கல்கி

சந்தோஷம்...

கே.ஆனந்தன்

"எலே  கருப்பசாமி... எவ்வளவு நேரமாடே இந்த ஒத்த மரத்துக்கு செர எடுப்ப?..நீ இந்த மரத்து மேல ஏறி கால் மணி நேரத்துக்கு மேல ஆகுதுடே...மணி பத்துக்கும் மேல ஆகுது... இன்னும் பாதி தோப்பு அப்படியே இருக்குது..சீக்கிரம் முடிச்சிட்டு வாடே..இன்னும் வவுத்துக்கு கஞ்சி காட்டல..பசி கொல்லுது.."

  கீழே இருந்து மேலே மரத்தை பார்த்து குரல் கொடுத்தான் கணேசன்..

  அந்த தோப்பின் முதலாளி சாமிக்கண்ணுவின் நம்பிக்கையை பெற்றவன்..முப்பது வருடமாக அவரின் தோட்டத்தில் வேலை செய்பவன்..

  வேலை செய்பவன் என்ன வேலை செய்பவன்?.. சாமிக்கண்ணுவுக்கு எல்லாமே அவன்தான்..அந்த கிராமத்தில் பெரிய தலை சாமிக்கண்ணு..நஞ்சையும், புஞ்சையுமாக நூறு ஏக்கர் நிலம்..அதில் பெரும்பான்மையானவை நெல்லும்,கரும்பும்,வாழையும் விளைபவை..ஐந்து கிணறுகள் வற்றாத கற்கண்டான தண்ணீருடன் முப்போகமும் இந்த காலத்திலும் விளைய செய்து கொண்டிருந்தன.

 அதில்லாமல் இந்த தென்னந்தோப்பு பத்து ஏக்கரில் ஒரே சதுரமாக ஒரு ஏக்கருக்கு 75 தென்னை  மரங்கள் சகிதமாக, மொத்தம் பத்து ஏக்கருக்கும் 750 மரங்கள்..எல்லாம் நன்றாக விளைய கூடியவை..

 இது எல்லாவற்றிற்கும் பொறுப்பு கணேசன்தான். சாமிக்கண்ணு எதிலும் தலையிட்டுக்கொள்ள மாட்டார். கணேசன் சொன்னால் சொன்னதுதான். அவன் மேல் அவ்வளவு நம்பிக்கை. தன் கடுமையான உழைப்பாலும்,நேர்மையாலும்,விசுவாசத்தாலும் நல்ல பெயரை வாங்கி இருந்தான் கணேசன். சாமிக்கண்ணுவுக்கு ஆல் இன் ஆல் கணேசன்தான்.

 "என்னடே சத்தத்தயே காணம். தூங்கிட்டியா?.." மேலே இருக்கும் கருப்பசாமியிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே மீண்டும் குரல் கொடுத்தான் கணேசன்..

 "ஆமா. மரத்து மேல ஏசி ஓடுது பாரு சில்லுன்னு..அப்படியே தூங்கிட்டேன்.. அட ஏண்ணே.. வெயில் மண்டய பொலக்குது..நானே மண்ட காய்ஞ்சிட்டு இருக்கேன்.."

   "அப்ப முடிச்சிட்டு வாடா சீக்கிரம்... இந்த நேரத்துக்கு பாதி தோப்பு முடிஞ்சிருக்கணும்.."

 "ஆமாண்ணே..நீ ஏன் பேசமாட்டே?.ஒவ்வொரு மரத்தையும் செர எடுத்து, சுத்தம் பண்றதுக்குள்ள போதும்,போதும்னு ஆயிடுது..மரத்து மேல கொஞ்ச கழிவா இருக்குங்கறே?.எல்லாத்தயும் சுத்தப்படுத்த வேணா?.நீ பார்த்துட்டுதான இருக்க?."கருப்பசாமி சொல்லிக் கொண்டே ஒரு காய்ந்த மட்டையை வெட்டி விட்டான்..மேலிருந்து காய்ந்து போய் கழிவாகி இருந்த கூராம்பாளைகளும்,பொதும்புகளும் கத்தையாக வந்து விழுந்தன. தள்ளி நின்று கொண்டான் கணேசன்.

