கல்கி

குழந்தைக் கவிஞரைப் போற்றி வணங்குகிறது கல்கி குழுமம்

லக்ஷ்மி நடராஜன்

“அப்பா என்னை அழைத்துச் சென்றார்

அங்கு ஓரிடம்

அங்கிருந்த குயிலும் மயிலும்

ஆடித் திரிந்தன…

என்று தொடங்கும் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பாடலை என் குழந்தைகளுக்கு இசைக்கத் தொடங்கியதும் அவர்களின் கண்கள் மகிழ்ச்சியில் விரியும். கைகளும் கால்களும் தாளம் போடத் தொடங்கும். மழலைக் குரல்கள் என் குரலோடு சேர்ந்து குதூகலிக்கும். அடுத்தடுத்து வரிகளைப் பாடப் பாட உற்சாகம் மேலிடும். நானும் சிறு குழந்தையாகவே மாறி, கடைசியில்

“சென்ற அந்த இடம் உனக்குத் தெரியவில்லையா…?”

என்று அபிநயம் பிடித்துக் கொண்டே பாடிக் கேட்க, குழந்தைகளோ துள்ளிக் குதித்து, கைதட்டி

“மிருகக்காட்சி சாலைதானே வேறொன்றுமில்லை…

வேறொன்றுமில்லை…”

என்று கூக்குரலிட்டு சுற்றிச் சுற்றி ஓடி வந்து பாடி முடிப்பார்கள்.

ஆம்… அழ.வள்ளியப்பா தாத்தாவின் குழந்தைகளுக்கான பாடல்கள் ஒவ்வொன்றும் இத்தகைய சக்தி வாய்ந்தவை. குழந்தைகளையும் அவர்களோடு சேர்த்து பெரியோர் களையும் ஆனந்த உலகிற்கு அழைத்துச் செல்லும் மாயம் படைத்தவை. ஒவ்வொரு பாடலும் நல் விஷயங்களை எடுத்துச் சொல்லும். தகவல்கள் பல பகிரும். மகிழ்ச்சியும் ஊட்டும்.

அழ.வள்ளியப்பா அவர்கள் ‘குழந்தைக் கவிஞர்’ என்று பலராலும் அறியப்பட்டாலும், அவர் சிறந்த கதாசிரியரும் கூட. கல்கி குழுமம் வெளியிட்ட கோகுலம் (தமிழ்) பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியவரும் கூட.

அவரது நூற்றாண்டினை முன்னிட்டு (1922 – 2022) அவரது பிறந்த நாளான இன்று, அவரை வணங்கி போற்றும் விதமாக, ‘நினைவில் வாழும் குழந்தைக் கவிஞர்’ (நூற்றாண்டு சிறப்புப் புத்தக வெளியீடு) என்ற நூலிலிருந்து, கல்கி ராஜேந்திரன் எழுதிய கட்டுரையை இங்கே பிரசுரிக்கிறோம்.

 மோகனப் புன்னகை

- கல்கி ராஜேந்திரன்

பெரியவர்களுக்காக நிறைய பத்திரிகைகள் வருகின்றன. குழந்தைகளுக்காக ஒன்றிரண்டுக்கு மேல் இல்லையே. நீ ஆரோக்கியமான பத்திரிகையாக ஆரம்பித்து நடத்து” என்று கல்கி சதாசிவம் அவர்களிடம் அருளியவர் காஞ்சி பரமாச்சாரியார்.

அவர் ஆசியுடன் தொடங்கப்பட்ட பத்திரிகை கோகுலம். சில காரணங்களால் இடையில் ‘கல்கி’ பத்திரிகையுடன் சேர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஓராண்டு சென்று ‘கல்கி’ மறுபடியும் தொடங்கப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு கோகுலத்தையும் மறுபடி பிரசுரிப்பது என்று தீர்மானித்தோம். அதற்கு ஆசிரியராக யாரை நியமிக்கலாம் என்ற கேள்வி எழுந்தபோது, வள்ளியப்பா அவர்கள் பெயரைக் குறிப்பிட்டு இயக்குநர்களின் ஒப்புதலைப் பெற்றேன். அவர் அப்போதுதான் இந்திய வங்கியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். குழந்தைகளுக்காக நிறைய எழுதியவர் என்பதுடன் பத்திரிகை நடத்திய அனுபவமும் அவருக்கு இருந்தது.

அவர் பெயரை முன்மொழிந்து உறுதி பெற்று விட்டேனே தவிர, அவர் ஒப்புக் கொள்வாரா என்ற தயக்கம் எனக்கு இருந்தது. காரணம், அந்த காலகட்டத்தில் எங்கள் நிறுவனம் ஓராண்டு செயல்படாமலிருந்து நலிவுற்றிருந்தது. கணிசமான அளவில் அவருக்குச் சன்மானம் வழங்க முடியாத நிலை. ‘இருந்தாலும் கேட்டு விடுவது’ என்ற முடிவுடன் அவரது இல்லம் சென்றேன். அன்புடன் வரவேற்று, மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார்.

“குறைந்த ஊதியம்தான் தர முடியும்” என்று நான் தொடங்கியபோது, “கோகுலம் நல்ல பத்திரிகை, அதன் மறுமலர்ச்சிக்கு நான் உதவுவதே எனக்கு சன்மானம்தான்” என்று மனம் நிறைந்து சிரித்துக்கொண்டே கூறினார். நான் நெகிழ்ந்து போனேன்.

அன்றைய தினத்துக்குப் பிறகு இவருடைய மாறாத புன்னகையைச் சில ஆண்டுகளுக்குத் தொடர்ந்து சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்து வந்தது.

சதா சிரித்த முகமாக இருப்பதில் பல ரகம் உண்டு. வள்ளியப்பாவின் சிரிப்பு என்பதும் சீக்கிரமே எனக்குக் புரிந்து போயிற்று. காரியாலயத்தில் நாள் முழுவதும் கையெழுத்துப் பிரதிகளைக் படித்துத் திருத்தி, மெருகேற்றி அச்சுக்குத் தருவார். புரூப் பார்ப்பார். படங்களுக்கு ஏற்பாடு செய்து லே-அவுட் பண்ணுவதில் கவனம் செலுத்துவார். மாலை வீடு திரும்பி காலை வரும்போது கதை, கவிதை எழுதி எடுத்து வருவார். தனிமனிதராக பத்திரிகையின் எல்லாப் பொறுப்பு களையும் ஏற்று, அதனிடம் அன்பு செலுத்தி உருவாக்கினார். வெள்ளிக்கிழமை மாலைகளில் மட்டும் அவருக்கு மயிலை கற்பகாம்பாள் நினைவு வந்துவிடும். ஒரு பரபரப்புடன் காணப்படுவார். அவர் வீடு ஒருபக்கம், காரியாலயம் வேறு பக்கம், கபாலி கோயில் மூன்றாவது திசை. ஆயினும், வெள்ளி தவறாமல் கபாலி கற்பகாம்பாளைத் தரிசித்து விட்டுத்தான் வீடு திரும்புவார்.

உதவிக்கு என்று யாரும் இல்லாத நிலையிலும் ‘கோகுலம் சிறுவர் சங்கம்’ தொடங்கினார். வருகிற விண்ணப் பங்களுக்கு ஏற்ப, தாமே தமது கைப்பட உறுப்பினர் அட்டையில் விவரம் எழுதி, விலாசம் எழுதி கையெழுத்திட்டு அனுப்பினார். ஒவ்வொரு நாளும், நூறு, இருநூறு என்று விண்ணப்பங்கள் குவியும். அயராமல் வரிசை எண் கொடுத்து பதிவேட்டில் பதிவு செய்து உறுப்பினர் அட்டைகளும் அனுப்பி வைத்தார்.

“எதற்கு இந்த அவஸ்தை? தேவையற்ற வேலை!” என்று நான் நினைத்ததுண்டு. ஆனால், கோகுலம் சிறுவர் சங்கம் காரணமாக கோகுலமும், கோகுலம் காரணமாக கோகுலம் சிறுவர் சங்கமும் குழந்தைகளிடையே பிரபலமடைந்து, கோகுலத்தின் விற்பனை எண்ணிக்கை உயர்ந்தது.

இத்தகைய கடும் உழைப்புக்குப் பிரதியாக அவருக்குக் கிடைத்தது, குழந்தைகளுடன் தொடர்பு  வைத்துக் கொள்கிற, அவர்களுடைய மன ஆரோக்கியத்துக்கு உதவுகிற ஆத்ம திருப்திதான். நாங்கள் அன்று அவருக்கு அளித்த மாத ஊதியம் 500 ரூபாய் மட்டுமே.

வள்ளியப்பாவைப் பலரும் குழந்தை இலக்கிய கர்த்தாவாக, குறிப்பாக குழந்தைக் கவிஞராகப் பார்ப்பார்கள். நான் அவரைக் கடும் உழைப்பாளியாகவும் பார்த்தேன். வேலைச் சுமையை, மாறாத மோகனப் புன்னகையுடன் அவர் தாங்கியதைக் கண்டேன். அவரை முன் மாதிரியாகக் கொண்டு நாமும் கடும் உழைப்பை நாம் பணியாற்றும் நிறுவனத்துக்கு வழங்க இயலும், ஆனால், அந்த மோகனப் புன்னகைக்கு எங்கே போக?

***************************

(ஆசிரியர் அழ.வள்ளியப்பாவின் ஆசிகளோடு வரும் குழந்தைகள் தினத்தன்று (நவம்பர் 14, 2022) நமது கல்கி குழும இணையதளத்தில் குழந்தைகளுக்கான சிறப்புப் பகுதி ஒன்றை வெளியிட இருக்கிறோம் என்பதை இத்தருணத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், நம் ’கோகுலம்’ மற்றும்  ’GOKULAM’ களஞ்சிய இதழ்களையும் குழந்தைகள் படித்து மகிழ்ந்து பயன்பெற பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கூடிய விரைவில் ’கோகுலம்’ / ’GOKULAM’ டிஜிட்டல் நூலகம் தயாராகிவிடும். குழந்தைகளுக்கான கல்கி குழுமத்தின் இம்முயற்சிக்கு குழந்தைக் கவிஞரின் ஆசிகள் என்றும் இருக்கும் என்பது நிச்சயம்).

நாம் எதற்காகப் படைக்கப்பட்டோம்?

திருவிழாக்களில் கொடியேற்றம் மற்றும் வாகன பவனியின் தத்துவம் தெரியுமா?

வெற்றிக்கு உதவும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள கற்க வேண்டிய 7 பழக்கங்கள்!

அத்திப்பழம் வெஜிடேரியனா அல்லது நான்-வெஜிடேரியன் ஃபுரூட்டா?

ஆரோக்கியத்தை வாரி வழங்கும் வாழைப்பூ!