ரமேஷ் செல்போன்ல பேசிக்கொண்டே மோட்டார் சைக்கிள வேகமா ஓட்டிட்டு வந்தான். இதப் பார்த்த போக்குவரத்து போலீஸ் அதிர்ச்சி அடைஞ்சாங்க. அவன அவங்க வழிமறித்து நிறுத்தினாங்க. அவன் தன்னோட வண்டிய ரோட்டின் ஓரமா நிறுத்தினான். அவனிடமிருந்து போலீஸ் அவனுடைய ஃபோனை வாங்கியது. வண்டியின் சாவியையும் எடுத்தது.
அவன போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டுப் போனாங்க. அங்க அவன அவங்க பாணியிலேயே விசாரிச்சாங்க. அப்பத்தான் தெரிஞ்சது வண்டியோ, ஃபோனோ அவனோடது இல்லன்னு. அந்த வண்டி கோவிந்தன் என்பவர் பெயரில் இருந்தது. அந்தப் போன் நம்பரை கேட்டா, அதுவும் அவனுக்குத் தெரியல. போலீஸ் துருவித் துருவிக் கேட்க, ரமேஷ் விஷயத்த சொன்னான்.
“நான் வந்துகொண்டே இருந்தேன். வழியில் ஒரு பெரியவரு மொபைல்ல பேசிட்டே வந்தாரு. அவரிடமிருந்து அதைப் பிடுங்கினேன். அவரு ஃபோனை லாக் செய்யல. அதனால என்னால ஃபோன் பண்ணிக்க முடிஞ்சது. அவர் துரத்திட்டே வந்தார். என் வேகத்துக்கு அவரால ஓடி வர முடியல. ஒரு வழியா அவருகிட்டேந்து தப்பிச்சேன்.
கொஞ்ச தூரம் ஓடி வந்தேன். வண்டியில வந்த ஒருத்தரிடம் லிப்ட் கேட்டேன். குடுத்தாரு. ஒரு இடத்துல, பால் பாக்கெட் வாங்க வண்டிய நிறுத்தினாரு. ஆனா பாருங்க, சாவிய வண்டியிலேயே என்ன நம்பி விட்டுட்டுப் போனாரு. அந்த வண்டியிலதான் நான் போயிட்டு இருந்தேன். போற வழியில உங்ககிட்ட மாட்டிக்கிட்டேன்.”
போலீஸ் அவன மேலும் விசாரிச்சாங்க. அப்பத்தான் விவரங்கள் தெரிஞ்சது. ரமேஷ் வீட்டுக்கு ஒரே பிள்ள. அப்பா, அம்மா யாரும் இப்ப இல்ல. அன்றாட சாப்பாட்டுக்கே வழி இல்ல. ஏதோ ஒரு தூரத்துச் சொந்தக்காரர் வீட்டுல தங்கி இருக்கான். ஆனா, அவங்களுக்கும் இவனோட நடவடிக்கை சமீபகாலமா பிடிக்கல. அதனால, அவன ’வீட்டை விட்டு போ’ன்னு சொல்லிட்டாங்க...
ஆசைப்பட்டத எல்லாம் செஞ்சான். நல்லது, கெட்டதுன்னு அவன் எதையும் உணரல. இதுவரையில எந்தக் குற்றத்திலும் அவன் மாட்டிக்கவே இல்ல. அவனுக்கு வயது 15தான். எனவே, கோர்ட்டுக்கு அழைத்துப்போய் அவனுக்குத் தண்டனையெல்லாம் வாங்கித் தர முடியாது. இதை மட்டும் அவன் நல்லாவே தெரிஞ்சு வைச்சுருந்தான். அவனுக்கான ஒரே புகலிடம் இனி சிறுவர் சீர்திருத்த பள்ளிதான்.
அரை மணி நேரத்துல சீர்த்திருத்த பள்ளியோட காப்பாளர் பழனியாண்டி போலீஸ் கூப்பிட்டதால போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தாரு. போலீஸ் நடந்த விவரத்தைச் சொல்லி ரமேஷ அவரிடம் ஒப்படைச்சாங்க. எல்லா ஃபார்மலிடியும் முடிஞ்சது. பழனியாண்டி அவன தன்னோட ஜீப்லே ஏத்திட்டு சீர்திருத்த இல்லம் நோக்கி புறப்பட்டாரு.
‘பல இளஞ்சிறார்களுக்கு வாழ்க்கை இப்படித்தான் அமைந்து விடுகிறது. வாலிப வயதில் வழிகாட்டி, அவங்களுக்கு உதவ நல்ல உறவுகள் இருப்பதில்லை. இந்நிலையில் வறுமையின் கோரப்பிடியில் மாட்டிக்கொள்றாங்க. ’சட்டத்தால தன்ன தண்டிக்க முடியாது’ன்னு தெரிஞ்சு. அதனால எல்லாவகையான குற்றங்களிலும் ஈடுபடுறாங்க. இது அவர்களின் குற்றமா? பெற்றோரின் குற்றமா? சமூகத்தின் குற்றமா?’ என்று எண்ணிக்கொண்டே பழனியாண்டி தன் பயணத்தைத் தொடர்ந்தார்.
வருடா வருடம் தம் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவது குறித்து அவருக்கு மிகுந்த வருத்தம்தான். அவருக்கு மட்டுமல்ல, நமக்கும் தான். ரமேஷ குற்றவாளியாக்கியது யார்? அவனது நட்பா? குடும்பமா? சமூகமா? எனக்குத் தெரியல. உங்களிடம் விடையிருந்தால் சொல்லுங்களேன், ப்ளீஸ்.