ஓவியம் பணியில் தமது மனைவியோடு மணியம் Maniyam 100 Maniyam Selvan
கல்கி

பார்த்திபன் கனவும் மணியம் கனவும்!

மணியம் 100 (1924 - 2024)

எம்.கோதண்டபாணி

பொன்னியின் செல்வன் நாவலுக்கு சரித்திரப் புகழ் மிக்க ஓவியங்களை வரைந்த மணியம், கல்கி பத்திரிகையை விட்டு ஏன், எதற்காக வெளியே வந்தார்?

அப்பா மணியத்துக்கு கல்கி ஐயா, ராஜாஜி ஐயா மற்றும் சதாசிவம் ஐயா ஆகிய மூவரிடத்திலும் மிகுந்த மரியாதையும் விசுவாசமும் இருந்தது. அப்பா இவர்களுக்கு முன்பு உட்கார்ந்து பேசவே மாட்டாராம். அந்தக் காலகட்டத்தில் எங்கள் வீட்டில் இந்த மூவரின் படத்தை மட்டுமே பார்க்க முடியும். அப்பா கூட இவர்களை எப்போதுமே ‘மும்மூர்த்திகள்’ என்றுதான் குறிப்பிடுவார். இத்தனை மதிப்பும் மரியாதையும் இவர்களின் பேரில் வைத்திருந்த அப்பா மணியம், கல்கி நிறுவனத்தை விட்டு விலகிச் சென்றதும் ஒரு வகையில் ஆசிரியர் கல்கியின் பேரில் அவர் வைத்திருந்த மதிப்பினால்தான்.

பார்த்திபம் கனவு திரைப்படத்துக்காக மணியம் வரைந்த கலை ஓவியம்

ஆசிரியர் கல்கி அவர்களின் மிகவும் புகழ் பெற்ற சரித்திரக் காவியமான, ‘பார்த்திபன் கனவு’ நாவலுக்கு ஓவியம் தீட்ட முடியவில்லையே என்ற கவலை அப்பாவின் மனதில் நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. அதிர்ஷ்டவசமாக 1957ம் ஆண்டு காலகட்டத்தில், (கல்கி அவர்கள் அமரராகி மூன்று வருடங்கள் கழித்து) ‘பார்த்திபன் கனவு’ நாவலை திரைப்படமாக உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அது மட்டுமின்றி, அந்தப் படத்தில் கலை இயக்குநராகப் பணியாற்றும் வாய்ப்பும் அப்பாவைத் தேடி வந்தது.

‘பார்த்திபன் கனவு நாவலுக்குத்தான் ஓவியம் தீட்ட முடியவில்லை; தற்போது உருவாக்கப்படும், ‘பார்த்திபன் கனவு’ திரைப்படத்துக்கான கலை இயக்கப் பணிக்காக ஓவியம் தீட்டியாவது அந்த ஏக்கத்தை தீர்த்துக்கொள்ளலாம் என்ற அவாவினாலும், அமரர் கல்கி அவர்களின் மீது அப்பா வைத்திருந்த மிகப்பெரிய பக்தியின் காரணமாகவும் கல்கி நிறுவனத்தை விட்டு வெளியில் வர அப்பா முடிவு செய்தார். அதன்படியே கல்கி அலுவலகப் பணியையும் அவர் கடும் மனப் போராட்டத்துக்கு இடையே துறந்தார்.

மாமல்லபுரத்தில் ஓவியர் மணியம் குடும்பத்தினர்

ஜுபிலி பிலிம்ஸ் தயாரிப்பாளர் கோவிந்தராஜன், ‘பார்த்திபன் கனவு’ திரைப்படம் எடுப்பது என்று முடிவு செய்தவுடன், அந்தப் படத்துக்கு கலை இயக்குநர் மணியம்தான் என்று முடிவு செய்து விட்டாராம். அது மட்டுமின்றி, அந்தப் படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தாரோ அதற்கு இணையான முக்கியத்துவத்தை கலை இயக்குநராகப் பொறுப்பேற்ற அப்பா மணியத்துக்கும் கொடுத்திருக்கிறார்.

