-கவிஞர் திருவரங்க வெங்கடேசன்
விண்ணோடும் முகிலோடும் விளையாடும்
வெண்நிலவு போல் முதுமை என்னோடு
கண்ணாமூச்சி விளையாடுதே!
எதிர்மறை சிந்தகைகள் எட்டியோட, அது,
எந்நாளும் நேர்மறையாய் சிந்திக்கும் எந்தன்
மனநிலையை குலைக்கச் செய்கிறதே!
காணக் குளிர்ந்ததே கண் என்றேன்
ஒளிபடைத்த விழிதிரையைத் தாக்கி
கண்கள் மங்கிட வைத்ததே!
கேட்க கேட்க இனிக்கிறதே காது என்றேன்
செவித்திறனை குறைத்தது
காதில் கருவி மாட்ட வைத்ததே!
சுவைக்க இனித்ததே நா என்றேன்
சர்க்கரை நோயால் தாக்கி
உணவில் பத்தியம் வைத்ததே!
புலன்கள் மூன்றை முடக்கி
நலனை அடக்கி
குலைக்க பார்க்கிறதே முதுமை
என்னோடு விளையாடும் முதுமையே!