கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, 2010ஆம் ஆண்டில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பிரம்மாண்டமான முறையில் கோயம்புத்தூரில் நடைபெற்றது. கோவை கொடிசியா வளாகத்தில் ஜூன் 23 முதல் ஜூன் 27 வரையிலான 5 நாட்கள் நடைபெற்ற அந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். இதற்கு முன்பு நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளுக்கு ஈடாகத் நடைபெற்ற இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன், தமிழ் இணைய மாநாடும் சேர்த்து நடத்தப்பட்டது.
மாநாட்டினை ஒட்டி, முதலமைச்சர் கலைஞர் “பிறாப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று ஒரு பாடலை எழுதினார். அதனை, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசையில், பல்வேறு பாடகர்கள், பாடகிகளும் பாட, கண்களுக்கு விருந்தாக இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் காட்சிப்படுத்தினார்.
செம்மொழி மாநாட்டினை ஒட்டி, 27.06.2010 கல்கி வார இதழ் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலராக வெளியானது. அதில், கலைஞரின் பாடலைப் படம் பிடித்த அனுபவங்களை கௌதம் வாசுதேவ மேனன் பகிர்ந்துகொண்டார்.
“யாரும் பணம் வாங்கவில்லை” என்ற தலைப்பில் வெளியான அந்தப் பேட்டி இதோ:
தாம் இசையமைத்த செம்மொழிப் பாடலை, கெளதம் வாசுதேவ மேனன்தான் படம்பிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ரஹ்மான், "தமிழை உலகளாவிய ஒரு விஷயமாக இந்தப் பாடலின் மூலம் எடுத்துக் கொண்டு போகவேண்டும்" என்றாராம். அரசு தரப்பிலிருந்து ஒருங்கிணைப்பு செய்த கனிமொழியோ "தமிழ் பாரம்பரியம்: பரிமளிக்க, மண்வாசனையோடு இருக்க வேண்டும்."என்றாராம். இரண்டையும் சமன் செய்து படம் பிடித்தது பெரிய சவால்தான் என்று கூறுகிறார் இயக்குனர் கௌதம்.
வி.ஜி.பி. கோல்டன் பீச்சில் கடலை ஒட்டி, "செம்மொழியான தமிழ் மொழியே என்ற மெகா சைஸ் எழுத்துக்களின் பின்னணியில், பிரம்மாண்டமான மேடையில், சீனியர் மோஸ்ட் டி.ம்.எஸ். பி. சுசிலா தொடங்கி ஷ்ருதி ஹாசன் வரை மொத்தம் 40 பாடகர், பாடகிகள் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள்.
இவர்களில் அருணா சாயிராம், சௌம்யா, டி.எம்.கிருஷ்ணா, பாம்பே ஜெயஸ்ரீ போன்ற கர்நாடக இசைக் கலைஞர்களும், உண்டு. யேசுதாசும், எஸ்.பி.பி.யும் வெளிநாட்டில் இருந்ததால் இதில் பங்கேற்க முடியவில்லை. மகாபலிபுரம் கடற்கரைக் கோவில் பின்னணியில் சின்னதாக ஒரு மேடை போட்டு, பரநாட்டியம் ஆடியிருப்பவர் ஸ்ரீநிதி சிதம்பரம்.
புதுமணத்தம்பதிக்கு ஆரத்தி எடுத்து அவர்கள் வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கும்போது. அவர்களுக்கு "நல்வரவு' வண்ணக்கோலம்: மனைவி ஆச்சரியமாய்ப் பார்க்க கணவன் வாணலியிலிருந்து தமிழ் எழுத்துகளின் வடிவில் முறுக்கு செய்வது, டைடல் பார்கில் முதல் நாள் வேலைக்குப் போனதும். இலேசான பயத்துடன் கம்ப்யூட்டரைத் தட்ட இன்டர்நெட், தமிழ், விக்கிபீடியா என்று அடுத்தடுத்து திரையில் தோன்ற ஆச்சரியப்படும் கிராமத்து யுவதி, கிராமத்துப் பெண், அப்பாவில் டிராக்டரை ஓட்டியடியே நிலத்தில் “ண” போடுவது, சுவரில் சித்திரம் வரைந்து முடித்து ஓவியர் ஸ்டைலாக "எழில்" என்று கையெழுத்திடுவது எனப் பாடல் நெடுக கெளதம் மேனனின் முத்திரைகள்.
“பண்டைய கல்வெட்டுகளில் உள்ள தமிழ் எழுத்துக்கள் முதல் இன்றைய கம்ப்யூட்டர் எழுத்துருக்கள் வரை விதம்விதமான தமிழ் எழுத்துக்களைப் பாடல் முழுவதிலுமாக பயன்படுத்தியிருக்கிறேன்.
பாடலுக்கு மதிப்பைக் கூட்ட கன்னியாகுமரியில் துவங்கி சென்னை வரை தமிழ்நாடு நெடுக ஹெலிகாப்டரில் இரண்டு நாட்கள் பயணம் செய்து. ஏராளமான ஏரியல் ஷாட்கள் எடுத்தேன். வானில் பறந்து ஏரியல் ஷாட் எடுக்க மத்திய அரசு அனுமதிப்பதில்லை. ஆனால், செம்மொழி மாநாட்டுக்காகச் சிறப்பு அனுமதி பெற்று, எடுத்த அத்தகைய ஷாட்களைப் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அனுப்பி, அவர்கள் அனுமதிக்குப் பிறகே அவை பயன்படுத்தப்பட்டன.
பாடலுக்காக முதல்வர் கஞைரைப் படம்பிடிக்க வேண்டும் என்றதும், அவர் உடனடியாக ஒப்புக்கொண்டதும், நான் கேட்டுக்கொண்டபடி கையெழுத்திடுவது போல, யோசிப்பது போல, படிப்பது போல எல்லாம் செய்து ஒத்துழைத்ததும் எனக்குக் கிடைத்த அரிய அனுபவம்" என்கிறார் கௌதம்.
இந்தப் பாடலுக்கு இசையமைத்ததற்காக ரஹ்மானோ, பாடியதற்காக பாடகர்களோ, படம்பிடித்ததற்காக கௌதம் மேனனே, யாருமே பணம் வாங்கிக் கொள்ளவில்லை என்பதுதான் விசேஷமான நெகிழ்ச்சி.
கல்கி 27.06.2010 இதழிலிருந்து
சந்திப்பு: எஸ். சந்திர மௌலி