சிறுகதை – ஜிங்குலு!

ஓவியம்; ஜெ...
ஓவியம்; ஜெ...

-ஆர். சூடாமணி

"ஜிங்குலுக் குட்டி! ஜிங்குலுக் கண்ணா! இன்னிக்கு என்னல்லாம் பண்ணினே?"

சிரித்துக்கொண்டு தாவும் சின்ன உடல். அள்ளிக் கொள்ளும் அப்பாக் கரங்கள்.

"நானொருத்தி இங்கே நாளெல்லாம் இதோடுகூட உயிரை விடறேன். இதுவானா அப்பாவைக் கண்டாத்தான் தாவிக்கிட்டு ஓடுது!'' என்னும் மனைவியின் செல்லப் புகார் எப்போதுமே குணாளனின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.

"ஆமாம், என் ஜிங்குலுக் குட்டி டாடிப் பாப்பாதான். அப்படித்தானேடா ஜிங்குலு?"

"டாடிப் பாப்பா!” என்று ஜிங்குலு என்னும் சுரேஷ், அப்பாவின் கழுத்தை இன்னும் இறுகக் கட்டிக்கொண்டான்.

"ஆபீஸ்லேருந்து வந்து டிரெஸ்ஸை மாத்தலே, காப்பி டிபன் சாப்பிடலே. அதுக்குள்ள குழந்தையைத்தான் கொஞ்சியாகணும்போல் இருக்கு!"

"இவன்தான் என் காப்பி டிபன். இவனைக் கையில் எடுத்ததுமேதான் பசியெல்லாம் பறந்து போயிடுதே! அப்படித்தானேடா ஜிங்குலு?"

"நல்லதாப் போச்சு. இன்னிக்கு டிபன், காப்பி தயாரிக்கிற வேலை எனக்கு மிச்சம்."

"ஐயையோ அமுதா, அப்படியெல்லாம் பண்ணிடாதே! பசி உயிர் போகுது. முதல்ல காப்பியைக் கொண்டா.'

''பாப்பாக்கும் காப்பி!" என்று சுரேஷ் உத்தரவிட்டான்.

"காப்பி கீப்பின்னா பாப்பாக்கு உதைதான்.”

''ஹ்ம்ம்ம்... டாடி, காப்பி வேணும்..."

''குழந்தையை அழ விடாதே அமுதா கொஞ்சம்போல காப்பி கொடுத்தா என்ன கெட்டுடும்?"

"இதோ பார் சுரேஷ், உனக்குக் காப்பி வேணாம். அம்மா சொல்றதைக் கேளு."

"ஊஹும் டாடி..."

"அமுதா, ப்ளீஸ், ஒரே ஒரு வாய், குழந்தையைச் சமாதானப்படுத்த."

"எப்படியோ போங்க அப்பாவும் பிள்ளையும்!" அமுதா அகன்றாள்.

"காப்பி வரப் போகுதே! ஜிங்குலுவுக்கும்தான்.''

"ஹையா!"

இரண்டு வயதுக்குழந்தை. இன்னும் ஆறு மாதங்களில் ப்ரீ ஸ்கூல் போக வேண்டும்.

''ஜிங்குலு ஸ்கூலுக்குப் போய் நல்லா படிப்பானே!"

"ஜிங்குலு டாடியாட்டம் ஆபீஸ் போவான்."

"அடசமத்து!" மகனை உச்சிமோந்து ஒரு முத்தம்.

"இந்தாங்க காப்பி. சுரேஷ், இதோ, இது உனக்கு."

சின்ன தம்ளரில் பாதிக்கும் கீழே காப்பி ஒட்டிக்கொண்டிருந்தது.

"இத்தனூண்டா..."

"குடிக்கிறதானா இதைக் குடி. இல்லாட்டி இதுகூடக் கிடையாது சுரேஷ்."

அம்மா அந்த அதட்டல் குரலில் பேசினால் மீற முடியாது என்று சுரேஷுக்குத் தெரியும். அம்மா 'சுரேஷ்'  என்று எப்போதும் அழைப்பதே அவள் கண்டிப்பைக் காட்டுகிறது. ஆசையாய் செல்லப் பெயரால் 'ஜிங்குலு' என்று அழைப்பது அப்பாதான்.

அப்பா கோபிக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு. அதை அவன் புரிந்துகொள்ள அவருடைய கடுமையான முகமோ உரத்த குரலோகூட அவசியமில்லை. அந்தச் சமயங்களில் அவனை 'சுரேஷ்' என்று அவர் அழைப்பதே அவர் கோபத்தின் அறிகுறி.

