அமெரிக்க ஜனாதிபதியாக கென்னடி இருந்தபோது (1962_ல்) அமெரிக்கக் குழந்தைகளுக்கு யானைக்குட்டி ஒன்றை சிவாஜி கணேசன் பரிசாக வழங்கினார். அமெரிக்காவில், இந்தியானா பொலிஸ் என்ற இடத்தில் உள்ள பூங்காவுக்கு அந்த யானைக்குட்டி அனுப்பப்பட்டது.
இதுபற்றி தகவல் தெரிந்ததும், சிவாஜிகணேசன் பற்றிய விவரங்களை கென்னடி விசாரித்தார். சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், சிவாஜி பற்றிய முழு விவரங்களையும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது. அவற்றைப் படித்துப் பார்த்த கென்னடி, கலாசார பரிமாற்ற திட்டத்தின் கீழ், சிவாஜிகணேசனை அமெரிக்க அரசின் விருந்தினராக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்வதற்கு அழைக்குமாறு அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார். அதன்படி சிவாஜிக்கு அழைப்பு வந்தது.
அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய சிவாஜி கணேசனை எம்.ஜி.ஆர். மாலை அணிவித்து வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்து சிவாஜியை நடிகர் - நடிகைகள் ஊர்வலமாக அழைத்துச்சென்றனர். நடிகர் திலகத்துக்கு மக்கள் திலகம் அளித்த மரியாதையைக் கண்டு ரசிகர்கள் போற்றி புகழ்ந்தனர்!
- சுந்தரி காந்தி, சென்னை
சின்னப்பா தேவரும் எம்.ஜி.ஆரின் நட்பும்!
சாண்டோ சின்னப்பா தேவரும், எம்.ஜி.ஆரம் மிக நெருங்கிய நண்பர்கள். எம்.ஜி.ஆரை வைத்து சின்னப்பா தேவர், கிட்டத்தட்ட 16 படங்களைத் தயாரித்துள்ளார். இவர்களின் நட்பைப் பார்த்து சினிமா உலகில் வியந்த பலருண்டு.
இருவரும் சினிமாவுக்குள் வந்த புதிதில் ஒரு நாள் சின்னப்பா தேவர், எம்.ஜி.ஆரிடம், ‘நாம் இருவரும் ஓர் ஒப்பந்தம்’ போட்டுக்கொள்வோம். நம் இருவரில் யார் முதலில் முன்னுக்கு வருகிறாரோ அவர் அடுத்தவரை கைத்தூக்கிவிட வேண்டும் என கூறினாராம். அதற்கு எம்.ஜி.ஆர் தலையாட்டினாராம்.
எம்.ஜி.ஆர். ஒரு காலகட்டத்தில் உச்ச நட்சத்திரமா வந்தபின், சின்னப்பா தேவருக்கு அவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட, எம்.ஜி.ஆரின் வீட்டுக்குச் சென்று, “நான் ஒரு திரைப்படம் தயாரிக்கப் போகிறேன். நீங்கள் ஹீரோவாக நடிக்க வேண்டும்” என முன்பணத்தைக் கொடுத்தாராம். இவ்வாறு கூறியவுடன் இருவரும் போட்ட ஒப்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஞாபகம் வர உடனே திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
தேவர் பிலிம்ஸ் முதல் திரைப்படமான ‘தாய்க்கு பின் தாரம்’ திரைப்படத்தில் நடத்து, அதன்பின் அவரது15 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். அந்த அளவுக்கு இருவரின் நட்பும் மிகவும் இருக்கமாக இருந்தது.
(படித்ததில் பிடித்தது.)
எம்.ஜி.ஆர். தொப்பி
எம்.ஜி.ஆர். பல படங்களில் பாடல்களில் விதவிதமான தொப்பிகளை அணிந்து நடித்திருப்பார். எம்.ஜி.ஆருக்குத்தான் தொப்பி மிகவும் பொருத்தமாக இருக்கிறது என சினிமாத் துறையினரே பரவலாக பேசிய காலமும் இருந்தது.
படங்களில் மட்டும் தொப்பி பயன்படுத்தி வந்த எம்.ஜி.ஆர். நிஜ வாழ்க்கையிலும், தொப்பி பயன்படுத்த வைத்த படம் அடிமைப்பெண். ஜெய்ப்பூரில் படப்பிடிப்பு நடந்து வந்த நேரத்தில் அதிக வெயிலால், எம்.ஜி.ஆர் மிகவும் அவதிப்பட படப்பிடிப்பு காண வந்த நபர், இதைக் கவனித்து வெள்ளை நிற புஸ்குல்லா பரிசளித்தார். இந்தத் தொப்பி வெயிலுக்கு சற்று இலகுவாகவும், அவருக்குப் பொருத்தமாகவும், அழகாகவும் இருப்பதாக குவிந்தன பாராட்டுகள். இதுவே பின்னாட்களில் இந்த வெள்ளை புஸ்குல்லா அவருக்கு நிரந்தர இடம் பிடிக்க காரணம் ஆனது.
(படித்ததில் பிடித்தது)
- எஸ். மாரிமுத்து, சென்னை
கண்ணும் கருத்துமாக...
"நமது எம்ஜிஆர் முதலைமைச்சராக இருந்த பொழுது மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயங்களில் அதுவும் விலைவாசி ஏறாமலும் பேரூந்து கட்டணத்தை அதிகமாக ஏற்றாமலும் மக்கள் பயன்படுத்தும் பால் பாக்கெட்டின் விலையை அதிகரிக்காமல் இருக்கவும் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்தது; அவர் ஆட்சிக் காலத்தில் பள்ளி குழந்தைகளுக்குச் சத்துணவு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தியதால் அவரது ஆட்சியில் மக்களின் மனதிலும் (முக்கியமாக பெண்கள் மனதிலும்) நீங்காது இடபெற்ற ஒரே அரசியல் தலைவர் நமது மக்கள் திலகம் எம்ஜிஆரெனக் கூறுவதில் மிகவும் பெருமைப்படுகிறேன்!"
- நெசப்பாக்கம் மாலிசரஸா, சென்னை