கலைஞர் கருணாநிதியுடன் கல்கி ராஜேந்திரன் 
கல்கி

கலைஞர் 100 - கல்கியும் கலைஞரும்!

கலைஞரும் கல்கியும்!

கி.ராஜேந்திரன்

மரர் கல்கியின் எழுத்தாற்றல் மீதும், பாரம்பரியம் மிகுந்த பத்திரிகை என்ற முறையில் கல்கி மீதும் பெரும்  மதிப்பும் மரியாதையும் கொண்டவர் கலைஞர் கருணாநிதி. அவர் முதலமைச்சராக இருந்தபோதும் சரி, எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோதும் சரி அவரது அரசியல் செயல்பாடுகள் குறித்து கல்கி பத்திரிகை தட்டிக் கொடுத்ததும் உண்டு, தட்டிக் கேட்டதும் உண்டு.

அமரர் கல்கி நூற்றாண்டு விழா தருணத்தில் அவரது படைப்புகளை தேச உடமையாக்கி, அமரர் கல்கி மீதான தனது மரியாதையை வெளிப்படுத்தியவர் கலைஞர். நூற்றாண்டு நிறைவு விழாவில்  அரசியல் ரீதியாக எதிரெதிர் அணியில் இருந்த போதிலும் தலைவர் மூப்பனாருடன், ஒரே மேடையில் இணைந்து பங்கேற்று கௌரவித்தவர் கலைஞர்.

அமரர் கல்கியின் மகன் என்ற முறையிலும், கல்கி குழுமத்தின் நிர்வாக இயக்குநர், மூத்த பத்திரிகையாளர் என்ற முறையிலும் கல்கி ராஜேந்திரன் மீது அன்பும்,  நட்பும் பாராட்டியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி.

கலைஞரின் நூற்றாண்டு விழாவினை ஒட்டி, கல்கி ராஜேந்திரன் எழுதியுள்ள ’கல்கியும் கலைஞரும்’ எனும் சிறப்புக் கட்டுரை உங்கள் பார்வைக்கு...

கல்கி குழும நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன்

லைஞர் மு. கருணாநிதியின் பன்முக ஆற்றல்கள் பற்றி பல அறிஞர்கள் அரிய கருத்துகளை வெளியிடக்கூடும். நான் இங்கே பதிவு செய்ய நினைப்பது, ‘கல்கி’ அவர்களின் மகன் மற்றும் பத்திரிகையாளன் என்ற முறையில் அவருடன் நான் தொடர்பு கொள்ள நேர்ந்தபோது நிகழ்ந்த உரையாடல்கள், கிடைத்த அனுபவங்கள் மட்டுமே. இவற்றின் மூலம் கலைஞரிடம் அமைந்திருந்த சில உன்னத குணநலன்களை நாம் அறிந்துகொண்டு பயன் பெறலாம்.

இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சென்னை மாநகர மேயராக இருந்தபோது பத்திரிகையாளன் என்ற முறையில் அவரை நான் ரிப்பன் மாளிகையில் சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் கூறிய ஒரு விஷயம் இன்றைக்கும் பசுமையாக என் நினைவில் உள்ளது. அவர் சொன்னார்:

“‘கல்கி’ அவர்களிடம் என்ன அப்படி ஒரு மந்திரசக்தி இருந்ததோ தெரியவில்லை; இங்கிருந்து காரில் காஞ்சிபுரம் சென்றடையும்வரை அவருடைய எழுத்தாற்றல் பற்றி, குறிப்பாக ‘சிவகாமியின் சபதம்’ பற்றியே அப்பா பேசிக்கொண்டிருந்தார்!”

பல அம்சங்களில் ‘கல்கி’ அவர்களுக்கும் தி.மு.க. தலைவர்களுக்கும் இடையில் கருத்து மாறுபாடுகள் உண்டு. ஆயினும் தமிழ்ப் பற்றிலேயும் கலை உணர்விலேயும் ஒன்றுபட்டிருந்தார்கள். இதனால்தான் அறிஞர் அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும் ‘கல்கி’யின் பாராட்டுக்கு உள்ளானார்கள். தி.மு.க. தலைவர்கள் பலரும் ‘கல்கி’யை போற்றியதற்கும் இதுவே அடிப்படை.

