
லடாக்கில் மூன்றாம் நாள் சுற்றுலாவினைத் துவங்கும் முன்னால், சில புவியியல் குறிப்புகளைத் தெரிந்து கொள்வோம்.
Mountain Pass – கணவாய் என்பது பெரிய கடினமான மலைகளில் பயணம் செல்ல இயற்கையே அமைத்திருக்கும் வழி ஆகும். லடாக்குக்கே 'கணவாய்களின் பூமி' என்று தான் அடைமொழி கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்தனை தூரம் சென்றுவிட்டுக் கணவாய்களைப் பார்க்காமல் வருவதா..?
மூன்றாம் நாள் ஒரு சாகசப் பயணமாக இருக்கும். ஜெர்க்கின் வகையறாக்களை மூட்டை கட்டிக்கொண்டு லேவில் இருந்து வடக்கு நோக்கி இமயத்தில் பயணம் துவங்கவேண்டியது தான். சென்ற இரு தினங்களை விட 'நாம் இமயத்துக்கு வந்திருக்கிறோம்' என்ற feel இந்த மூன்றாம் நாள் பயணத்தில் தான் கிடைக்கும்.
லடாக் வந்து நான்கு நாட்கள் அகிவிட்டபடியால் உடல் ஓரளவுக்கு இந்த உயரத்துக்கும் காலநிலைக்கும் பிராணவாயு செறிவுக்கும் பழகியிருக்கும் என்ற நம்பிக்கையோடு நான்கு சக்கர மோட்டார் வாகனம் மூலம் பயணித்து, உலகத்தின் முதலாவது உயரமான இடத்தை நோக்கிப் போகலாமா..