ஓவியம்; வேதா 
கல்கி

சிறுகதை – பொருத்தம்!

கல்கி டெஸ்க்

-சத்யா ஸ்ரீனிவாசன்

"பையன் பேரு சுந்தரராஜன். ராஜாவாட்டம் இருப்பான். மெக்கானிகல் இன்ஜினியரிங் டிப்ளமா. யார்கிட்டேயும் கை கட்டி வேலை செய்யப் பிடிக்கலேன்னு தனியா மெக்கானிகல் ஷாப் வச்சு நடத்திட்டிருக்கான். பையன் ரொம்ப குணவான். எந்தத் தப்பான பழக்கமும் இல்லாதவன். பையனுக்கு அப்பா அம்மா இல்லை. அண்ணா - மன்னிதான். அதிகம் எதிர்பார்க்க மாட்டா. முக்கியமா உங்க பொண்ணோட நட்சத்திரத்துக்கு ரொம்பப் பொருத்தமான பையன்."

- தரகர் பையனின் படிப்பையும் வாழ்வையும் சொன்னபோதே சுமதிக்குக் கசந்தது.

சுமதி எம்.காம். பட்டதாரி. கூடவே சி.ஏ.ஐ.ஐ.பி டிப்ளமா பெற்றுப் பெரிய வங்கியொன்றில் அதிகாரியாக இருப்பவள். நல்ல அழகி. அப்பா ரிடையர்டு டீச்சர். மகள் கல்யாணத்திற்காக ஓரளவுக்குச் சேர்த்தும் வைத்திருந்தார். ஆனால் சுமதியின் 'நட்சத்திர தோஷம்' எந்த வரனும் தகையாமல் போய்க்கொண்டிருந்தது. ஒத்துவந்த இரண்டொரு வரன்களும் கேட்ட 'விலை' மிகவும் அதிகமாக இருக்கவே, இருபத்தெட்டு வயதாகியும் சுமதியின் கழுத்து காலியாகவே இருந்தது.

சுமதியின் கற்பனைக் கணவன், அழகாக உடுத்தி, ஏ.ஸி. ரூமில் அமர்ந்து, காரில் பயணம் செய்து, வசதியாக வாழ்பவன். காலையில் அவளைக் கொண்டு வந்து ஆபீஸில் 'டிராப்' செய்துவிட்டு, மாலையில் அவளை
'பிக்-அப்' செய்துகொண்டு பீச், டிராமா என்று சுற்றக்கூடியவன்.

ஆனால் தரகர் சொன்ன சுந்தரராஜனோ, நிச்சயமாக அப்படியெல்லாம் இருக்கப் போவதில்லை. 'க்ரீஸ்' கறை படிந்த அழுக்கு காக்கி பேண்ட் - சட்டையில் கண்ணாடி தம்ளரில் டீ உறிஞ்சிக்கொண்டு…

சுமதிக்குக் குமட்டிக்கொண்டு வந்தது.

அப்போதே 'இந்த வரன் வேண்டாம்' என்று அப்பாவிடம் சொல்லிவிடலாமா என்று பார்த்தாள்.

"மொதல்லே பையனை நீ பாரு. அவன் உன்னைப் பார்க்கட்டும். அப்புறம் பேசலாம். அதுவும் உனக்குப் பொருந்தி வர்ற நட்சத்திரம் கிடைக்கிறதே அபூர்வம். பேசாம இரு...'' என்று அப்பா வாயை அடைத்துவிடுவார் என்று தோன்றியது. மௌனமாக இருந்தாள். எப்படியும்  தன்னை மீறி எதுவும் நடந்துவிடாது என்பது அவளுக்குத் தெரியும்.

பெண் பார்க்கும் தினத்தன்று –

வரனும், அவனுடைய அண்ணா மன்னியும் வீட்டில் நுழையும்போதே ஜன்னல் வழியாகப் பார்த்த சுமதிக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது.

'இவனையா 'ராஜாவாட்டம் இருப்பான்' என்று சொன்னார் தரகர்?' என்று எரிச்சலுற்ற சுமதிக்கு, 'ராஜா என்ன, ராஜா வீட்டுச் சமையலறை எடுபிடியாகக்கூட இவனை எடுத்துக்கொள்ள மாட்டார்கள்' என்று தோன்றியது.

சுமதியை விடக் குறைவான உயரம். வெள்ளை வேஷ்டி, சட்டையில் தொட்டால் ஒட்டிக்கொள்ளுமோ என்று பயப்படும் அளவுக்குக் கறுப்பு நிறம். இந்த லட்சணத்தில் முகத்தில் அம்மைத் தழும்புகள் வேறு.

படிப்பு இல்லை; சிறிதும் அழகில்லை; அந்தஸ்து இல்லை. எவ்விதத்திலும் தனக்கு ஈடில்லாத இந்த வரனை இங்கே அழைத்து வர அந்தத் தரகருக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும் என்று நினைத்த சுமதிக்கு, ஆத்திரம் பீறிட்டுக் கொண்டு வந்தது. நாலு பேர் முன்னிலையில் கலாட்டா செய்யக்கூடாது என்று அமைதி காத்தாள் சுமதி. ஆனால் முகத்தில் குடிகொண்டுவிட்ட கடுகடுப்பை மட்டும் அவளால் மறைக்க முடியவில்லை.

'வந்தவர்கள்' வாசலைத் தாண்டிய உடனே அப்பாவையும் தரகரையும் பிலுபிலுவெனப் பிடித்துக்கொண்டாள் சுமதி.

"இப்படி எல்லாம் என்னை யார் தலையிலயாவது கட்ட வேணாம். நான் ஒண்ணும் 'உங்களைக் கல்யாணம் பண்ணி வைங்க'ன்னு கேக்கலே. இனிமே நீங்க எனக்காக வரன் பார்க்கவே வேணாம். எனக்கு ப்ராப்தம் இருந்தால் தானே நடந்துட்டுப் போறது. அதுக்காக இப்படி எந்தப் பொருத்தமுமே இல்லாத ஓர் ஆளைக் கட்டிக்க நான் தயாரா இல்லை..." திட்டவட்டமாகத் தன் முடிவைக் கூறினாள் சுமதி. அம்மா விடவில்லை.

"அப்படி என்னடீ குறை கண்டுட்டே அந்தப் பையன்கிட்டே? வெள்ளை பாண்ட், ஷர்ட் போட்டுக்கிட்டு ஆபீஸ்லே போய் உட்கார்ந்து பார்க்கறதுதான் உத்தியோகமா? பையன் சுயமா தொழில் பண்ணி, சொந்தக் கால்லே நிக்கறான். அது தப்பா? உன்னைவிட, அவன் அதிகமாவே சம்பாதிப்பான்னு தோணுது" என்றவள், "அழகு என்னடீ பெரிய அழகு? ரெண்டு குழந்தை பெத்துண்டியானா நீயும் பாட்டி மாதிரி ஆயிடுவே. அதெல்லாம் நிலையானது இல்லே குணம்தான் முக்கியம். அவன் தன்னோட அண்ணா - மன்னியோட நடந்துக்கறதைப் பார்த்தாலே சந்தோஷமாயிருக்கு. நிச்சயம் நல்ல பையன்தான். இவனைப் பண்ணிண்டா நிச்சயம் ஓஹோன்னு இருப்பே. அவ்வளவுதான் என்னாலே சொல்ல முடியும்" என்றாள் நிஷ்டூரமாக.

"சுமதி நீ படிச்ச பொண்ணு. உனக்கு விவரமாச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லே. நட்சத்திரம் பொருந்தி வர்றது. அவங்களும் அதிகமா டிமாண்ட் பண்ற மாதிரி தெரியலே. 'பொண்ணுக்குச் சம்மதம்னா தேதியைக் குறிக்கலாம்னு' பையனோட அண்ணா சொல்லிட்டுப் போயிட்டாரு. 'போயி லெட்டர் போடறோம்'னு பந்தா எல்லாம் பண்ணலே. யோசிச்சுப் பாரும்மா" என்றார் அப்பா.

'இதிலே யோசிக்க ஒண்ணுமில்லே. என் முடிவு முடிவானதுதான்' என்றது சுமதியின் இறுக்கமான முகம்.

 ரண்டாவது நாள்.

'மாப்பிள்ளையிடமிருந்து வந்த கடிதத்தைக் கண்டு இடிந்து போய் உட்கார்ந்திருந்தார் சுமதியின் தந்தை. சுமதியோ துள்ளிக் குதித்தாள்.

''பார்த்தீங்களா அப்பா, நல்ல பையனின் லட்சணத்தை? அவருடைய மெகானிகல் ஷாப்பை 'இன்ஜினியரிங் ஷாப்'பாக மாற்ற ஒரு லட்சம் தர முடியுமான்னு கேட்டிருக்காரு. 'கடன்'கற வார்த்தையை யூஸ் பண்ணி யிருக்காரு. ஆனா மறைமுகமா அவரு கேக்கறது வரதட்சணை. இப்ப என்ன பண்றதா உத்தேசம்? ஒரு லட்சம் கொடுத்தாவது, என்னைத் தள்ளிவிடறதா எண்ணமா? நீங்க பைத்தியக்காரத்தனமாச் செய்யறதா இருந்தாலும் நான் நிச்சயம் சம்மதிக்க மாட்டேன்..." கொக்கரித்தாள் சுமதி.

''பையன் நிறம் மட்டும்தான் கறுப்புன்னு நினைச்சேன். மனசும் கறுப்புன்னு இப்பத்தான் தெரியுது. இப்பவே ஒரு லட்சம் கூசாமே கேக்கறவன், நாளைக்கே மறுபடியும் ஏதாவது கேட்டு உன்னைக் கண்கலங்க வைக்க மாட்டான்னு என்ன நிச்சயம்?" என்றவர், "சரிம்மா. இன்னிக்கே அவன் நாக்கைப் பிடுங்கிக்கற மாதிரி திட்டி லெட்டர் எழுதிப் போட்டுடறேன்" என்றார்.

ந்தோஷமாக ஆபீஸை அடைந்த சுமதி அங்கே தனக்காகக் காத்திருந்த சுந்தரராஜனைக் கண்டதும் அதிர்ந்தாள்.

'ஏன் இங்கே வந்திருக்கிறான்? கடிதத்தின் விஷயத்தை நேரடியாகச் சொல்லி, அவளை இப்போதே ஏதாவது லோன் போட்டுத் தா என்று கேட்க வந்திருப்பானோ' என்று தோன்றியது. அதனால் பல்லைக் கடித்தப்படி அவனைக் காணாதவள்போல் மடமடவெனத் தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்துகொண்டாள்.

அவள் எதிரே வந்து அங்கேயிருந்த இருக்கையில் அமர்ந்த சுந்தரராஜன்,

"கங்கிராஜுலேஷன்ஸ்" சுருக்கமாக. என்றான்

'எதற்கு?' என்று புரியாமல் விழித்த சுமதியைப் பார்த்துக் கலகலவெனச் சிரித்த அவன் தொடர்ந்தான் :

"உங்க விருப்பத்திற்கு மாறா இந்தக் கல்யாணம் நடக்காது இல்லே? அதுக்குத்தான்" என்று அவன் மற்றொரு புதிர் போட்டதும், 'என்ன சொல்கிறான் இவன்?' என்று நிமிர்ந்து உட்கார்ந்தாள். அவனே விளக்கினான் :"என்ன மேடம், முழிக்கிறீங்க?" ஒரு லட்சம் ரூபாய் கேட்டு என் லெட்டர் வந்ததா? உங்க அப்பா அம்மா மனம் வெறுத்து, இந்த வரன் வேண்டாம்னு முடிவுக்கு வந்திருப்பாங்களே...?" என்றவன்,

"தரகர் உங்களைப் பத்தின எல்லா விவரங்களையும் சொன்னப்பவே இது பொருந்தாத கல்யாணம். நிச்சயமா நடக்காதுன்னு எனக்குப் பட்டது. ஏன்னா, என்னுடைய பர்சனாலிட்டி, படிப்பு, தொழில் எதுவுமே உங்க டேஸ்ட்டுக்கு ஒத்துவராதுன்னு தெரிஞ்சது. வேண்டாம்னு தரகர்கிட்டே சொன்னேன். ஆனா அண்ணா - மன்னிக்கு ஆசை. அவங்கதான் என்னை எடுத்து வளர்த்தவங்க.

"நட்சத்திரப் பொருத்தம் இல்லாததாலதான் அந்த பொண்ணோட கல்யாணம் தள்ளிட்டே போகுதாம். உனக்கும் இப்படியொரு நட்சத்திரப் பொண்ணு கிடைக்கறது கஷ்டம். பகவான் ப்ராப்தம் இதுதான் நடக்கணும்னு இருந்தா, யார் தடுத்து நிறுத்த முடியும், பொண்ணைப் போய்ப் பார்த்துட்டு வருவோமே, இதிலென்ன தப்பு'ன்னு, என்னைப் பெண் பார்க்க வரச் சம்மதிக்க வச்சுட்டாங்க. ஜன்னல் வழியா என்னைப் பார்த்தீங்களே, அப்பவே உங்க முகம் சுருங்கிப் போனதைக் கவனிச்சேன். அப்புறம் காப்பி கொடுக்கறப்போ பார்த்தேன்.

"நான் உங்களை மாதிரி பி. ஜி. டிகிரி ஹோல்டர் இல்லேன்னாலும் ஓரளவுக்குப் படிச்சவன்தானே? நாலு பேரோட பழகறேன் இல்லே? உங்க மனசு புரிஞ்சுபோச்சு. உங்க அப்பா அம்மா கட்டாயத்துக்காகத்தான் பெண் பார்க்கிற சம்பிரதாயத்துக்கே ஒத்துக்கிட்டிருப்பீங்கன்னு பட்டது. என்னதான் படிச்சு, சம்பாதிக்கிற பொண்ணா இருந்தாலும், அப்பா அம்மாவுக்குக் கட்டுப்படற பொண்ணுன்னு புரிஞ்சுபோச்சு. அவங்க கட்டாயப்படுத்தினா கல்யாணத்துக்கும் சம்மதிச்சுடுவீங்கன்னு தோணித்து. அப்படி உங்க வாழ்க்கையைப் பாழடிக்கறதுலே எனக்கு விருப்பம் இல்லே. 'உங்களுக்கு ஏத்த, எல்லாத்திலயும் பொருத்தமான வரன் கிடைக்கணும்னு நீங்க ஆசைப்படறது தப்பில்லே. அது உங்க உரிமை. ஆனா அந்த உரிமையை நிலை நாட்டிக்கற சக்தி உங்களுக்கு இல்லேன்னு பட்டது. ஸோ, உங்களுக்கு விருப்பமில்லாத இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாதுன்னா, அதைச் செய்ய என்னாலே மட்டும்தான் முடியும்னு பட்டது.'பொண்ணு பிடிக்கலேன்னு' காரணம் சொன்னா, உங்க அப்பா - அம்மா மனசு கஷ்டப்படும். ஏன் ஒருவேளை உங்களுக்கே கூட, 'இவன்கூட நம்மை வேணாம்னு சொல்லிட்டானே'ன்னு எப்பவாவது தோணும். அதையெல்லாம் அவாய்ட் பண்ணத்தான் 'ஒரு லட்சம்' டிமாண்டு வைத்தேன். ஆனா, பொய்யாக்கூட 'வரதட்சணை'ங்கற அசிங்கமான வார்த்தையை யூஸ் பண்ண மனம் ஒப்பலே. அதான் 'கடன்'னு எழுதினேன்... ம்... எப்படியோ உங்களுக்குப் பிரச்னை ஸால்வ் ஆனதில் சந்தோஷம்தானே...!'' என்று எழுந்தான் சுந்தரராஜன்.

சுமதியின் கண்களில் நீர் பளபளத்தது.

 பின்குறிப்பு:-

கல்கி 16 ஜனவரி 1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Motivational Quotes: உங்களை மனதளவில் வலிமையாக்கும் 12 மேற்கோள்கள்! 

இரவு உணவுக்குப் பின் செய்யக்கூடாத 6 தவறுகள் தெரியுமா?

செரிமான உறுப்புகளின் ஆரோக்கியம் காக்க கார்போஹைட்ரேட்ஸ் தரும் 6 நன்மைகள்!

பிரம்ம தேவனால் நடத்தப்பட்ட திருப்பதி பிரம்மோத்ஸவத்தின் வரலாறு தெரியுமா?

இந்தியத் திருமணங்களில் எதிர்காலம்… சுமையா? சுலபமா?

SCROLL FOR NEXT