ல்கி பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பு ஏற்ற பிறகு கலைஞரை பலமுறை பேட்டி காண அவரது கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்றிருக்கிறேன். பேட்டிக்கான அனுமதி கோரி, கல்கி நிருபராக விளங்கி வந்த பிரியன், திரு. சண்முகநாதனைத் தொடர்புகொண்டு பேசினார். சண்முகநாதனும் கலைஞரை கலந்தாலோசித்த பிறகு பிரியனிடம் தேதி, நேரம் குறிப்பிட்டுக் கூறிய பின், “ஆசிரியர் வருவாரில்லையா?” என்று ஒரு கொக்கி போட்டிருக்கிறார். “கண்டிப்பாக வருவார்” என்று பிரியன் என் அனுமதியின்றியே சொல்லிவிட்டு, பிறகு என்னிடம் வந்து, “நீங்களே வரணும்னு கலைஞர் விரும்புவதாகத் தெரிகிறது, ஸார்!” என்றார். ஒரு கெளரவப் பிரச்னையை வெகுநயமாகவும் எளிதாகவும் கலைஞர் உணர்த்திவிட்டார் என்பதைப் புரிந்துகொண்டேன்.

அவ்வாறே பிரியனும், புகைப்படக் கலைஞர் யோகாவும் நானும் கலைஞரைக் காணச் சென்றோம். யோகா புகைப்படக் கலையில் நிபுணர். அவர் படம் பிடிப்பதே தெரியாது. சற்றும் அலட்டிக்கொள்ள மாட்டார். பிறருக்கு சிறிதும் தொந்தரவு இராது. ஆனால் அவர் எடுக்கும் படங்கள் உணர்ச்சிகளை, முக பாவங்களில் தெளிவாக வெளிப்படுத்தும். இதனால் கலைஞருக்கு அவரிடம் ஒரு பற்றுதல் இருந்தது. மாடி ஏறி, கலைஞரின் காரியாலய அறைக்குள் நாங்கள் சென்ற சமயம் அவர் எழுந்து நின்று எங்களை கரம் கூப்பி வரவேற்றார். நான் பரபரப்புடன், “நாங்கள் வயதிலும் அனுபவத்திலும் குறைந்தவர்கள்; எதற்கு எழுந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

“இது உனக்காக இல்லை தம்பி! இது நீ வகிக்கும் ஒரு பதவிக்கு நான் தரும் மரியாதை” என்றார்; கலைஞர். நான் சற்றுநேரம் திகைத்துப் போனேன். எதையும் எவ்வளவு துல்லியமாக எடை போடுகிறார்; பண்பாடு கருதி செயல்படுகிறார் என்று வியந்தேன்.

பேட்டியில் அன்று பேசப்பட்ட விஷயங்கள் ஒருபுறமிருக்க, அரசியலில் மாறுபட்ட கருத்துக்களை உள்ளடக்கிய கேள்விகளைக் கேட்டால் அவர் சிறிதும் கோபம் அடைவதில்லை, மாறாக வரவேற்கவே செய்தார் என்பது உறுதியாயிற்று. அவற்றுக்கு உரிய பதில்களும் உடனே கிடைக்கும். இந்த ஜனநாயகப் பண்பு என்னை மிகவும் கவர்ந்தது.

ற்றொரு தருணத்தில் பேச்சினிடையே ஒரு தேதியைக் கலைஞர் குறிப்பிட நேர்ந்தது. அந்தத் தேதியில் விநாயக சதுர்த்தி – விடுமுறை தினம் என்பது நினைவுக்கு வர, நான் சற்றும் யோசிக்காமல் “அன்று விநாயக சதுர்த்தி அல்லவா?” என்று கேட்டுவிட்டேன்.

’கல்கி’ விநாயகர்

“ஆமாம், எங்களுக்கு விநாயகரைக் கும்பிடுவது பிடிக்காது; ஆனால் கொழுக்கட்டை பிடிக்கும்” என்றார் கலைஞர் இலேசாக சிரித்தபடி. ஆனால் எங்களுடைய சிரிப்பொலி அறையை நிறைத்தது. “இந்த பதிலைக் கேட்டு “கல்கி விநாயகரே” சிரித்து மகிழ்ந்திருப்பார்” என்றேன். தோப்புக்கரணம் போடச் சொல்லி சிரித்து மகிழ்ந்தவரல்லவா நகைச்சுவை ரசிகரான பிள்ளையார்.

பிரிதொரு சமயம் கல்கி தீபாவளி மலருக்கு கதையோ கட்டுரையோ எழுதித் தருமாறு அன்றைய முதல்வர் கலைஞரை அணுகி கேட்டுக்கொண்டேன், “நாங்கள் தீபாவளி கொண்டாடுவதில்லையே, அதனால் உங்கள் மலருக்கு எழுத முடியாதே” என்றார்.

ஏமாற்றத்துடன் திரும்பிய நான், அடுத்து தொழில் மலர் வெளியிட திட்டமிட்டபோது, கலைஞரிடம் சென்று கட்டுரை கேட்டேன். அவர் தமிழகத்தின் தொழில் வளம் குறித்து அன்று எழுதி மலரில் பிரசுரமான கட்டுரை இன்றைக்கும் இம்மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவக்கூடும். இவ்வகையில் கலைஞரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத்தான் இன்றைய முதல்வர் ஸ்டாலின் மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் எனலாம்.

முதல்வர் கலைஞர் கருணாநிதியை கோட்டையில் அவர் காரியாலயத்தில் சந்திக்க நேர்ந்தபோது அவருடைய மேஜையில் டெலிஃபோன் மற்றும் பேனா பென்சில் போன்றவை இருந்ததேயொழிய ஒரு ஃபைலைக் கூடக் காணோம்!

“துடைத்து விட்டாற்போல் காண்கிறதே, மேஜை! கோப்புகள் குவிந்திருக்கும் என்றல்லவா நினைத்தேன்?” என்றேன். சற்று துணிச்சலான கருத்துதான்.

கலைஞர் சற்றும் இதனால் பாதிக்கப்படாமல் பதிலளித்தார்: “நாங்கள் கோப்புகள் வரக் காத்திருப்பதில்லை; கோப்புகளை துரத்திக்கொண்டு போவோம்!”

‘நாங்கள்’ என்ற சொல் அமைச்சர்களையும் உள்ளடக்கியது என்பதும் ‘துரத்திச் செல்வோம்’ என்றது அதிகாரிகள், செயலாளர்களை சுறுசுறுப்பாக இயங்க வைப்பது என்றும் புரிந்துகொண்டேன்.

மரர் கல்கி அவர்களின் நூற்றாண்டு நெருங்கிய வேளையில் ஒருநாள் காலை பத்து மணி அளவில் எனக்கு ஃபோன் வந்தது. ரிஸீவரை எடுத்ததும் மறு தரப்பில், பேசுவது யார் என்பதை உறுதி செய்துகொண்டது ஒரு குரல். பின்னர், “முதல்வர் பேசணும் என்கிறார் ஒரு நிமிஷம்...” என்று குரல் அறிவித்தது. சில விநாடிகளில் கலைஞரின் குரல் ஒலித்தது:- “உன் அப்பாவின் படைப்புகள் அனைத்தையும் நாட்டுடைமையாக்க எண்ணியிருக்கிறோம். உன் சம்மதம் தேவை, சட்டசபையில் இன்றே அறிவிக்க எண்ணியிருக்கிறேன்” என்றார்.

அமரர் கல்கி நூற்றாண்டு விழா

“தாராளமாகச் செய்யுங்கள். அவரது நூற்றாண்டு சமயத்தில் இந்த அறிவிப்பு அவருக்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமையும்” என்றேன்.

“இதனால் உனக்கு ஏற்படக்கூடிய நஷ்டத்தை ஈடுசெய்ய இருபது லட்சம் தருவதாக இருக்கிறோம்” என்றார்.

“எவ்வளவு தொகை என்பது முக்கியமல்ல; அப்பாவுக்கு நீங்கள் அளிக்கும் பெரிய கெளரவம் இது” என்றேன்.

