ஓவியம்: மாருதி 
கல்கி

சிறுகதை - கனவு கண்ட வாழ்க்கை!

கல்கி டெஸ்க்

-கிருஷ்ணா

ஏ.சி. டூ டயர் ரயில் பயணம். அரசாங்க ஊழியனுக்குத் தரப்படும் எல்.டி.சி சலுகை. என் சம்பள உயர்வினால், இந்த வருடம் முதல் இரண்டாம் வகுப்பு ரயில் பயணத்திலிருந்து ப்ரமோஷன்.

பம்பாயில் அக்கா வீடு. நான், மனைவி, ஐந்து வயது மகனுடன் பத்து நாள் ஓசி சாப்பாட்டுக்குக் கிளம்பிவிட்டேன்.

ஏ.சியின் ஜில், என்னைவிட செழுமை உடையணிந்த பயணிகள், திரைச்சீலைகள் கொஞ்சம் மிரளத்தான் வைத்தன.

எதிரே மொழு மொழு முகத்துடன் ரிஷிகபூர் ஜாடையில் ஒரு குஜராத்தி, பைஜாமா, ஜிப்பாவில் பக்கத்திலிருந்த வெண்ணைய்யுடன் பேசிக்கொண்டிருந்தான்.

வெண்ணெய் அவன் மனைவி. அந்த பொத, பொத உடம்புவாகிலும் வசீகரம் இருந்தது. நிறமா இல்லை பணத்தின் மினுமினுப்பா?

மன்னார்குடியில் (கை) பிடித்த என் மனைவியைப் பார்த்தேன். உருளைக் கிழங்கு பக்கத்தில் வைத்த கருணைக்கிழங்கு! பெருமூச்சு விட்டேன்.

தடக், தடக், தடக்! லய சுத்தமாய் ரயில் ஓடிக்கொண்டிருந்தது.

ஏ.சி.யின் பிரமிப்பு நீங்கி, பார்வையைத் தூரமாக்கினேன்.

அட, அது யார்? நடைபாதையை ஒட்டிய பெர்த்தில், எனக்குக் கொஞ்சம் தள்ளி.... ராதிகாதானா அது?

என் பார்வை உறுத்தலில் திரும்பியவளின் கண்களிலும் சட்டென ஒரு மலர்ச்சி.

ராதிகாவேதான்! புன்னகை செய்தாள்!

ஆறு வருடம் கழித்து சந்திக்கும் புன்னகை. இன்னமும் அதிக சதை போடாமல் அழகாய்த்தானிருந்தாள்.

கல்யாணம்? கழுத்து, காலை ஆராய்ந்தேன். ஆகவில்லை போலிருக்கிறதே?

சின்ன குரூர திருப்தி எனக்குள் பரவியது.

"மாலு டியர், காப்பி வேணுமா?"

என் பிரியத்தை சற்று உரக்கக் காண்பித்தேன் .

வியப்புடன் பார்த்தாள் என் சகதர்மிணி.

"தலைவலின்னு சொன்னியே."

அமிர்தாஞ்சனம் கைப்பையில் இருந்தது. எடுத்து நீட்டினேன்.

"நான் வேணும்னா நீவி விடவா நெற்றியை?" மாலுவின் வெட்கத்தைப் புறம் தள்ளி, மிக வாஞ்சையுடன் பணி செய்தேன்.

அவ்வப்போது என் பார்வை ராதிகா பக்கம் சென்று மீண்டது.

கவனிக்கிறாள்! அல்ப சந்தோஷம் என் நாடிகளில்.

"உங்களைக் கல்யாணம் செஞ்சுண்டா, நான் கனவு காணும் வாழ்க்கை அமையாது."

முகத்திலடித்தாற்போல எப்படிச் சொன்னாள்.

மைக் டைசன் குத்து விடுவதைவிட வலிமையாய் என் முகத்தைப் பதம் பார்த்த பதில். முகத்தை மட்டுமல்ல நெஞ்சையும்தான்.

தமிழ் வாத்தியாரின் மூன்றாவது பெண்ணுக்கு வந்த திமிரைப் பாரேன். எனக்கு என்ன குறைச்சல்?

ஒரே பையன். சின்ன வீடானாலும் சொந்த வீடு. அரசாங்க குமாஸ்தா. பிக்கல், பிடுங்கல் இல்லாத உறவு. கசக்கவா செய்யும்?

ஏதோ பார்க்க பளிச்சென்று இருக்கிறாளே என்று கேட்டால் 'கனவு காணும் வாழ்க்கையாம்'.

அவள் கனவில் இடி விழ! அப்போது சபித்தது வீண் போகவில்லை.

முதல் இரண்டு பெண்களின் கல்யாணச் செலவிலேயே போண்டியாகிப் போனார் இவள் அப்பா.

பணத்துக்கு எங்கே போவார் இவள் கல்யாணத்துக்கு? எவனும் வந்திருக்க மாட்டான். அப்படி வந்தவனையும் ஏதாவது சொல்லி விரட்டியிருப்பாள் ஆரம்பத்தில். இப்போது தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதையாய்...

என் கற்பனை தந்த மகிழ்ச்சியில் ராதிகாவை நோக்கினேன்.

கற்பனை என்ன, பிராக்டிகலாய் பார்த்தால் நான் நினைத்ததுதான் உண்மையாகி இருக்க வேண்டும்.

இவள் எங்கே ஏ.சி. கூப்பேயில்? பட்டப் படிப்பு தந்த அரசாங்க உத்யோகமாயிருக்க வேண்டும், என்னைப் போலவே!

பிரயாணம் முழுவதும் பாசமுள்ள, நேசமுள்ள, பிரியமுள்ள பதியாக நடந்துகொள்ள ஆரம்பித்தேன்.

நடுநடுவில் சிறு புன்னகைப் பரிமாற்றம் மட்டுமே எங்களுக்குள். ராதிகாவும் பேச யத்தனிக்கவில்லை, வலிய வந்து. தாழ்வுணர்ச்சியோ?

காப்பி, சாக்லேட், சிப்ஸ், ஐஸ்கிரீம்.... என்று வேட்டு விட்டேன் பணத்தை. என் மகனுக்கும், மனைவிக்கும் எனது திடீர் 'கர்ணன்' வேடம் புதுமையாயிருந்தது. சந்தோஷமாயும் இருந்தது.

"யாருங்க அது? அப்பப்ப உங்களைப் பார்த்துச் சிரிக்கறா அந்தப் பொண்ணு?"

பெண்களாயிற்றே? ஜாக்கிரதை உணர்வு அதிகம்!

"என் கிராமம். எதிர்வீட்டுல இருந்தது அவ குடும்பம். அப்புறம் பட்டணத்துக்குப் போயிட்டாங்க. ஆறேழு வருஷமாச்சு பார்த்து."

மாலுவின் குணமே அலாதி. எப்போதும் ஏதாவது பேசிக்கொண்டிருக்க வேண்டும். திறந்த வாய் மூடாத அரட்டைக்காரி. சுவாரஸ்யமாகவும் பேசுவாள். சட்டென யாருடனும் ஒட்டிக்கொள்வாள்.

புளியஞ்சாதத்தைப் பிரிக்கும்போது கேட்டே விட்டாள்.

"அவளையும் சாப்பிடக் 'கூப்பிடுங்களேன்'."

"எதுக்கு? ஒண்ணும் வேண்டாம்."

சடாரென எழுந்தாள். நேரே ராதிகாவிடம் சென்றாள். இரண்டே நிமிடம்! சேர்ந்து விட்டார்கள். நேரே இங்கேயே கூட்டி வந்து விட்டாள்.

எனக்குத்தான் சங்கடம். கூடவே சந்தோஷம்.

''மாலும்மா, மாலு டியர்."

வாய் நிறைய அழைத்தேன்.

ஓவியம்: மாருதி

"நல்லா சாப்பிடணும். உனக்குப் பசி தாங்காதே." கட்டிய மனைவிக்கே உபசரிப்பு.

ராதிகா மகா அழுத்தக்காரி. புன்னகையை முகத்தில் மாட்டிக் கொண்டபடி அருகில் அமர்ந்து புளி சாதத்தை ருசித்தாள்.

வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும், உள்ளுக்குள் நிச்சயம் ஏங்குவாள்!

என் மனசுக்குள் சமாதானம்.

"உங்களுக்குக் கல்யாணமாயிடுச்சா?"

மாலு கேட்டே விட்டாள். ஆவலாய்க் காத்திருந்தேன்.

ராதிகா என்னைப் பார்த்தபடி சொன்னாள்.

"இல்லை."

"ஏன்?"

"இனிமேதான் யோசிக்கணும்."

யோசிக்கணுமா? நல்ல சமாளிப்புதான்! என் குதூகலத்தில் புளிசாதம் இரண்டி பிடி கூடவே உள்ளே போனது.

"மாலு, உன் கைமணமே அலாதி. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். நான் பாக்கியசாலி."

வேண்டுமென்றே வம்பிழுத்தேன். பழிக்குப் பழி!?

"வேலை பார்க்கறீங்களா?"

தலையசைத்தாள் ராதிகா.

"என்ன வேலை?"

"நான் கனவு கண்ட வேலை."

"கனவு?"- திடுக்கிட்டுப் பார்த்தேன்.

"சின்ன வயசிலேயிருந்தே என் கனவு அது. இருபது வயசிலே எல்லாப் பொண்ணுங்க மாதிரியும் கல்யாணம் பண்ணிண்டு, கணவனுக்கு மட்டும் சேவைன்னு இல்லாம, ஊருக்கு உபயோகப்படற மாதிரியான வேலையிலே சேரணும்னு ஆசை. சேர்ந்துட்டேன்."

ஏதோ கரடி விடுகிறாளே!

"என்ன வேலை அது?"

"கலெக்டர் வேலை. டிரெயினிங் முடிஞ்சாச்சு. மகாராஷ்டிராவிலே போஸ்டிங். என்னோடது பெட்டர் சாய்ஸ்தானே?''

ராதிகா, கேட்டபடி என்னைப் பார்த்தாள். அதே மாறாத புன்னகையுடன்.

குறுகிப்போய் தலைகுனிந்தேன் நான்.

பின்குறிப்பு:-

கல்கி 25  பிப்ரவரி 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

இது தெரிஞ்சா சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கவே மாட்டீங்க! 

விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோமா குட்டீஸ்!

உங்கள் மகிழ்ச்சிக்கு தடையாய் நிற்கும் 8 பழக்க வழக்கங்கள் என்ன தெரியுமா?

இளையராஜா வந்தவுடன்தான் உயிர் சென்றது… அதுவரை ஊசலாடியது – மலேசியா வாசுதேவன் மகள் ஓபன் டாக்!

காலை உணவை தவறாமல் உண்பதால் கிடைக்கும் 5 நன்மைகள்!

SCROLL FOR NEXT