எதிரே அவனுடைய அம்மா அவனை கண்டிக்கும் பாவனையில் வலது ஆள்காட்டி விரலை நீட்டி பேசுகிறாள். பையன் அரைக்கைச் சட்டை, நிஜார் போட்டிருக்கிறான். தாயார் புடவை கட்டியிருக்கிறாள். இருவரும் தமிழர்கள் – என்று ஒலிப்பதிவு செய்யுங்கள், அப்படியே அச்சு அசலாக நீங்கள் எதிர்பார்த்த ஓவியம் உங்கள் முன் தோன்றும்! நீங்கள் விரும்பினால் வண்ண ஓவியமாகவும் மிளிரும். ஒரு சின்ன வேலை - சட்டை, நிஜார், புடவை, ரவிக்கை எல்லாம் தனித்தனியே என்ன வண்ணம், புடவையில் புட்டா உண்டா என்றெல்லாம் கூடுதல் குறிப்பு கொடுக்க வேண்டும், அவ்வளவுதான். இதெல்லாம் கேட்ட ஒருசில விநாடிகளில்!

பத்திரிகை இருக்கட்டும், இப்போது நடக்கும் கூத்து இது - பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் ஒரு தலைப்பு கொடுத்து கட்டுரை எழுதி வருமாறு வீட்டுப் பாடம் கொடுத்தால், மாணவர்கள் CHATGPT என்ற பொறியின் உதவியை நாடலாம். அது கட்டுரையைத் தந்துவிடும். அதை அவர்கள் மறுநாள் ஆசிரியரிடம் சமர்ப்பிக்கலாம்! இந்த உத்தியைப் பயன்படுத்திக் கொள்ளும் பல மாணவர்களின் கட்டுரைகள் எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்பது இன்னொரு வேதனை! அதாவது மாணவனின் சுய சிந்தனை, கற்பனை வளம் எல்லாம் வேஸ்ட்! ஏற்கெனவே தொலைக்காட்சிகளால் இந்த நல்ல பண்புகள் சிதைந்து கொண்டிருக்கின்றன, இப்போது இந்தக் கொடுமை வேறு! 

இதற்கு யாரும் காபிரைட் உரிமை கோர முடியாது என்பதால் அசல் பரிதாபமாக நிற்க, நகல் ஆரவாரம் செய்கிறது! தர்மத்தின் வாழ்வதனை, புதுப்புது உத்திகளால் சூது கவ்விக் கொண்டிருக்கிறது! 

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வெளியிடப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். சுமார் 300 பக்கங்கள்வரை போகக்கூடிய அந்த விரிவான அறிக்கையை அதன் முக்கியமான அம்சங்கள் விட்டுப் போகாமல் முப்பதே பக்கங்களில் செ.நு. சுருக்கித் தந்து விடுகிறது. ஓவிய நுணுக்கமாக, ஒரு வட்டத்துக்குள் பல துறைகளின் வருமான சதவிகித அளவீடு, ஒரு கட்டத்திற்குள் முந்தைய, இப்போதைய நிதிநிலை அம்சங்களின் ஒப்பீடு, நிழல் உருவங்களாய் இந்த அறிக்கையால் பயன் பெறும் பயனாளர்கள், தொழில், விவசாயம், கல்வி, மருத்துவம் என்று அனைத்துத் துறைகளையும் சுட்டிக் காட்டும் குறியீடுகள்…. எல்லாமே சில விநாடிகளுக்குள்! ஆனால் இத்தகைய பலன்கள் ஒரு பிழையுமின்றி கிட்ட வேண்டும் என்றால், செ.நு. விடம் மிகப் பொருத்தமான, சரியான, துல்லியமான கேள்விகளைக் கேட்கவேண்டும். அந்தத் திறமை மனிதரிடம்தான் இருக்கிறது! 

பட்டணத்தில் பூதம் திரைப்படத்தின் ஜீ பூம்பா காட்சிகள் கேலிக்குரியன அல்ல, இன்றைய செ.நு.வைப் பொருத்தவரை அதுதான் யதார்த்தம்!

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT