ராஜதானி ராஜப்பா, ஆபீஸில் நுழையும்போதே கையில் ஒரு கவருடன் வந்து என்னிடம் நீட்டினார்.
''பையனுக்கு கல்யாணமா?'' ஆர்வத்துடன் கேட்டேன்.
''என் பையனுக்கு இல்லை. தசரத சக்கரவர்த்தியின் பிள்ளை ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பு'' என்று ரா.ரா. கிசுகிசு குரலில் சொன்னார்.
''இது சாதாரண அழைப்பிதழ் இல்லிங்கோ! இது நண்பர்களை எதிரிகள் ஆக்குற, எதிரிகளை நண்பர்கள் ஆக்குற ஒரு அழைப்பிதழ் தெரியுமா? இந்த அழைப்பிதழ் கிடைச்சவங்க எல்லாம், ‘போகப்போறேன், போகமாட்டேன்’னு கருத்து சொல்லிட்டு இருக்க, அதனால தில்லியில் ஒரே குழப்பமாம்'' ரா.ரா. சொன்னார்.
“கோவில் கும்பாபிஷேகத்துல என்னங்க குழப்பம்?”
“ராமர் கோவில் கும்பாபிஷேகத்துலதான் அதிகாரபூர்வ பிரச்சாரத்தை பாஜக தொடங்குது. ‘ராமருக்கே கோவில் கட்டிட்டோம்’ என்கிற கோஷத்தை அந்தக் கட்சி தேர்தல்ல முன்வைத்தால் அது மக்கள்கிட்ட பெரிய தாக்கத்தை உண்டுபண்ணும்னு எதிர்க்கட்சிகள் நம்புது. குறிப்பா, அழைப்பிதழை கையில வச்சுக்கிட்டு, காங்கிரஸ் கட்சி என்ன செய்யறதுன்னு தெரியாம இருக்கு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சுரி மாதிரி, ‘நாங்க ராமர் கோவில் விழாவுல கலந்துக்க மாட்டோம்’னு சொன்னா, மக்கள் கோபத்துக்கு ஆளாவோம்னு பயம். கலந்துகிட்டா, தன்னோட மதச்சார்பற்ற இமேஜ் பாதிக்கப்படுமோனு இன்னொரு பக்கம் பயம். என்ன செய்யப்போறது காங்கிரஸ்னு மாநிலக் காட்சிகள் எல்லாம் கண்ணுல விளக்கெண்ணைய விட்டுக்கிட்டு பார்த்துக்கிட்டு இருக்கு” ரா.ரா. சொன்னார்.
''அது கிடக்கட்டும்... நிதியமைச்சர் நிர்மலா, ஸ்ரீவைகுண்டம் கோவிலுக்கு வந்து, ‘கோவில் மாடவீதிகள் எல்லாம் ஆய்பாடியாக இருக்கு. அதை ஆயர்பாடியாக மாத்துங்க’னு அதிகாரிகள்கிட்ட கண்டிப்பா பேசினாங்களாமே! நாட்டின் நிதியமைச்சருக்கு இதுதான் வேலையா?'' என்று நான் கேட்டதும், ரா.ரா. முகத்தில் குறும்பு சிரிப்பு.
''அம்மாவுக்கு பயங்கர ரைட் விட்டாராம் மோடி! நீங்களும், தமிழ்நாட்டு முதல் பெண்மணியும், பயங்கர தோஸ்த்தாமே? அமலாக்கம் குறித்து அங்க தகவல்கள் எல்லாம் போறதாமே'' என்று கேட்க, மிரண்டு போனாராம் நிதியம்மா.
''இந்த தடவை, கர்நாடகாவுல ராஜ்ய சபா சீட்டெல்லாம் எதிர்பார்க்காதீங்க. உங்க சொந்த மாநிலமான தமிழ்நாட்டுல நாடாளுமன்ற தேர்தல்ல நில்லுங்க. அங்கே நின்னு ஜெயிச்சு வாங்க''னு தலைமை சொல்லிட்டதாலதான் அவங்களோட ஸ்ரீவைகுண்டம் புறப்பாடு. அநேகமா அவங்க தென்சென்னை இல்லாட்டி தஞ்சாவூர்ல நிற்கலாம்னு தெரியுது'' ரா.ரா. சொன்னார்.
“தமிழ்நாட்டுல தேர்தல் களைகட்டுது போல இருக்கே” ஒரு ஓரமாக உட்கார்ந்து தனது மொபைலை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த, சீவர சிந்தாமணியைக் கேட்டேன்.
''ஆமா! விஜயகாந்த்தோட மரணத்தையும், அதனால அவருக்குக் கிடைச்ச அனுதாபத்தையும் பார்த்து, அண்ணாமலை தங்கள் கூட்டணியில் அதை சேர்த்துக்கணும்னு பார்க்கிறார். அதனாலதான், ‘விஜயகாந்த் உடலை ராஜாஜி ஹாலுல வைக்கணும்’னு கோரிக்கை விடுத்தார். அந்த இடத்துல, மரணம் அடைஞ்ச முதல்வர்களைத்தான் வைப்பாங்கன்னு தெரிஞ்சும், அந்தக் கோரிக்கையை விட்டாராம். தேமுதிகவை தங்களோட பக்கம் இழுக்கத்தான் இந்த கோரிக்கையாம்.
இந்த நிலையில, ராமதாஸ் சனிக்கிழமை ஸ்டாலினை சந்திச்சு, சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை விடுத்தாராம். அநேகமா, விடியல் பக்கம் சேர்ந்து பூபாள ராகம் பாடுவார்னு தெரியுது. ராமதாஸ் ஸ்டாலின் பக்கம் போறதால, எடப்பாடியும் திருமாவும், அன்றாடம் போன்ல பேசிட்டு இருக்காங்களாம்.
உங்களுக்குத் தெரியுமா? டிசம்பர் 24ம் தேதி தஞ்சாவூர்ல நியோவைஸ் என்கிற வால்நட்சத்திரம் தெரிஞ்சு இருக்கு. இதனால அரசியல் மாற்றங்கள் ஏற்படும்னு தமிழகத்துல பெரிய பேச்சு நிலவுது. தேர்தல் பின்னாடியே வர்றதால, எல்லா அரசியல்வாதிகளும் ரகசியமாக பரிகாரங்க செய்யறாங்களாம். விஜயகாந்த்தோட மரணம், திருநெல்வேலி, சென்னை மழை, மந்திரிகள் சிறை வசம், எல்லாத்துக்கும் வால் நட்சத்திரம்தான் காரணம்னு சொல்லிய ஜோதிடர்கள், ‘இதை செய்யுங்க, அதை செய்யுங்க’ன்னு அரசியல்வாதிகளை பயமுறுத்துறாங்களாம்'' சீவர சிந்தாமணி சொல்லிவிட்டு சிரித்தாள்.
“வேற ஏதாவது ரகசியம் இருக்கா?” என்று ரா.ரா.வை கேட்டேன்.
“எதிர்க்கட்சிகளில் இருந்து பல பெரிய தலைகளை வலை வீசி பாஜகவுக்கு இழுக்க, அமித்ஷா திட்டம் போட்டிருக்காராம். ‘எப்படியும் நாங்கதான் வரப்போறோம். மத்திய மந்திரி பதவி வேணும்னா, தேர்தலுக்கு முன்னாடியே வந்து துண்டு போட்டு வச்சுக்குங்க’னு சொல்றதால, பல எதிர்க்கட்சி தலைவருங்க கட்சி மாறலாமான்னு யோசிச்சுக்கிட்டு வராங்களாம். அப்படி சில பேரோட மனைவி, மகன்களுக்கு எல்லாம்கூட புத்தாண்டு பரிசு அனுப்பப்பட்டு இருக்காம்'' ரா.ரா. சொன்னார்.
'‘ஏன்! தமிழ்நாட்டுல மட்டும் என்ன வாழுதாம்! தேர்தலுக்கு முன்னாடி பல ஆச்சரியமான சம்பவங்கள் நடக்கப்போகுது. புதிய கட்சி எல்லாம் ஆரம்பிக்கப் போறாங்க. விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டதே, கட்சி ஆரம்பிக்கப்போற அவருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைதான்னு பேசிக்கிறாங்க'' சிந்தாமணி சொன்னாள்.
“சரி… சரி! நான் வேலைய ஆரம்பிக்கணும். டெல்லி தலைவர்களுக்கும், தமிழ்நாட்டு தலைவருங்களுக்கும், உங்களுக்கும் கல்கி சார்பாவும், என் சார்பாவும் புத்தாண்டு வாழ்த்துகளை சொல்லிடுங்க. முடிஞ்சா எதிர்க்கட்சி தலைவருங்களுக்கு அனுப்புற புத்தாண்டு பரிசை எனக்கும் அனுப்ப சொல்லுங்க'' என்று சொல்ல, ரா.ரா. ஏதோ முணுமுணுத்துக்கொண்டே போனார்.
''கஷ்டப்பட்டு ரகசியங்களை வாங்குற எனக்கு ஒண்ணும் பெயர மாட்டேங்குது. ஏசி ரூம்ல உட்கார்ந்துக்கிட்டு நோகாம பரிசை தட்டிக்கிட்டுப் போக பார்க்கிறார்!'' என்று சொன்னதாக, சிந்தாமணி வந்து அவரை போட்டுக்கொடுத்து விட்டுக் கிளம்பினாள்.