   பொதுவாக தென்னை மரங்களை ஆண்டுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்..மரத்தின் பாளைகளில் இருந்து காய்க்காமல் உதிரும் பூ,பிஞ்சுகள் தென்னை மரத்து மட்டைகளின் இடைவெளிகளில் விழும். அவை அப்படியை மக்கும். மழை பெய்து அவற்றில் ஈரம் ஏற்படும்போது அவற்றில் இருந்து கிருமி வளரும். அவை புதிதாக வரும் பாளைகளை உறிஞ்சி அதன் சத்துக்களை சாப்பிட தொடங்கும். அதனால் பாளைகள் நோஞ்சானாகி சரியாக காய்க்காமல் போகும்.

  அப்படி கிருமிகளாக இருப்பதை சுத்தம் செய்து, வேண்டாத தென்னை மட்டைகளை வெட்டி எடுத்து,காய்க்காமல் இருக்கும் பாளைகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்..அப்படி செய்வதைதான கிராமங்களில்'செர எடுப்பது' என்று சொல்வார்கள்..செர எடுத்தால் புதிய பாளை முழுவதும் மரம் காய்ச்சி குலுங்கும்.

 செர எடுப்பதில் கில்லாடி கருப்பசாமி. ஊரில் இன்னும் நாலைந்து பேர் இருக்கிறார்கள்தான். ஆனால் அவர்கள் எல்லாம் இவனிடம் பிச்சை வாங்க வேண்டும்.

 தரையில் பாம்பு ஊர்வது போல, மரத்தில் பின்னி, பினைந்து ஏறுவகதாட்டும்,மட்டையையும்,வேஸ்டான பழைய பாளைகளை வெட்டி சுத்தப்படுத்தும் வேகமாகட்டும்..கருப்பசாமிக்கு ஈடு அவன்தான்..அதனால் கணேசன் எப்போதும் கருப்பசாமியையே கூப்பிடுவான்..

  கணேசனுக்கு பசி வயிற்றை கிள்ளியது..கருப்பசாமியும் காலையில் இருந்து சாப்பிடவில்லை..அவனை விட்டுவிட்டு சாப்பிடவும் மனமில்லை..ராத்திரி மனைவி மல்லிகா கொடுத்த நாலு வாய் களியை சாப்பிட்டது..அதற்கு பின் வாயில் பச்சை தண்ணீர் படவில்லை..எப்போதும் காலையில் குடிக்கும் நீச்ச தண்ணியும் இன்று குடிக்கவில்லை..

   வெயில் பொன்னை உருக்கி ஊற்றியது போல பிளந்து கொண்டிருந்தது..தட்டான் பூச்சிகள் கும்பலாக பறந்து கொண்டிருந்தன..'இது மழை வர்றதுக்கான அறிகுறியாச்சே..நேத்து நல்ல மழை..இன்னிக்குதான் இல்ல..பொழப்ப கெடுத்துடும் போலிருக்கே..'

  கணேசன் நினைத்துக் கொண்டிருந்தபோதே,கருப்பசாமி மரத்தில் இருந்து இறங்கிவிட்டான்..கிழிந்திருந்த லுங்கியை அவிழ்த்து நன்றாக கட்டிக்கொண்டான். தலையில் உருமாளையாக கட்டி இருந்த துண்டை அவிழ்த்து ஆறாக பொங்கிய வியர்வையை துடைத்துக் கொண்டான்..

  "எப்பா..என்னா வெயிலு..என்னா வெயிலு.." சொல்லிக் கொண்டே கிணற்றில் இருந்து வந்து வாய்க்கால் வழியாக நெல்லுக்கு பாய்ந்த தண்ணீரில் கை கால் கழுவிக் கொண்டான்..இருவருக்கும் அங்கிருந்த வாழை மரத்தில் இரண்டு வாழை இலைகளை அறுத்து எடுத்துக் கொண்டு சாப்பாட்டு டீபினியை எடுத்துக் கொண்டு வந்தான்..இருவரும் ஒரு தென்னை மரத்தடியில் அமர்ந்தார்கள்..

