Indian Coffee House Img Credit: Deccan Herald
கல்கி

500-க்கும் அதிகமான கிளைகள், மலிவான விலையில் உணவுகள்! Indian Coffee House தொடக்கமும் வளர்ச்சியும்!

தேனி மு.சுப்பிரமணி

தொழிலாளர்களின் கூட்டுறவு அமைப்பால், இந்தியா முழுவதும் 500 கிளைகளுக்கும் அதிகமான எண்ணிக்கையில் நடத்தப்படும் உணவு விடுதி ஒன்று இருப்பது உங்களுக்குத் தெரியுமா? Indian Coffee House எனும் பெயரில் இந்தியா முழுவதும் நடத்தப்பெறும் அந்த உணவு விடுதி தோன்றிய வரலாறு பற்றிப் பார்ப்போம்.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில், 1936 ஆம் ஆண்டு காப்பி துணைவரிக் குழுவால் (Coffee Cess Committee), மும்பையில் இந்தியக் காப்பி விடுதி எனும் பெயரில் ஒரு உணவு விடுதி திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்தியாவில் பல இடங்களில் அதன் கிளை அமைப்புகள் தொடங்கப்பட்டன. இந்திய விடுதலைக்குப் பின்பு 1950 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் இந்த விடுதிக்குக் கிட்டத்தட்ட 50 கிளைகள் இயங்கிக் கொண்டிருந்தன. 1950 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், பல்வேறு நகரங்களில் இந்த உணவு விடுதிகளை மூட முடிவு செய்யப்பட்ட போது, அங்கு பணிபுரிந்த பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பலர் வேலையிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

அவ்வேளையில் பொதுவுடமைக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஏ. கே. கோபாலன் தலைமையில் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அந்த உணவு விடுதி நிறுவனத்தைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று போராடி வெற்றி பெற்றனர். அதனைத் தொடர்ந்து, 'இந்திய காபி போர்டு தொழிலாளர் கூட்டுறவு சங்கம்' எனும் பெயரில் பல்வேறு இடங்களில் சங்கத்தை அவர்கள் தொடங்கினர்.

1957 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் பெங்களூரில் முதல் சங்கம் உருவாக்கப்பட்டது. புதிதாக ஏற்பட்ட சங்கத்தின் வழியாக, 1957 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் நாளில் இந்தியக் காபி விடுதி டெல்லியில் திறக்கப்பட்டது. அதன் பிறகு, பாண்டிச்சேரி, திருச்சூர், லக்னோ, நாக்பூர், ஜபல்பூர் என்று பல்வேறு ஊர்களில் இந்தியக் காபி விடுதிகள் தொடங்கப்பட்டன. 1958 ஆம் ஆண்டின் இறுதியில், மும்பை, கொல்கத்தா, டெலிச்சேரி மற்றும் புனே நகரங்களிலும் இந்தியக் காப்பி விடுதிகள் தொடங்கப்பட்டன.

கேரளாவில் பழைய மலபார் பகுதிக்கு ஒரு சங்கம், திருவாங்கூர் முதல் கொச்சி வரையிலான பகுதிக்கு ஒரு சங்கம் என்று இரண்டு சங்கங்கள் உருவாக்கப்பட்டன. திருவாங்கூர் முதல் கொச்சி வரையிலான பகுதிக்கு 1958 ஆம் ஆண்டு, பிப்ரவரி 10 அன்று திருச்சூரில் சங்கம் பதிவு செய்யப்பட்டு, முதல் இந்தியக் காப்பி விடுதி, அதே ஆண்டு மார்ச் 8 அன்று திருச்சூரில் திறக்கப்பட்டது. இந்த விடுதி இந்தியாவில் தொடங்கப்பட்ட நான்காவது விடுதியாகும். தற்போது வரை இச்சங்கத்தின் கீழ் 51 இந்தியக் காப்பி விடுதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இதேப் போன்று, பழைய மலபார் பகுதிக்கு 1958 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி பாலக்காட்டில் சங்கம் பதிவு செய்யப்பட்டு, இச்சங்கத்தின் கீழாக, 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று, தலச்சேரியில் இந்தியக் காபி விடுதி தொடங்கப்பட்டது. தற்போது இச்சங்கத்தின் கீழ் 25 இந்தியக் காப்பி விடுதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது இந்தியா முழுவதும் இந்தியக் காப்பி விடுதிகளுக்காக 13 சங்கங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சங்கங்களின் ஊழியர்களிலிருந்து நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் மேலாண்மையில் இவ்விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இச்சங்கங்களின் முலம் இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் 500-க்கும் அதிகமான உணவு விடுதிகளில் மலிவான விலையில் உணவுகள் வழங்கப்படுகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கூட்டுறவு முறையில் நடத்தப்பெறும் இந்த உணவு விடுதிகள் பிற கூட்டுறவு அமைப்புகளுக்கு முன் மாதிரியாகத் திகழ்கின்றன என்றால் அது மிகையில்லை.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT