ஆர் சூடாமணி 
கல்கி

வெகுஜன இலக்கியப் படைப்பாளி ஆர். சூடாமணி!

ஆர். சூடாமணி - 13 செப்டம்பர் நினைவு தினம்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

மிழில் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ஆர் சூடாமணி வெகுஜன பத்திரிகைக்கு ஏற்ற கதைகள் நிறைய எழுதியுள்ளார். கல்கி, தினமணி கதிர், கலைமகள், சுதேசமித்திரன், கணையாழி, அமுதசுரபி என இவரது கதைகள் வராத பத்திரிகைகளே இல்லை எனலாம். 

சூடாமணி ராகவன் என்ற பெயரில் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இல்லஸ்ட்ரேடட் வீக்லி மற்றும் ஃபெமினா இதழ்களிலும் இவரது கதைகள் வந்துள்ளன.

இவருடைய குடும்பத்தை எழுத்தாளர் குடும்பம் என்றே சொல்லலாம். இவரது தாய் வழி பாட்டி ரங்கநாயகியும், இவரின் சகோதரிகளும் எழுத்தாளர்களே.

இவருடைய முதல் சிறுகதை 1957ல் "காவேரி" என்ற பெயரில் வெளிவந்தது. குழந்தைகளின் சின்னஞ்சிறு உலகத்திற்குள் நம்மை அழைத்துச் செல்லும் இவர் குழந்தைகளின் உலகத்தை பெற்றோர் பார்த்ததே இல்லை என்று ஆதங்கப்படுவதை இவரது கதைகளில் அதிகமாக பார்க்க முடியும். 

ஏறத்தாழ 500 சிறுகதைகள் எழுதிய இவர் வாசிப்பும், எழுத்து பணியும் மட்டுமே கொண்டவர். தன் படைப்பின் வழியாக மட்டுமே வாசகர்களை சென்றடைந்தவர். இலக்கிய கூட்டங்களுக்கு வருவதோ, பேட்டிகள் கொடுப்பதோ, தனது புகைப்படத்தை வெளியிடுவதோ என தன்னை எந்த இடத்திலும் வெளிப்படுத்திக் கொண்டதில்லை.

இவருடைய படைப்புகள் குஜராத்தி, இந்தி, கன்னடம், மராத்தி என பிற மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. மிகவும் எளிமையான இவர் தன் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை ஏழை மாணவர்களின் உயர் கல்வி, நோயாளிகளின் மருத்துவ சேவைக்கு என அளித்தவர்.

செயற்கைத்தனம் இல்லாத இயல்பான நடையுடன் கூடிய சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள், நாடகம் என இலக்கியத்தின் எல்லா வகைகளையும் கையாண்டவர்.

டாக்டரம்மா அறை, காவேரி, அந்நியர்கள், இணைப்பறவை, பூமாலை போன்ற கதைகள் எக்காலத்து வாசகர்களாலும் விரும்பப்படுபவை. 1960 இல் தனது மனதுக்கு இனியவள் என்ற புதினத்தை எழுதினார். 

'இருவர் கண்டனர்' என்ற இவரது நாடகம் பல விருதுகளைப் பெற்று பலமுறை அரங்கேற்றப்பட்டு புகழடைந்த நாடகம். பல இலக்கிய விருதுகளைப் பெற்ற இவர், ஆரவாரம் இல்லாமல் மிக எளிமையாக வாழ்ந்தவர். "சூடாமணியின் கதைகள்" என்கிற பெயரில் இவரது சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றும் வெளிவந்தது. "உள்ளக் கடல்" என்ற நாவலையும், நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியவர்.

முறையாக ஓவியம் கற்றவர். இவர் வரைந்த ஓவியங்கள் இவர் காலத்திற்குப் பிறகு 2011 ஆம் ஆண்டு கண்காட்சியாக வெளி உலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்ற இவர் தனது 80 வது வயதில் செப்டம்பர் 13, 2010 ல் மறைந்தார். இவரது எழுத்துக்கள் தமிழ் இலக்கியம் உள்ளவரை இருந்து கொண்டுதான் இருக்கும்.

கோபத்தை தணிக்க உதவும் வாழ்வியல் மந்திரங்கள்!

மாடித் தோட்டத்தில் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

இரவில் அரிசி சாதத்தை தவிர்க்கச் சொல்வது ஏன் தெரியுமா?

ChatGPTயைத் தாண்டிய உலகம்: அடுத்த தலைமுறை AI கருவிகள்! அவசியம் தெரிஞ்சுக்கணும் மக்களே!

இதை தெரிஞ்சுக்கிட்டாலே போதும் முகத்தில் உள்ள கொழுப்பு காணாமல் போகும்! 

SCROLL FOR NEXT