சமையலறையில் வேலையாக இருக்கும்போது குழந்தை அங்கு வந்து தொந்தரவு செய்வதை அமுதா விரும்புவதில்லை. காலையில் அவனுக்கு ஆகாரம் கொடுத்தபின் "டாடியோட விளையாடிக்கிட்டிரு” என்று குணாளனுடன் விட்டு விட்டுத் தன் வேலையைக் கவனிக்கச் செல்வாள். "ஜிங்குலுக் கண்ணு, உன் பொம்மைப் புத்தகம் எங்கே?" என்று குழந்தைக்குப் பராக்குக் காட்டியபடியே அவன் செய்தித்தாள் படிப்பான். செய்திகள் மிக உஷ்ணமாயிருக்கும் நாட்களில் கவனம் குழந்தையிடமிருந்து விலகுவதும் உண்டு.

இதையும் படியுங்கள்:
ஹீரோ வில்லனாக மாறும் விஷயம் நம் சமையலறையிலேயே நடக்குதே!
ஓவியம்; ஜெ...

அன்று அப்படித்தான் விலகியிருக்க வேண்டும். மடியில் அமர்த்திக்கொண்டிருந்த சுரேஷ் எப்போது இறங்கிப் போனானோ? சமையலறையில் கறிகாய் நறுக்கிவிட்டு ஒரு தாழ்வான மேடையில் அமுதா வைத்திருந்த கத்தியை மிக சுவாரஸ்யமாய் எடுத்து, இப்படியும் அப்படியுமாய்த் திருப்பி, அதன் உலோக வெள்ளை சூரிய ஒளியில் மின்னலிடுவதை அழகு பார்த்தான்.

"இந்தக் கத்திதானேம்மா கதையில கொலங்கு வாலை வெட்டிச்சு?''

காஸ் அடுப்பிலிருந்து சடாரென்று கவனம் சிதறித் திரும்பிப் பார்த்த அமுதா, “ஏய் சின்னக் குழந்தைகளெல்லாம் கத்தியை வச்சுக்கிட்டு விளையாடக் கூடாது. உடனே அதைக் கீழே வை" என்று அதட்டினாள்.

சுரேஷ் அவளைப் பொருட்படுத்தாமல் 'வாலு போச்சு கத்தி வந்துது டும் டும் டும்!' என்றான் பரவசத்துடன்.

அமுதா கத்தியைப் பிடுங்க வருவதற்குள் அறைக் கதவிடை குணாளன் தென்பட்டான்.

"டே சுரேஷ், இப்போ கத்தியைக் கீழே வைக்கிறியா இல்லையா?"

உரத்த குரலில் உத்தரவு. சுரேஷ் அலண்டுபோய்த் தந்தையை நிமிர்ந்து பார்த்தான். அப்பாவின் கோபம் புரிந்தது. கையிலிருந்து கத்தி நழுவியது. மோவாய் அலுங்க, உதடுகள் குவிந்தன. இன்ன ஊற்றிலிருந்து என்று புரியாமல் இமை நேரத்தில் கண்களில் நீர் பெருகியது. பழக்கமான, ஆசையான டாடி வேண்டும் அவனுக்கு. குரல் கேவிக் கேவி வந்தது.

"டாடி...டாடி... சுலேஸ் சொல்லாதே... ஜிங்குலு சொல்லு...”

பொங்கிப் பொங்கி வந்த துக்கம்.

குணாளன் குழந்தையைக் கரங்களில் அள்ளிக்கொண்டான்.

காலண்டர் எட்டு முறை மாறிவிட்டது.

பத்து வயதுக்கு சுரேஷ் நல்ல வளர்த்தி. ஏறக்குறைய அமுதாவின் உயரம் வந்துவிட்டான். தரத்துக்குப் பெயர் போன ஒரு ஹையர் செகண்டரி பள்ளியில் ஐந்தாம் படிவம் படிக்கிறான். படிப்பில் படுசுட்டி. பரீட்சைதோறும் முதலிடத்துக்கு இவனுக்கும் பிரபு என்ற இன்னொரு பையனுக்கும்தான் போட்டி. இவன் சரித்திரத்தில் புலி என்றால் அவன் தமிழில். அவன் விஞ்ஞானத்தில் மார்க் குவித்தால் இவன் கணிதத்தில். இருவருக்குமே வகுப்பில் 'ரசிகர் குழாம்' உண்டு.

இதையும் படியுங்கள்:
வந்தாச்சு D2M! ஸ்மார்ட் போன் இருந்தால் போதும்!
ஓவியம்; ஜெ...

"என் ஜிங்குலு பெரிய கணக்கு ஜீனியஸாய் வரப் போறான், தெரியுமா?" என்று குணாளன் அவன் தலைமுடியைச் செல்லமாய் அளையும்போது, இப்போதும் சுரேஷ் குழந்தைபோல் அப்பாவைக் கட்டிக்கொள்வான்.

''பிள்ளை ஒரு வளரும் ராமானுஜனாக்கும்!" என்று அமுதா சிரித்தபோதும் உள்ளூற அவளுக்கும் பெருமைதான். காட்டிக்கொள்ள மாட்டாள்.

"இல்லாம என்ன? ராமானுஜன் மட்டுமா? அவருக்கு முன்னே இருந்த ஆர்யபட்டர், பாஸ்கரன் எல்லாரும் இப்ப இவனுக்குள்ளேதான்!"

"ரொம்ப புகழாதீங்க, கண் பட்டுடப் போகுது!"

'தாயார் கண்தான் படும். தகப்பனார் கண்ணுக்கு தோஷமே கிடையாது, தெரியுமா? போன பரீட்சையில் ஜிங்குலு கணக்கில் நூத்துக்குத் தொண்ணுத்தெட்டு மார்க் வாங்கினானாக்கும்!''

"மிச்ச ரெண்டு மார்க்கைச் சாப்ட்டுட்டானா? ரொம்ப பசியா?"

''பாருங்க டாடி! இந்த அம்மாவே இப்படித்தான். நான் எவ்வளவு நல்லா செஞ்சாலும் திருப்தியில்லை. அம்மா, அந்தப் பிரபுவுக்கு எண்பத்தாறு மார்க்தான் கிடைச்சுது, தெரியுமா?"

'வருத்தப்படாதேடா ஜிங்குலுக் கண்ணா, நீ எவ்வளவு கெட்டிக்காரன்னு டாடிக்குத் தெரியும்."

"என் நல்ல டாடி!''

சில நாட்கள் ஸ்கூல் பஸ் வந்து ஒலி எழுப்பும் வரை கூட இந்தக் கொஞ்சல் படலம் தொடரும்.

ஹார்ன் ஒலி கேட்டதுமே சுரேஷ் வெள்ளைச் சீருடையும் புத்தகப் பையுமாய் “டாட்டா டாடி! டாட்டா அம்மா!" என்று கூவிக்கொண்டே ஜோடு சப்திக்க வாசலுக்கு ஓடுவான்.

ன்று மாலை பள்ளியிலிருந்து திரும்பியபோது புத்தகப் பையைத் தலை மேலிருந்து வழியவிட்டவாறு நுழைந்த மகனை அமுதா ஆச்சரியத்தோடு பார்த்தாள்.

"வந்துட்டியா சுரேஷ்? பஸ் வந்த சப்தமே கேக்கலையே?"

"பஸ் ப்ரேக் டௌன்மா. நாளைக்கு ஸ்கூல் பஸ் கிடையாது, பையன்களெல்லாம் அவங்களாவே வந்துடணும்னு ப்ரின்ஸி சொல்லிட்டார்."

"இப்ப எப்படி வந்தே?"

''சைக்கிள் ரிக்ஷால. ரிக்ஷாக்காரர் வாசல்ல நிக்கறார். பணம் கொடுத்துட்டு வந்து எனக்கு டிபன் கொடும்மா. ரொம்ப பசிக்குது."

றுநாள் காலை குணாளன் தன் ஸ்கூட்டரில் சுரேஷைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றான். கட்டட வாசலில் ஸ்கூட்டரை நிறுத்தியதுமே "அதோ சுரேஷ் வந்துட்டான்!" என்று உற்சாகமாய்க் கூவிக்கொண்டு நாலைந்து சிறுவர்கள் ஒடி வந்தார்கள். தன் மகனுக்கு எத்தனை மவுசு என்ற பெருமிதம் குணாளனுக்கு.

சுரேஷ் குதித்துக் கீழே இறங்கினான். "இவங்கள்ளாம் என் ஃப்ரெண்ட்ஸ் டாடி!" என்றான் பெருமையாக.

"என் டாடிகூட என்னை இன்னிக்கு ஸ்கூட்டர்லதான் கொண்டுவந்து விட்டார்டா!'' என்று ஒரு நண்பன் அறிவித்தான்.

"நான் உள்ளே போறேன் டாட்டா!" டாடி!

"டாட்டா ஜிங்குலு! சாயங்காலம் அழைச்சிட்டுப் போக மறுபடி வரேன்."

ஸ்கூட்டரைத் திருப்பிக்கொண்டு குணாளன் சென்று தெருக்கோடியை அடைந்தபோது, பள்ளி திசையிலிருந்து உரத்த சிரிப்புச் சப்தம் நாலைந்து குரல்களில் ஆரவாரமாய்க் கேட்டது. சிறுவர்களெல்லாம் ஏதோ பேசி மகிழ்கிறார்கள் போல் இருக்கிறது.

மாலையில் அலுவலகத்திலிருந்து சீக்கிரமே ஸ்கூட்டரில் கிளம்பிப் பள்ளிக்கு வந்தபோது, சுரேஷ் வீட்டுக்குப் போய் விட்டான் என்ற தகவல் கிடைத்தது. ஒன்றும் புரியாமல் குணாளன் வீட்டுக்கு விரைந்தான் .

"குழந்தை வந்துட்டானா?" என்றான் கவலையோடு மனைவியிடம்.

''அவன் என்னமோ தலைவலின்னு சொல்லிட்டு மத்தியானமே வந்துட்டான். யூனிஃபார்ம் கூடக் கழட்டலே. அப்பலேருந்து ஒண்ணும் பேசாம, சாப்பிடாம, அப்படியே 'உம்'முனு உக்காந்திருக்கான்'' என்றாள் அமுதா.

இதையும் படியுங்கள்:
இனி வாட்ஸ் அப் வெப்பிலும் ஸ்டேட்டஸ் வைக்கலாம்! 
ஓவியம்; ஜெ...

குணாளன் உள்ளே விரைந்தான். அமுதா சொன்னது போலவே சுரேஷ் சுருண்டு ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான். முகம் ஜிவு ஜிவுத்துச் சிவந்திருந்தது. தந்தையின் காலடியோசை கேட்டவுடன் அந்த முகம் நிமிர்ந்தது. கண்கள் இரண்டும் இரு பெரும் ஆள்காட்டி விரல்களாகத் தந்தையை நோக்கிக் குற்றம்சாட்டின.

"என் ஸ்கூல்ல வந்து ஏன் டாடி என்னை ஜிங்குலுன்னு கூப்பிட்டீங்க?'

இள நெஞ்சில் காலை நிகழ்ச்சி இன்னும் நெருப்புத் துண்டாய் ஒட்டிக்கொண்டிருந்தது.

''ஏ, உன் பேர் ஜிங்குலுவாடா?"

''உன் டாடி உன்னை அப்படித்தான் கூப்பிடுவாரா?"

"டே ரவி, சுரேஷ் பேரு ஜிங்குலுடா!"

"ஜிங்குலு!"

"டே ஜிங்குலு!''

''ஹை ஹை ஜிங்குலு!"

''ஏ ஜிங்குலூஊஊஊ!''

பெருத்த ஆரவாரச் சிரிப்பு.

"என் ஃப்ரெண்ட்ஸெல்லாம் எப்படிப் பரிகாசம் பண்ணிச் சிரிச்சாங்க தெரியுமா? நான் படிப்பில் கெட்டிக்காரன்னு என்னை ஒசத்தியா நெனைச்சிருந்தவங்க அப்படிச் சிரிச்சாங்க. அந்தப் பிரபு வேற பின்னாலேருந்து கேட்டுட்டான். ஏற்கெனவே நான் மாத்ஸில் அவனைவிட நிறைய மார்க் வாங்கிட்டேன்னு பொறாமை. இதைச் சாக்காய் வச்சுக்கிட்டு என்னை ஜிங்குலு ஜிங்குலுன்னு கலாட்டா ரொம்ப பண்ணிட்டான்..."

பேசப் பேசக் குரலில் அழுகை சேர்ந்துகொண்டிருந்தது. குணாளன் அதிர்ந்து போனான். தன் குழந்தை மட்டுமாக இருந்தவன், இப்போது அவனுக்கென்று ஒரு தனி இருப்பும் உள்ளவனென்பது எப்படி மறந்து போயிற்று?

சிறுவன் முகத்தில் கோபம், அவமானம், அப்பா துரோகம் செய்து விட்டார் என்பது போன்ற ஆத்திரத் துக்கம்.

"டாடி... நீங்க என்னை தனியாயிருக்கறப்ப... எப்படி வேணும்னாலும் கூப்பிடுங்க. ஆனா... என் ஃப்ரெண்ட்ஸுக்கெதிர..."

பொங்கிப் பொங்கி வந்த துக்கம். குணாளன் மகனைக் கரங்களில் அள்ளிக்கொண்டான். "சுரேஷ்னே கூப்பிடறேண்டா ஜிங்குலு" என்றான்!

பின்குறிப்பு:-

கல்கி 16  மே  1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com