அந்தப் படத்தின் அரங்க அமைப்புகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கான வண்ண ஓவியங்களாகவே வரைந்திருக்கிறார் அப்பா. ‘பார்த்திபன் கனவு’ நாவலுக்கு ஓவியம் தீட்டி இருந்தால் எப்படியெல்லாம் வரைந்திருப்பாரோ அதைவிட பிரமாதமாக திரைப்படத்திற்கான கலை ஓவியங்களைத் தீட்டி இருக்கிறார் அப்பா மணியம். அதற்கேற்றாற்போல், அப்பா வரைந்த ஓவியங்களுக்கு மதிப்பும் சுதந்திரமும் கொடுத்து, அதன்படியே அந்தப் படத்தின் காட்சி அமைப்புகளை எடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் கோவிந்தராஜன். அந்தளவுக்கு அப்பாவின் ஓவியங்கள் மீதும் கற்பனைத் திறத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருந்திருக்கிறார்.

‘பார்த்திபன் கனவு’ நாவல் திரைப்பட வடிவம் பெற ஆரம்பித்தது. அந்தப் படத் தயாரிப்பின்போது அப்பாவுக்கு இடையிடையே சிறு சிறு ஓய்வும் கிடைத்தது. கிடைத்த அந்த ஓய்வை வீணாக்காமல் அப்பா கல்கி பத்திரிகையின் தீபாவளி மலருக்கு ஓவியம் தீட்டுவதற்காக ஹம்பி பயணத்தைப் பயன்படுத்திக்கொண்டார். இந்தப் படம் தயாரான பிறகு, அப்பாவின் பெயர் இடம்பெற்ற டைட்டில் கார்டில், ‘கலை அமைப்பு, உடை, ஓவியம் - ‘மணியம்’ என்று இடம்பெற்றிருந்தது. இதில் விசேஷம் என்னவென்றால், தனது குருகுல வாசத்தை மறக்காத எனது அப்பா, கல்கி நிறுவனத்தை நினைவூட்டும் விதமாக கல்கி விநாயகர் உருவத்தையும் தனது பெயரோடு இடம்பெறச் செய்தார். மிகக் குறைந்த காலத்திலேயே இந்த சிகரத்தை எட்டினார் அப்பா மணியம். அதற்குக் காரணம் அவர் கல்கி அவர்களிடம் பெற்ற குருகுல பாடம்தான்.

தொடர்ந்து திரைப்படங்களின் கலை இயக்குநர் பணி, இடைப்பட்ட நேரத்தில் பத்திரிகைகளுக்கு ஓவியம் தீட்டும் பணி, அது மட்டுமின்றி, வெளியூர்களுக்கு அடிக்கடி பணியின் நிமித்தம் செல்வது என்று ஓவியக் கலைக்காகவே தம்மை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட அப்பா மணியம், தனது உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை மட்டும் எப்படியோ மறந்துபோனார்.

ஓவியம் மணியம்

இதையே காரணமாக வைத்து காலனும் தனது கடமையை செவ்வனே செய்து, சர்க்கரை எனும் இனிப்பான உடற்பிரச்னையை அப்பாவின் உடலில் புகுத்தி, 1968ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 29ம் நாள், அவரது கையில் இருந்த தூரிகையோடு அவரது உயிரையும் பறித்துக் கொண்டான். ஒருவேளை, விண்ணுலகம் சென்ற அமரர் கல்கி அவர்கள், ‘பூலோக சரித்திரத்தை எழுதி முடித்தாகி விட்டது. இனி, விண்ணுலக சரித்திரத்தையும் உனது ஓவியத்தோடு எழுதத் தொடங்குகிறேன். நீயும் என்னோடு வந்துவிடு’ என்று தனது மனதுக்கு மிகவும் உகந்த அப்பா மணியத்தை அங்கு அழைத்துக் கொண்டாரோ என்று கூற எண்ணத் தோன்றுகிறது.

எது எப்படி இருப்பினும், காலனால் அப்பாவின் தூரிகையையும் உயிரையும் மட்டும்தான் பறிக்க முடிந்ததே தவிர, அவரது ஓவிய சாதனைகளையும் புகழையும் பறிக்க முடியவில்லை. காலம் உள்ளவரை அதை யாராலும் பறிக்கவும் முடியாது என்பதுதானே நிதர்சனம்!

நேர்காணல்: எம்.கோதண்டபாணி

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

SCROLL FOR NEXT