கல்கி

ரத்தன் டாட்டா - மெ(மே)ன்மையான மனம் கொண்ட மாமனிதர்!

பிரபு சங்கர்

நேரடி வாரிசுகள் இல்லாத ஆனால் மிகவும் வெற்றிகரமான பல்துறை வர்த்தக அமைப்பை நிர்வகிக்கும் ஒரு குடும்பம் உண்டென்றால், உலகளவிலேயே அது டாட்டா என்ற இந்தியக் குடும்பம்தான்.

டாட்டா குடும்பத்தின் மூத்தவரான ஜம்ஷட்ஜியின் மகன் ரத்தன் டாட்டாவின் தந்தையின் அடியொற்றி, தொழில் புரட்சியை மேற்கொண்டார். ஆனால் தனக்கு வாரிசு இல்லை என்ற காரணத்தால் தன் சமூகத்தைச் சேர்ந்த நேவல் டாட்டாவின் மகனான ரத்தன் டாட்டாவைத் தத்தெடுத்துக் கொண்டார்.

அதுமுதல் பாரதத்தில் புதிய உதயம் தோன்றியது என்றே சொல்லலாம். காரணம், ரத்தன் டாட்டா, வெறும் கல்விமான் மட்டுமல்ல, பிரமாண்ட தொழில் சாம்ராஜ்யத்தின் பேரரசன் மட்டுமல்ல, மனிதாபிமானம் மிக்க அற்புத மனிதரும்கூட. ‘எனக்கு கண்ணியத்தையும், ஈகைத் தன்மையையும் கற்றுத் தந்தவர் என் பாட்டி,‘ என்று ஒருமுறை வெளிப்படையாக நினைவுகூர்ந்திருக்கிறார் இவர். ஆமாம், தன்னுடைய ஏழாவது வயதிலேயே (பிறப்பு: 1937) அவருடைய பெற்றோர் கருத்து வேற்றுமை காரணமாகப் பிரிந்துவிட, தன் பாட்டியார் லேடி நவஜிபாய் அவர்களின் அரவணைப்பில் வளர்ந்தவர் இவர்.

1962ல் கார்னல் பல்கலைக் கழகத்தில் கட்டமைப்புப் பொறியியல் பட்டம், 1975ல் ஹார்வர்ட் வணிகப் பள்ளியில் முதுநிலை மேலாண்மை பட்டம் என்று கல்வித் தகுதியில் தன்னை முன்னிருத்திக் கொண்டார் ரத்தன் டாட்டா. இதன் பயனாக ஐபிஎம் (International Business Machines Corporation) என்ற கணினியியல் நிறுவனத்தில் உயர் பதவி கிட்டியது. அந்த வேலையைப் புறக்கணித்துவிட்டு குடும்ப நிறுவனமான டாட்டா குழுமத்தில் பணிக்குச் சேர்ந்தார்.

‘முதலாளியோட பையன்‘ என்ற எந்த பந்தாவும் இல்லை; படாடோபம் இல்லை; ஆர்ப்பாட்டம் இல்லை, ஆணவம் இல்லை, ரத்தன் டாட்டா வெகு எளிமையானவராக, இயந்திரங்களை இயக்கும் தொழிலாளியாக, தலையில் சுண்ணாம்புக்கல் கூடை சுமப்பவராக, சூளைகளை இயக்குபவராகப் பல பணிகளில் ஈடுபட்டார். (பாட்டிக்கு நன்றி!)

அந்த ஆரம்பம், இன்று இந்தியாவில் எல்லா இடங்களிலும் காணக்கூடிய ஏதேனும் ஒரு பொருளாக டாட்டா குழுமத் தயாரிப்பு இருக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஆமாம், உப்பிலிருந்து கார்வரை (ஒரு லட்ச ரூபாயில் நானோ கார் என்ற அதிசயம் உட்பட) அத்தனை தயாரிப்புகள்! இவை மட்டுமா, உலகெங்கிலும் உள்ள ஹோட்டல்கள், ரசாயன நிறுவனங்கள், தகவல் தொடர்பு வலைத் தளங்கள் ஆகியவற்றை வாங்கி, இன்றுவரை வெற்றிகரமாக டாட்டா குழுமம் நிர்வகித்து வருகின்றன என்றால் அது ரத்தன் டாட்டாவின் முழுப் பங்களிப்பாலும், அர்ப்பணிப்பாலும் ஈட்டிய சாதனைகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