  "என்னடே..கருவாட்டு கொழம்பா உன்னுது?..வாசன மூக்க தொளக்கிதே?.."

  "ஆமாண்ணே..உன்னுது?."

 "என்னுது மீன் கொழம்புப்பா..நெத்திலி..நேத்து வாணியாறு டேமுக்கு போயிட்டு வந்தேன்ல..அப்ப வாங்கியாந்தேன்..இந்தா நீயும் சாப்புடு.."கணேசன் பாத்திரத்தை திறக்கும்போதே வாசனை மூக்கை முட்டி எச்சிலூற வைத்தது கருப்பசாமிக்கு..

   "இந்தாண்ணே கருவாட்டு கொழம்பு.."

  கருப்பசாமி கொடுக்க வாங்கி சோற்றில் ஊற்றி பிசைந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்..பழையதுதான்..ஆனாலும் தேவாமிர்தம் போல இனித்தது..

   நன்கு உழைத்து, நல்ல பசி நேரத்தில் சாப்பிடும் எந்த உணவும் தேவாமிர்தம்தானே?..

   "என்னடே?..இன்னைக்கு முடிச்சுடுவியா?.."

  "பார்க்கற இல்ல அடிக்கற வெயில..மத்தியானத்துக்கு மேல மரத்து மேல நிக்க முடியாதுண்ணே..நெறய வேல வாங்குது.." நெத்திலி மீன் ஒன்றின் முள்ளை உருவிக்கொண்டே சொன்னான் கருப்பசாமி..

  "அதுவுஞ் செரிதான்.."

  "அப்புறம்ணே.."

  "சொல்லு..எதுக்கு தயங்கற?.."

   "ஐயாகிட்ட என் மவன் காலேஜ் பீசுக்கு அட்வான்ஸ் பணம் கேட்டிருந்தனே?..பேசறேன்னு சொன்ன..என்னாச்சுண்ணே?."

  "ஓ..அதுவா..நேத்தே பேசிட்டேன்..தர சொல்லிட்டாரு..நாந்தான் மறந்துட்டேன்.." கணேசன் சொல்ல அவனை நெகிழ்ச்சியாக பார்த்தான் கருப்பசாமி..

  "ரொம்ப நன்றிண்ணே..நீயா இருக்கறதால கேட்டதும் சம்மதிச்சிட்டாரு..வேற யாரு போய் கேட்டிருந்தாலும் குடுத்துருக்க மாட்டாரு.."

  "விடுறா..நன்றி எல்லாம் எதுக்கு? நாளைக்கு வாங்கிக்க.."

  "சரிண்ணே..ஒன்ன நினைச்சா ஆச்சரியமா இருக்கு..வெளியூர்ல இருந்து பொழைக்க வந்தவன் நீ.. இவருகிட்ட சேர்ந்து முப்பது வருஷம் ஆகுமா?..இப்ப இவருக்கு எல்லாமா இருக்கற.. உன் பேச்ச தட்டறது இல்ல ஐயா.."

  கருப்பசாமி சொன்னதும் முகம் சுருங்கிப் போனது கணேசனுக்கு..இதயத்தில் சின்னதாக ஒரு வலி..

  "எண்ணண்ணே..தப்பா எதுனா சொல்லிட்டனா?.." கவனித்துவிட்ட கருப்பசாமி கேட்டான்..

 "இல்லடே. உண்மையத்தான சொல்ற? என்னோட பொறந்த ஊர்ல வாழ வழியில்லாம பஞ்சம் பொழைக்க இந்த ஊருக்கு வந்தவன்தான நானு? ஒண்ணுமில்லாம ஒண்ட வந்தவன்தான? .." இதயத்தின் வலியும், வேதனையும் அவன் வார்த்தைகளில் தெரிந்தது..