தமிழகத்தில் முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியப் படைப்புகள் கல்கி அவர்களுடையதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக ஒரு விழா நடைபெற, மேடையிலே காசோலையை என்னிடம் வழங்கினார், கலைஞர். அப்போது உறையிலிருந்து காசோலையை உறுவி எடுத்து படித்துப் பார்த்துவிட்டு, “முழுத்தொகையும் உன் பெயரிலேயே இருக்கு” என்று சொல்லிக் கொடுத்தார்.

அன்றிரவு இதுகுறித்து நான் சிந்தனையில் ஆழ்ந்தேன். ‘எதற்கு இப்படி சொன்னார்? என்று யோசித்தபோது, ஒரு கருத்து உதயமாயிற்று. அரசுடைமையானால் எல்லா பதிப்பகத்தாரும் ‘கல்கி’யின் நூல்களை வெளியிடுவார்கள். எனக்கு ராயல்டி தொகை நஷ்டமாவது மட்டுமல்ல, இது வரை ஏகபோகமாக ‘கல்கி’யின் நூல்களை பதிப்பித்துவந்த வானதி பதிப்பகத்துக்கும் நஷ்டம் அல்லவா?

மறுநாளே வானதி திருநாவுக்கரசு அவர்களை சந்தித்துப் பேசினேன். “எனக்குத் தரப்பட்ட தொகையை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் உங்களுக்கு நான் ஒதுக்கும் தொகை பதிப்பகக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு அத்துடன் கதை முடிந்துபோகும்.

“மாறாக, மொத்தத் தொகையையும் வங்கியில் வைப்புநிதியாக செலுத்தி, கிடைக்கும் வருவாயில் ஆண்டுதோறும் கணிசமான தொகைக்கு உங்களுக்கு ‘ஆர்டர்’ தருகிறேன். அதற்கேற்ப நீங்கள் கல்கியின் நூல்களை கல்லூரி மற்றும் இதர நூலகங்களுக்கு அனுப்பலாம். இதன்மூலம் நீங்கள் தொடர்ந்து கல்கியின் நூல்களை பதிப்பித்து வரலாம்; கல்கியின் எழுத்துக்களை பலர் இலவசமாக படித்து மகிழ வாய்ப்பு ஏற்படும்; கூடவே உங்களுக்கும் கணிசமான வருவாய் கிடைத்து வரும்” என்றேன்.

திருநாவுக்கரசு மகிழ்ச்சியுடன் இந்த யோசனையை ஏற்றார். அதன்படியே இன்றுவரை நடந்து வருகிறது. இன்றைய வானதி பதிப்பக உரிமையாளர் ராமநாதனும் ஒத்துழைத்து வருகிறார். இந்த நல்ல திட்டத்துக்கு நானும் ராமநாதனும் மட்டுமன்றி கல்கியின் புத்தகங்களை விலை கொடுத்து வாங்காமல்  நூலகங்களில் படித்துவரும் வாசகர்களும்கூட கலைஞர் கருணாநிதிக்குத்தான் நன்றி கூற வேண்டும்.

மரர் கல்கியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட நினைத்தபோது, நூற்றாண்டு விழா குழுவுக்குத் தலைமை வகிக்குமாறு கலைஞரைக் கேட்டுக்கொண்டேன். அவர் சற்று யோசித்துவிட்டு, “உன் அப்பா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு மூன்று முறை சிறை புகுந்த தியாகி. அதற்கு இசைவாக பொருத்தமான நபரை தலைவராகத் தேர்வு செய்ய வேண்டும். ஜி.கே.மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸுக்குத் தலைமை ஏற்று நடத்தி வருகிறார். அவரை அணுகி கேட்டுக்கொள்” என்றார்.

“இது உங்கள் யோசனை என்று சொல்லலாமா?” என்றேன்.

“தாராளமாக. நான் கேட்டுக் கொண்டதாகவே சொல்லு” என்றார் கலைஞர்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் அன்று த.மா.கா, தி.மு.க.வுக்கு எதிர்கட்சியாக விளங்கி வந்தது. தேர்தல் வேறு நெருங்கி வந்துகொண்டிருந்தது. ஆயினும் கலைஞர் சற்றும் தயங்காமல், ‘கல்கி’யின் நூற்றாண்டு என்பதையே கவனத்தில் கொண்டு எனக்கு யோசனை சொன்னார்.