தொழில் துறை ஒரு பக்கம் இருக்க, சமுதாய நலனிலும் பெரும் அக்கறை கொண்டிருந்தவர் இவர். பல அறக்கட்டளைகளுக்குப் புரவலராகத் திகழ்ந்தவர். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் உட்பட அனைத்து மாணவர்களின் திறமையையும் அங்கீகரிக்கும் கல்வித் திட்டங்கள், அனைத்து மக்களின் உடல்நலனைப் பாதுகாக்கும் மருத்துவத் திட்டங்கள், கிராமப்புற வளர்ச்சிக்குத் தேவையான வேளாண்மை, நீர்வளம், கிடங்கு வரைமுறை முதலான திட்டங்கள் என்று எத்தனையோ சேவைகளை ஆற்றியிருக்கிறார் இவர். இதனாலேயே உலகளாவிய விருதுகள் பலவும் பெற்று, பாரதத்தின் உயர் விருதான பத்ம விபூஷண் பட்டமும் பெற்றவர்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இவருடைய அருந்தொண்டைப் பாராட்டும் வகையில் இவருக்கு விருதளித்துச் சிறப்பிக்க அழைத்தார். அதை ஏற்பதற்காகப் போக வேண்டிய சமயத்தில் தன் செல்ல நாய் நோய்வாய்ப்பட்டதால், அதை கவனிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்த டாட்டா, அந்த விருது நிகழ்ச்சியையே புறக்கணித்தார். அந்த அளவுக்குக் கருணை மிக்கவர் இவர்.

2008, நவம்பர் 26 அன்று தீவிரவாதிகளால் டாட்டா குழுமத்தின் மும்பை தாஜ் ஹோட்டல் தகர்க்கப்பட்டது. அதற்காக சோர்ந்து போய்விடாமல் அடுத்த ஒரே வருடத்தில் மீண்டும் அதே ஹோட்டலை முழுமையாகக் கட்டி முடித்தார். இதில் நெகிழ வைக்கும் அம்சம் என்ன தெரியுமா?

அந்த ஒரு வருட காலத்துக்கு, ஹோட்டலில் பணியாற்றிய எல்லா தரப்பு ஊழியர்களுக்கும் மாதா மாதம் தவறாமல் சம்பளம் வழங்கப்பட்டதுதான்! மீண்டும் ஹோட்டல் திறக்கப்பட்டபோது, அவர்கள் அனைவரும் கண்களில் நன்றி தளும்ப, முழு விசுவாசத்துடன் உழைக்க ஆரம்பித்ததுதான்.

ஆயிரம் விழுதுகள் கொண்ட ஆலமரம் போல தொழில் கிளைகளைக் கொண்டிருந்தாலும், நேர்மை, கண்ணியம், மனித நேயம் மிகுந்த ஒரு தலைவனால் எங்கும், எதிலும், யாருக்கும் எந்தக் குறையுமில்லாமல் விளங்கச் செய்ய முடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம், ரத்தன் டாட்டா. அவருடைய குணாதிசயங்களைக் கொஞ்சமாவது பின்பற்றுவதே அவருக்கு நாம் செலுத்தக்கூடிய உயரிய அஞ்சலியாகும்.

இது என்னது, வித்தியாசமான ரெசிபியா இருக்கே? ஆனா செம டேஸ்ட்! 

இந்த மூலிகையைப் பயன்படுத்தினால் உங்க முடியின் ஆரோக்கியம் வேற லெவலுக்கு மாறும்! 

அவசரத்துக்குக் கைக்கொடுக்கும் சில எளிய பாட்டி வைத்தியக் குறிப்புகள்!

உங்களை நாய் கடித்துவிட்டால் பதற வேண்டாம்… இவற்றை சரியாக செய்தாலே போதும்! 

தலைக்கு சீயக்காய் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

SCROLL FOR NEXT