கலைஞரின் நூற்றாண்டுவிழாவினை ஒட்டி கல்கி இதழின் 80 ஆண்டு கால களஞ்சியத்தில் இருந்து நமது நிருபர் எஸ். சந்திர மௌலி மூழ்கி எடுத்த முத்துக்களின் தொகுப்பு.
2010ஆம் ஆண்டில் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பிரம்மாண்டமான முறையில் கோயம்புத்தூரில் நடைபெற்றது.
அப்போது, செம்மொழி மாநாட்டின் சிறப்பினை எடுத்துக் கூறும் வகையில் கலைஞர் முரசொலியில் ஆறு கடிதங்கள் எழுதினார். கல்கி வெளியிட்ட “செம்மொழி மாநாட்டு சிறப்பு மலரில், கலைஞரின் அந்த ஏழு கடிதங்களையும் சாராம்சத்தைத் தொகுத்து ஒரு கட்டுரை வெளியானது. அதன் முதல் பகுதியை நேற்று பார்த்தோம். இதோ அதன் தொடர்ச்சி:
மெய்ப்பட்ட கனவு 2..
நான்காவது முறையாக நான் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டபோது, தமிழ் செம்மொழி என்று உரிய முறையில் நிலைநாட்டி, மத்திய அரசில் கோரிக்கை வைப்பதற்கென ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர், முனைவர் ஜான் சாமுவேல் அவர்களால் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதை முனைவர் ச.சத்தியலிங்கம். முனைவர் வா.செ.குழந்தைசாமி. திரு.மணவை முஸ்தபா, முனைவர் அவ்வை நடராஜன், முனைவர் பொற்கோ போன்ற வல்லுனர்கள் ஏற்றுக் கொண்டனர். தமிழைச் செம்மொழியாக்க வேண்டும் என்று கழக அரசின் சார்பில் அனுப்பப்பட்ட இந்த அறிக்கை மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் ஆணையத்திற்கு பரிசீலித்துக் கருத்துரைக்குமாறு அனுப்பப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள பர்க்லி நகரில் அமைந்துள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1975 முதல் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருபவர் ஜார்ஜ் எல்.ஹார்ட், பேராசிரியர் இ.மறைமலை கேட்டுக் கொண்டதற்கிணங்க, 2000 ஏப்ரல் திங்களில் ஜார்ஜ் எல்.ஹார்ட் அவர்களின் தமிழ்மொழியைச் செம்மொழியெனக் கூறும் நிலைப் பாடு பற்றிய அறிக்கை- உலகெங்கிலும் உள்ள கல்வியாளர்களைப் பெரிதும் ஈர்த்தது. ஆங்கிலத்தில் வரையப்பட்ட அந்த அறிக்கை தமிழ்ச் செம்மொழி வரலாற்றில் ஓர் முக்கிய அத்தியாயமாகும்.
"தமிழ் ஒரு செவ்வியல் மொழி" என்ற கருத்தை நிலைநாட்ட நான் இது போன்ற ஒரு கட்டுரை எழுத வேண்டியுள்ளது என்ற எண்ணமே எனக்கு இயல்புக்கு மாறானதாகத் தோன்றுகிறது. இச்செயல் எப்படியிருக்கிறது என்றால், “இந்தியா ஒரு மிகப் பெரிய நாடு: இந்து சமயம் உலகின் மிகப் பெரிய சமயங்களில் ஒன்று"
என்னும் கூற்றை நிலை நாட்ட முற்படுவது போன்றுள்ளது" என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டார் ஹார்ட்'
"முக்கியமான உலக மொழிகளின் மொத்த எண்ணிக்கை அறுநூறு. அதிலே இலக்கணம். இலக்கியம் உடைய மொழிகள் முந்நூறு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை உடைய மொழிகள் ஆறு. அவை தமிழ், சீனம், சமஸ்கிருதம், லத்தீன், ஹீப்ரூ, கிரீக். தமிழ்மொழி ஒன்றுதான் மனித சிந்தனைகளை, நுண்ணிய உணர்வுகளைப் பிசிறில்லாமல், அழுத்தம் திருத்தமாகத் துல்லியமாக உணர்த்தும் ஆற்றல் கொண்ட மொழி என்று மொழியியல் தந்தை டாக்டர் எமினோ கூறியிருக்கிறார்.
ஐரோப்பாவை மொழி வழியிலே அறிந்து கொள்ள வேண்டுமென்றால், இலத்தீன், ஹீப்ரூ, கிரீக் மொழிகளின் துணைத் தேவைப்படுவதைப் போல, இந்தியாவை அறிந்துகொள்ள தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளின் துணை தேவை. இந்திய மொழிகளுக்குத் தாயாக இந்த இரு மொழிகளும்தாம் உள்ளன.
திராவிட மொழி ஒப்பிலக்கணம் கண்ட கால்டுவெல் என்கின்ற போறிஞர், அவரைத் தொடர்ந்து பல ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, தமிழ் மொழி செம்மொழி ஆக்கப்பட வேண்டுமென்று முதன் முதலாகக் குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞர், அவர்களைத் தொடர்ந்து தமிழ்ச் சங்கங்கள் பல; தமிழ்ப் புலவர்கள் பலர்: தமிழ்ப் போறிஞர்கள் பலர்; இப்படி நூற்றுக்கணக் கணக்கில், ஆயிரக்கணக்கில், இந்த ஒரு நிலையினை நாம் எய்துவதற்காகப் பாடுபட்டிருப்பதை எண்ணிப் பார்க்கும்போது, அவர்களுக்கெல்லாம் தெரிவிக்க வேண்டிய பாராட்டுதல்களை, வழங்க வேண்டிய நன்றியை என் வாயிலாக வழங்கி வருகிறார்கள். நான் ஒரு கருவி: இந்தக் கருவியைத் தமிழ்நாட்டு மக்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்,
தமிழர்களின் நூற்றாண்டுக் தனவு நனவானது. தமிழ் செம்மொழியெனப் பிரகடனமாயிற்று. செம்மொழிக்கு நாம் அடுத்தடுத்து ஆற்ற வேண்டிய பணிகள் அணி அணியாக உள்ளன. அவற்றுக்காக நம்மை ஆயத்தப் படுத்திக் கொள்வோம்.
(செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்' என்ற தலைப்பில் முதல்வர் எழுதிய ஏழு கடிதங்களிலிருந்து...)
தொகுப்பு: ப்ரியன்
கல்கி 27.06.2010 இதழிலிருந்து
தொகுப்பு: எஸ். சந்திர மௌலி