“நிறைவு விழாவில் நீங்கள் பங்கேற்க வேண்டும்” என்றேன். “நிச்சயமாக” என்று உறுதி அளித்தார் கலைஞர்.

ஆண்டு முழுவதும் பல்வேறு நகரங்களில் கல்கி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. நிறைவு விழாவில் தேர்தல் பிரசாரம் முடிந்த கையோடு இரு கட்சித் தலைவர்களும் மேடையில் ஒரே சமயத்தில் தோன்றி, அரங்கம் கொள்ளாத அளவில் குழுமியிருந்த ‘கல்கி’ அன்பர்களை மகிழ்வித்தார்கள். விழாவின் சிறப்புக்கு இதைவிட வேறென்ன வேண்டும்!

நூற்றாண்டினையொட்டி சென்னையில் ‘கல்கி’ அவர்களுக்கு ஒரு சிலை நிறுவப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையையும் கலைஞரிடம் சமர்ப்பித்தேன்.

அவர் சொன்னார்: “பொது இடங்களில் அரசு அனுமதியுடன் சிலை நிறுவி விடலாம். ஆனால் அதை சுத்தமாகப் பராமரிப்பதும், சுற்றிலும் சிறிய மலர்த்தோட்டம் அமைத்து அழகுற நிர்வகிப்பதும் சிரமமான காரியம். தொடர்ந்து நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். அதைக் காட்டிலும் சென்னையில் ஒரு பிரதான வீதிக்கு “கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை” என்று பெயர் சூட்டி விடலாம். சிலையை நீ கல்கி காரியாலய வளாகத்துக்குள் நிறுவி பராமரித்து வருவது பொருத்தமாகவும் சுலப சாத்தியமாகவும் இருக்கும்” என்றார். அவ்வாறே நடந்தது.

“எல்.பி.ரோடு” என்றும் “பலகை வராவதி சாலை” என்றும் அழைக்கப்பட்டு வந்த சாலை, சாஸ்த்திரி நகர் தொடங்கி திருவான்மியூர் வரை, “கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை”யாக மாறியது. ‘கல்கி’ அவர்களால் பிரபலமடைந்த மாமல்லபுரம் காணச் செல்வோர் இந்தச் சாலை வழியேதான் செல்வார்கள் என்பதால் இதனைத் தேர்ந்தெடுத்தார் கலைஞர். அதைத் தொடர்ந்து செல்லும் கிழக்குக் கடற்கரை சாலை (ECR) தற்போது “முத்தமிழ் அறிஞர் கலைஞர் சாலை” என அறிவிக்கப்பட்டிருப்பதும் பொருத்தமானதே.

லைஞரை பலமுறை சந்தித்து அளவளாவும் பாக்கியம் பெற்ற பலருள் நானும் ஒருவன் என்பதால் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைகிறேன். இத்தகைய ஒரு சந்திப்பின் பிறகு நான் விடைபெறுகையில் கலைஞர், சண்முகநாதனுக்கு ஜாடை காட்ட, அவர் ஒரு புத்தகத்தை எடுத்துவந்து கலைஞரிடம் தந்தார். அதன் முதல் பக்கத்தில்,

கனிந்த அன்புடன்,

கல்கி இராஜேந்திரன்

அவர்களுக்கு,

என்று எழுதி கையெழுத்திட்டு எனக்கு அளித்தார், கலைஞர். 27.05.1998ல் தரப்பட்ட அந்த நூல் “திருக்குறள் – கலைஞர் உரை” என்பதாகும்.

அது, அவரைப் போலவே பல தருணங்களிலும் எனக்கு வழிகாட்டி வருகிறது.

“அற்ப மானிடனே, செத்துப் போ” -  பயனரை மோசமாகத் திட்டியதா Gemini AI?

என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் சமையல் எண்ணெய்கள்!

இந்த ரகசியம் மட்டும் தெரிஞ்சா இனி குளிர்ந்த நீரில்தான் குளிப்பீங்க! 

கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT