‘மைக்’கை அட்ஜஸ்ட் செய்த மாமனிதர்!
44 வருடங்களுக்கு முன் திருநெல்வேலியில் பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அச்சமயம் என் மாமனார் திரு. அம்மையப்பன் அவர்கள் காரியதரிசியாக இருந்தார்கள். அவர்களின் பெருமுயற்சியில் மூன்று நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இவர்களுடன் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
மாமனார் விருப்பப்படி, எங்கள் குடும்பமும் விழாவுக்குச் சென்றிருந்தோம். சினிமா தியேட்டரில் திரையில் பார்த்த எம்.ஜி.ஆரை நேரில் பார்க்கப் போகிற ஆசையுடன் இரண்டாவது வரிசையில் உட்கார்ந்தேன். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் சிறப்பு விருந்தினர்கள் மேடையேறினர். அது என்ன மாயமோ… தெரியலீங்க… எம்.ஜி.ஆர் அவர்கள் மேடையேறியதும், கைதட்டலில் அரங்கமே அதிர்ந்தது. அசந்தே போயிட்டேன்.
"அத்தை, எம்.ஜி.ஆரைப் பாருங்களேன். வொயிட்டா இருக்காருல்ல."
கத்திச் சொல்ல, "உஷ்... சத்தமா பேசாதே"ன்னு அத்தை அடக்க, எம்.ஜி.ஆரை பக்கத்துல பார்த்த சந்தோஷம்ன்னு அசடு வழிந்தேன்.
வரவேற்புரை ஆற்ற, கல்லூரி தலைவர் மைக் அருகில் வந்ததும், உயரமாக இருந்தது. அண்ணாந்து பேச முயற்சிக்க, எம்.ஜி.ஆர். கேஷுவலாக எழுந்து வந்து, மைக்கை சரி பண்ணிக் கொடுக்க, இப்போ நா மெதுவாக மாமியாரிடம், "அத்தை, எம்.ஜி.ஆர், பந்தா இல்லாம ரொம்ப சிம்பிளா இருக்காரு"ன்னு சொல்ல, "ஆமாம்"ன்னு அத்தை தலை அசைத்து ஆமோதித்தார்கள்.
மாநிலத்துக்கே முதல்வராயிருந்தாலும், சினிமா உலகில் சிகரங்களை எட்டி இருந்தாலும், அவரின் எளிமை வியக்க வைத்தது.
- என். கோமதி, நெல்லை
படுத்துக்கொண்டே ஜெயித்தவர்!
எம்.ஜி.ஆர். அவர்கள், ஒரு நடிகராகவோ அரசியல்வாதியாகவோ மட்டும் வாழவில்லை. ஏழைப்பங்காளன், தர்மத்தின் தலைவன், அன்னையைப் போற்றும் உத்தமன், வள்ளல், நல்லவர்களைக் காக்க பாடுபடுபவர், பெண்களை மதிப்பவர், பதவி ஆசை அற்றவர் ஆனால், பதவி மூலம் மக்களுக்குச் சேவை ஆற்ற முனைபவர் என்ற பல பிம்பங்களைக் கொண்டு வாழ்ந்த மாமேதை.
திரைப்படங்களில் கதாநாயகனாகத் தோன்றி, நல்லவனாக முன்னுதாரணத்துடன் நடித்து, நிஜ வாழ்க்கையிலும் அதைக் கடைப்பிடித்து, இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை நிரூபித்தவர்!
திரைப்படங்களிலும் சரி, அரசியலிலும் சரி, பார்வையாளர்களின் உள்ளத்தைச் சிறப்பாகப் புரிந்துகொண்டு, அதை வெற்றிகரமாக பயன் படுத்திக்கொண்டவர் அவர் மட்டுமே! அதனால்தான் படுத்துக்கொண்டே அவரால் ஜெயிக்க முடிந்தது!
வாழ்க்கையின் ஆரம்பத்தில் சினிமா பாடல் புத்தகங்களைத் திரையரங்குகளின் முன்னால் விற்று வந்தவர், பின்னர் 136 படங்களில் நடித்து, உலகெங்கிலும் பல லட்சம் ரசிகர்களைக் கொண்டவராகத் திகழ்ந்து, படிப்படியாக அரசியலில் ஐக்கியமாகி தமிழக முதலமைச்சருமாகி, கிட்டத்தட்ட ஒரு தெய்வமாகவே இன்றும் மக்களால் உணரப்படுகிறார் என்பது நிஜம்!
- வசந்தா கோவிந்தன், பெங்களூர்
பதிவுத் தபால் சம்பவம்
எம்ஜிஆர் பதிவுத் தபால்களைக் கையெழுத்துப் போட்டுப் பெறுவதை நிறுத்தினார். இதன் பின்னணியில் உள்ள சுவையான காரணம்...
எம்ஜிஆரின் ‘நாடோடி மன்னன்’ திரைப்படம் வெளிவருவதற்கு முன்பு அவருக்குப் பதிவுத்தபால் ஒன்று வர, அதைக் கையெழுத்திட்டுப் பெற்றுக்கொண்டு பிரித்துப் பார்க்கையில், வெற்றுக் காகிதம் மட்டுமே இருந்தது.
அதை அப்படியே மறந்துவிட்டு, படவேலைகளில் மூழ்கினார். பிறகு
‘நாடோடி மன்னன்’ படம் வெற்றி பெற்று திரையரங்குகளில் வெற்றி நடை
போட்டுக்கொண்டிருந்த சமயம், வக்கீல் நோட்டீஸ் ஒன்று வர, திறந்து பார்த்த சமயம், முந்தைய பதிவுத் தபாலில் அனுப்பியவரின் சார்பாக அனுப்பப் பட்டிருந்தது.
அதில் என்ன எழுதியிருந்தது?
‘நாடோடி மன்னன் கதை என்னுடையது. அதை உங்களுக்குப் பல மாதங்களுக்கு முன்பு அனுப்பி வைத்தேன். படத்தில் என் பெயர் இல்லை. அதனால், அதற்கு எனக்குரிய நஷ்டஈட்டை வழங்க வேண்டு’மென இருந்தது. இதைப் படித்த எம்ஜிஆர் அதிர்ந்து போனார். இதற்கு தம் வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பிவிட்டாலும், ‘இப்படியெல்லாம் கூடவா செய்வார்கள்?’ என ஆச்சரியப்பட்டார்.
இதன்பிறகு சந்தேகப்படும்படியான பதிவுத் தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறுவதைத் தவிர்த்துக்கொண்டார்.
‘கப்சிப்’ ஆன பத்திரிகையாளர்கள்
பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கையில், வயதான பின்பும், கதாநாயகனாக நடிக்கிறீர்களே! எனக் கேள்வி எழுந்தபோது,
“20 வயதுடைய ஒருவர் 50 வயதுக்காரராக நடிப்பதை கைதட்டி வரவேற்கிறீர்கள் அல்லவா! அதேபோல 50ஐக் கடந்த நான் 20 வயது இளைஞனாக நடிப்பதை ஏன் வரவேற்கக் கூடாது? அதுதான் நடிப்பு.
நீங்கள் திரையில் பார்க்கும்போது இளைஞனாகத் தோன்றுகிறேனா இல்லையா? என்பதுதான் என் கேள்வி” என்று பொட்டிலடித்தாற்போல கூறிய பிறகு எல்லோரும் கப்சிப் ஆனார்கள்.
- ஆர். மீனலதா, மும்பை