   "ஐயோ அண்ணே நான் தப்பா ஒண்ணும் சொல்லலை..அப்படி வந்த நீ உன் உழைப்பு, விசுவாசம், நேர்மை எல்லாவற்றிலும் காட்டி இந்த நிலைமைக்கு வந்திருக்க. உன்ன பார்த்தா ஆச்சரியமா இருக்கு அண்ணே ..உன்ன மாதிரி ஒருத்தர் அமைய ஐயா குடுத்து வச்சிருக்கணும்..."

  கணேசன் பேசாமல் சாப்பிட ஆரம்பிக்க, கருப்பசாமியும் சாப்பிட ஆரம்பித்தான்.

 இருவரும் சாப்பிட்டு முடித்து  தொட்டியில் கை கழுவி நிமிர்ந்தபோது மழை தூற ஆரம்பித்தது. இருவருக்கும் அதிர்ச்சி.

"என்னப்பா இது? ..மழை பேய்ஞ்சி கெடுக்குது. இன்னைக்கு முடியாது போலவே? .."கணேசன் கருப்பசாமி உடன் அதிர்ச்சியாக சொன்னான்..

  அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே மழை பெரிதாக பெய்ய ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்த கொட்டாய்க்கு இருவரும் வேகமாக ஓடினார்கள் ..

 அவர்கள் போனதும் மழை இன்னும் வேகமாக பெய்ய ஆரம்பித்தது.

  "நல்ல மழைண்ணே.."கருப்பசாமி சொல்ல,கணேசனின் காதில் விழுந்தாலும் ஒன்றும் பேசாமல் மழையை வெறிக்க ஆரம்பித்தான் அவன்.. 

  இதைபோல ஒரு மழைநாள்தானே அவன் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது? ஒரு வாரம் விடாமல் மோடமாக பெய்த மழைதானே அவன் சொந்த ஊரையும்,சொந்த பந்தங்களையும் விட்டுவிட்டு வேரோடு பிடுங்கி வந்து இங்கு நட்டது?..பிறந்து, வளர்ந்த ஊரில் இருந்த ஒரு குடிசையும், குடிசையில் இருந்த சாமான்களும் பெருகி ஓடி வந்த தண்ணீரில் அடித்துக் கொண்டு போக, தன் மனைவி, ஒரே வயது மகன் ஆகியோரின் உயிர்களை கையில் பிடித்துக் கொண்டு கட்டிய துணியோடு மூவரையும் வெறும் நம்பிக்கையையும், கையில் இருந்த தொழிலையும் நம்பி இந்த ஊருக்கு வர செய்தது?..

  இதோ... இங்கிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறதே வெங்கட சமுத்திரம்..அதுதான் அவன் சொந்த ஊர்..

  அன்று மழையில் சாய்ந்த பயிர் போல எல்லாவற்றையும் இழந்துவிட்டு,சாமிக்கண்ணுவின் வீட்டு வாசலில் வந்து நின்றது இன்னும் ஞாபகம் இருக்கிறது..

 அன்று மட்டும் அவர் ஆதரவளிக்காமல் இருந்திருந்தால்?..அப்பப்பா..கணேசனின் உடல் அச்சத்தால் நடுங்கியது..

  மழை இன்னும் விட்டபாடில்லை..

  "என்ன கணேசண்ணே?..பலமான சிந்தனை?.."

  "ஒண்ணுமில்லப்பா..பழைய ஞாபகம் வந்துடுச்சி.."

  "பழசை எல்லாம் நீ இன்னும் மறக்கல போல.."

  "எப்படி மறக்க முடியும் கருப்பசாமி?. சொந்த ஊரையும்,சொந்த பந்தத்தையும் விட்டுட்டு அசலூர்ல வாழற யாரும் அவ்வளவு சீக்கிரம் பழசை எல்லாம் மறக்க மாட்டாங்க..எல்லாம் இருந்தாலும் அவங்க அனாதை மாதிரிதான்..தெரிஞ்சுக்க.."

  "செரிதான்..ஆனா இங்க ஒனக்கு என்ன கொறச்சல் சொல்லு?..சாமிக்கண்ணு ஐயா ஒன்ன நல்லாத்தான வச்சிருக்கார்?..இங்க எல்லாமே நீ எடுக்கற முடுவுதான?..அவர் எதுலயும் தலயிடறது இல்ல..இங்க எல்லாமே நீதான?.."

 "உண்மைதான்..இங்க எல்லாமே நாந்தான்..ஆனா 

அது  இப்ப நாலைஞ்சு வருஷமாத்தான?..அதுக்கு முன்னால ரொம்ப கஷ்டப்பட்டிருக்கன்டே..இந்த அங்கீகாரமும் எனக்கு சும்மா கிடைக்கல கருப்பசாமி. அதுல என் முப்பது வருஷ உழைப்பு இருக்கு..என் முப்பது வருஷ வாழ்க்க இருக்கு..விசுவாசம்,நேர்மை எல்லாம் இருக்கு.."

   "செரிதான்.."

   "உங்களுக்கெல்லாம் சாமிக்கண்ணு ஐயாவ பத்தி கொஞ்சம்தான் தெரியும்..எனக்குத்தான் அவர முழுசா தெரியும்..இப்ப வேணா என்ன மரியாதய, கவுரவமா நடத்தலாம்..ஆனா அப்பெல்லாம் அப்படி இல்லடே..அவர் கொணம் எப்ப,எப்படி மாறும்னு யாருக்கும் தெரியாது..அவர் சொன்ன வேலய, சொன்ன நேரத்துல சரியா செஞ்சுடணும்..ஒரு சின்ன தப்பு  கூட நடந்துட கூடாது..அப்படி நடந்தா அவருக்கு பயங்கர கோவம் வந்துடும். எவ்வளவோ நாள் நான் அடி வாங்கி இருக்கறேன் தெரியுமா?..இதோ.." என்ற கணேசன் தன் சட்டையை தூக்கி முதுகை காட்டினான்..பெரிய தழும்பு இருந்தது..

 "ஒரு முற நம்ம மாடு ஒண்ணு பக்கத்து பொன்னுசாமி காட்டுல மேய்ஞ்சு பெரிய பிரச்சினை ஆயிடுச்சி..அப்ப 'இத கூட கவனிக்காம என்னடா பண்ணிட்டு இருந்தேன்னுட்டு சாட்டையால அடிச்சார்..இப்புடி வெளிய சொல்லாம ரணமா எத்தனயோ நெஞ்சிக்குள்ள இருக்குடே.."

  கருப்பசாமிக்கு தூக்கி வாரிப் போட்டது..சாமிக்கண்ணு அப்படிப்பட ஆளா?..

 "அப்பல்லாம் வாழ்க்கைல நான் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன் கருப்பசாமி..பல நாள் சாப்பாட்டுக்கே இல்லாம கஷ்டப்பட்டிருக்கன்டே..நீ நம்புவியா?..நம்பித்தான் ஆகணும்.."

   "நம்பறேன்.."

   "ஊரே பண்டிகை கொண்டாடும்..என் கைல பணம் இருக்காது..ஐயா சம்பளத்துக்கு மேல ஒத்த பைசா தர மாட்டார்..அப்ப கம்மி சம்பளம்தான?..எல்லாரும், புது துணி,பலகாரம்னு கொண்டாடறப்ப என்னால வேடிக்க மட்டும்தான் பார்க்க முடியும்..ஊரே தீபாவளி கொண்டாடறப்ப,என் மகன் சும்மா வேடிக்க பார்த்துட்டு நிப்பான்..அப்படியே மனச பிசையும்..பண்டிகைகள வெறும் வெற்றுப் பார்வையில கடக்கறது எவ்வளவு பெரிய கொடும தெரியுமா?.."

  "புரியுதுண்ணே.."

  "நான் யாருக்கும் தெரியாம பல நாள் அழுதிருக்கேன் வாழற வாழ்க்கையையும்,என் குடும்பத்தையும் நினைச்சி..சந்தோஷமோ,துக்கமோ..என் கண்ணுல இருந்து மொதல்ல அழுகைதான் வரும்.." கணேசன் சொல்லி நிறுத்தினான்..

   "ஒரு கட்டத்துல மனசு இறுகி கல்லாப் போச்சுப்பா..எதுவும் என்ன பாதிக்கல..அழுது,அழுது கண்ணும் வறண்டு போச்சு..எவ்வளவுதான் அழும்?.."

   "ஆனாலும் நான் ஒழைச்சேன்..நேரங் காலம் பார்க்காம நேர்மையா ஒழைச்சேன்..நான் ஒழைக்க சலிக்கலை..

  "ஒரு நாள் மானம் பொத்துக்கிட்டு ஊத்துது..வெளில ஒரு காக்கா குருவி இல்ல..மணி ஜாமம் பன்னண்டு இருக்கும்..அப்ப ஐயா கூப்புட்டதா ஒருத்தன் வந்து சொல்றான்..நெல்லு வயல்ல ஒடப்பு எடுத்துக்கிச்சாம்..அத அடைக்கத்தான் கூப்புட்டு இருக்கார்..எதுர்ல வர்ற ஆளு கண்ணுக்கு தெரியாத மழ..அதுல பொண்டாட்டிய தனியா வீட்ல விட்டுட்டு போய் அடச்சிட்டு வந்தேன்..இப்படி எவ்வளவோ சொல்லலாம்..என்ன நம்பி ரெண்டு உயிர் இருக்கு..காப்பாத்தி ஆகணுமேப்பா.."

  கருப்பசாமி அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.."

      "நான் நிர்கதியா நின்ன நேரத்துல எனக்கு வாழ்க்க தந்து ஆதரிச்சவர்..அந்த நன்றி விசுவாசம்..அத நான் இன்னும் மறக்கல..இன்ன வரைக்கும் எங்கிட்ட இருக்கு.."

  "அதாண்ணே ஒங்கள இங்க எல்லாமா உயர்த்தி இருக்கு.."

  கருப்பசாமி சொல்ல விரக்தியாக சிரித்தான் கணேசன்..

  " இப்ப 

எல்லாம் இங்க நான்தான்..என் கட்டுப்பாட்டுலதான்..ஆனா அடிமை மாதிரி கருப்பசாமி..அதிகாரமுள்ள அடிமைன்னு சொல்லிக்கலாம்..இப்பவும் அவருக்கு பயந்துக்கிட்டு,அவர் சொல்றத எல்லாம் செஞ்சிட்டுதான் இருக்கேன்.. அப்போ நான்

அடிமைதானே?..நெனச்சா சில சமயம் என்ன நெனச்சி கழிவிரக்கமா இருக்கும்டா..இப்படி அடிமை மாதிரி வாழறதெல்லாம் ஒரு பொழப்பாடா?..சில நேரங்கள்ல தோணும்..செத்துப் போயிடலாமானு..ஆனா என்ன நம்பி ரெண்டு ஜீவன் இருக்கே..காக்கா,குருவி கூட சுதந்திரமான வாழ்க்கய வாழத்தான்டா விரும்பும்..நாம மனுஷங்க..இப்படி வவுத்துப் பொழப்புக்காக எல்லாத்தயும் விட்டுட்டு அடிமை வாழ்க்கை வாழறோமேன்னு வேதனையா இருக்கும்..நம்ம உணர்ச்சிகளுக்கு மதிப்பிருக்காது..நம்ம சந்தோஷத்துக்கு எடமில்ல..இதா..இந்த மரத்துக்கும்,அதா..அந்த கல்லுக்கும்,என் பொழப்புக்கும் என்ன வித்தியாசம் சொல்லு?.."

   ''எனக்கு அப்ப இருந்து வருஷ சம்பளம்தான்..இப்ப வருஷத்துக்கு ஒண்ணரை லட்சம்..இதுவும் அவரா பார்த்து குடுக்கறதுதான்..பத்தலதான்..ஆனா ஒசத்தி கொடுங்கனு கேக்க கூட தைரியம் இல்ல..அப்ப நான் அடிமை இல்லாம வேற என்ன?..இதுல சந்தோஷப்பட என்னப்பா இருக்கு?.."

  "அப்படி இருந்தாலும் உங்க பையன நல்லா படிக்க வச்சு வெளியூருக்கு வேலைக்கு அனுப்பிட்டிங்க..என்ன வேலைண்ணே?.."

  மகனை பற்றி கேட்கவும் உற்சாகமானான் கணேசன்.

  "ஆமாப்பா..இந்த அடிமை பொழப்பு என்னோட போகட்டும்..என் பையனாச்சும் என்னை மாதிரி இல்லாம நல்லா இருக்கணும்னு ஆசைப்படறன்டே..என்ன வேலைனு

தெரியல..அவன் வேலைக்குப் போய் ஒரு மாசம்தான ஆகுது?.இன்னைக்கி வீட்டுக்கு வர்றதா ஃபோன்ல சொன்னான்..போனாத்தான் தெரியும்.."

   அடுத்த அரை மணி நேரத்தில் மழை நிற்க வீட்டுக்கு கிளம்பினார்கள் இருவரும்..

  கணேசனின் வீடு..வந்த மகனிடம் நலம் விசாரித்து விட்டு வேலை பற்றி விசாரித்தான் கணேசன்..

  "அது பெரிய கம்பெனிப்பா..அங்க நான் மேனேஜர்..எல்லா விஷயமும் என் கன்ட்ரோல்லதான்..அங்க எல்லாமே நான்தான்..முதலாளி எல்லாம் என் பொறுப்புலயே விட்டுட்டார்..எல்லா விஷயத்துலயும் நான் முடிவெடுக்கறதுதான்..

இங்க நீங்க எப்படியோ அங்க நான் அப்படி இருக்கேன்ப்பா.."

   "அப்படியா?.."

  "ஆமாப்பா..அப்புறம் இன்னொரு விஷயம்..வாழ்க்கைல நீங்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க..ஒழைச்சது போதும்..இனிமே வீட்ல இருங்க..நான் சம்பாதிச்சி ஒங்கள காப்பாத்தறேன்..வீட்ல சந்தோஷமா இருங்க.."

   சொன்ன மகனையே இரண்டு நொடிகள் இமைக்காமல் பார்த்த கணேசன் சொன்னான்..

   "வீட்ல இருக்கறதா?..நானா?..ஒழைக்கறவனுக்கு சந்தோஷம் எது தெரியுமா?..சாகற வரைக்கும் ஒழைச்சிட்டே இருக்கறதுதான்..ஒழைப்புதான் அவனுக்கு ஓய்வு..ஒழைப்புதான் அவனுக்கு சுவாசம் ..ஒழைப்புதான் அவனுக்கு எல்லாம்..என்ன சந்தோஷம்னா இனிமே நான் நிம்மதியா மூச்சு விடலாம்..ஆசுவாசமா இருக்கலாம்..என் மகனை படிக்க வச்சிட்டேன்..தலை நிமிர வச்சிட்டேன்..அவன் தலைமுறை இனி நிம்மதியா, சந்தோஷமா இருக்கும்..நான்தான் அடிமை மாதிரி இருந்துட்டேன்..என் மகன் அப்படி இல்லை..பத்து பேருக்கு தலைவன்..படிச்சவன்..பெரிய வேலைல இருக்கறவன்..இனி அவன் சொன்ன வேலையை செய்ய ஆளுங்க ஓடி வருவாங்க..இதான்யா எனக்கு நீ கொடுக்கற சந்தோஷம்.. இது ஆயுசுக்கும் போதும்யா.."

   சொன்ன கணேசன் வெளியில் வந்தான்..மழை மீண்டும் பேரிரைச்சலாய் கொட்ட ஆரம்பித்திருந்தது.

காவிரியில் கடைமுழுக்காடி ஜன்மாவை கடைத்தேற்றுவோம்!

நிதானமாக இருப்பதால் கிடைக்கும் லாபம் என்ன தெரியுமா?

NISAR - இஸ்ரோ - நாசா கூட்டு முயற்சியில் பேரிடர் கண்காணிப்பு செயற்கைக்கோள்!

துணிந்தாருக்கு துக்கம் இல்லை!

இயற்கையிடம் சுறுசுறுப்பை கற்றுக் கொள்ளுங்கள்!

SCROLL FOR NEXT