கல்கி

“தீராக் காதல்” ஸ்ரீ முத்ராலயா நிறுவனர் கலைமாமணி லக்ஷ்மி ராமஸ்வாமி!

அனுராதா கண்ணன்

க்திகளைக் கொண்டாடும் நவராத்திரியை இனிதே நாம் கற்கும் கலைகள் யாவும் வளர்பிறைச் சந்திரன்போல் வளர்ந்து பரிமளிக்க வேண்டி 'விஜயதசமி' அன்று கல்வி, கலைகளுக்கு அதிபதியாம் ஸ்ரஸ்வதி தேவியை வணங்கி மகிழ்கிறோம்.  இவ்வேளையில், “நாட்டியத்தின் மீது எனக்கு தீராக் காதல்”என்று கூறும் ஒருவரைச் சந்திப்போமா?

ஸ்ரீ முத்ராலயா நடனப்பள்ளி தனது முப்பதாவது ஆண்டை வரும் நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி கொண்டாடுகிறது. அதன் இயக்குனர் மற்றும் தலைவர், நடனக் கலைஞர், கலைமாமணி டாக்டர் லக்ஷ்மி ராமஸ்வாமி அவர்களைத் தான் நாம் சந்திக்கப் போகிறோம். மலரும் நினைவு களாகத் தம் நடனப் பயணத்தை  மகிழ்ச்சியுடன் நம்முடன் அசை போடுகிறார் அவர்.

எந்த வயதில் நீங்கள் நடனம் கற்றுக்கொள்ளத் தொடங்கினீர்கள்? உங்களுக்குக் கிரியா ஊக்கியாக அமைந்தது யார் அல்லது எது?

ங்கள் பூர்வீகம் திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதி. என் தாய்க்கு நடனம் கற்கும் ஆசை இருந்தது. அவரது அக்காலச் சூழல் அதற்கு இடம் தரவில்லை. தனக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்தால் நிச்சயமாக அவளுக்கு நடனம் கற்பிக்க வேண்டும் என்பது என் தாய் எடுத்த முடிவு. அப்படியே நானும் பிறந்து, என் முதல் பிறந்த நாளுக்குப் பரிசாக வந்த பணத்தில் என் தாய் வாங்கி வைத்தது ஒரு நெத்திச் சுட்டி.

அப்பாவும் எனக்குப் பெரிய பலமாக இருந்திருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு என் நாட்டியத்திற்கு உறுதுணையாக இருப்பவரையே வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் சென்னைக்கு
வரும் சமயத்தில் எல்லாம் எனக்காக நடனம் சார்ந்த புத்தகங்களைத் தேடித் தேடி வாங்கி வருவார்.

என் பெற்றோர்கள் எனக்குப் பக்கபலமாக இருந்ததுபோலவே என் கணவரும், என் மகனும், என் கணவரின் வீட்டினரும் என் நாட்டியம் குறித்துப் பெருமையுடன், எப்போதும் என் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள்.

குரு பத்மஸ்ரீ சித்ரா விஸ்வேஸ்வரன்

உங்களுடைய குருவின் எந்தத் தன்மை, நடனத்தின் மீதான உங்களுடைய ஈடுபாட்டை அதிகரித்தது?

த்மஸ்ரீ சித்ரா விஸ்வேஸ்வரன் அவர்களைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால் ஒரு தனிக் கட்டுரைதான் எழுத வேண்டும். நாட்டியம் என்பது அழகான ஆடை அணிவது, உடலை வெறுமனே அசைப்பது அல்லது கண்ணுக்கு விருந்தாக ஒரு நிகழ்ச்சி வழங்குவது மட்டுமல்ல, நாட்டியத்தின் உட்கருத்தை, உயிரோட்டத்தைப் புரிந்துகொள்வதும்கூட என்பார். அவருடைய மாணவியர் அனைவருமே குரு செய்வதை அப்படியே செய்கிறோம் என்பதோடு, என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்பதை உணர்ந்தவர்கள். தனியாக நடனம் ஆடினாலும் குழுவில் ஒருவராக ஆடினாலும், நம் பங்கைத் தெரிந்து ஆடுவது…  நாட்டியத்தில் பொதிந்துள்ள பல்வேறு அடுக்குகளையும் பல வகைக் கோணங் களையும் ஆழமாக நோக்குவது… இப்படிப் பல உயரிய நாட்டியத்திற்கான பண்புகளையும் அவரிடம் கற்றோம்.

அவர் உருவாக்கி இருக்கும் நூலகம் எப்போதும் அவருடைய மாணவர்களுக்காகத் திறந்திருக்கும். நடனத் துறையைப் பொறுத்தவரை நாம் கற்க வேண்டிய விஷயங்கள் எண்ணிலடங்கா. உடைகள், பயன்படுத்தும் வண்ணங்கள், மேக்கப், ஒலி-ஒளி, பின்னணி அமைப்புகள், கோயிலில் ஆடப்போகிறோமா, சபா மேடைகளில் ஆடப்போகிறோமா, எந்த ஊரில் ஆடப்போகிறோம்…  என நாட்டியம் பற்றிய ஒரு முழுமையான கண்ணோட்டத்தை வழங்குவதுதான் அவருடைய தனிச்சிறப்பு.

இந்திரா கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன்

நாட்டியத்தில் மேன்மை அடைய நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?

ரதநாட்டிய மார்க்கத்திற்கு என்னைச் சரியாக வழிநடத்தி பத்தே மாதங்களில் என்னை அரங்கேற்றத்திற்குத் தயார் செய்தவர் திருமதி இந்திரா கிருஷ்ணமூர்த்தி. தொலைக்காட்சி மட்டும்தான் சென்னைக்கும் எங்களுக்குமான ஒரு தொடர்பாக இருந்தது. மண் மேட்டால் ஆன நெல்லை சங்கீத சபாவில்தான் என் அரங்கேற்றம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு சென்னை வந்தபோது, சித்ரா அக்காவை கைக்குழந்தையோடு சென்று சந்தித்தேன். மாணவியரைத் தேர்ந்தெடுப்பதில் அவர் மிகவும் கவனமாக இருப்பார். என் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு என்னை மாணவியாக ஏற்றுக்கொண்டார். வீடு, நடன வகுப்பு, மீண்டும் வீடு இதுதான் என்னுடைய உலகமாக இருந்தது.

திருமதி கலாநிதி நாராயணன் அவர்களிடம் 'அபிநய' வகுப்புகளை மேற்கொண்டதில் என் வாழ்க்கை ஒரு மாற்றம் பெற்றது. டாக்டர் பத்மா சுப்ரமணியம் அவர்கள் எல்லோருக்கும் 'கர்ணங்கள்' கற்றுத் தர முன்வந்தபோது, 'ந்ருத்யசாலி' என்ற அந்த வகுப்பில் என்னை இணைத்துக்கொண்டேன். நடனக் கலைஞர் ஸ்வப்ன சுந்தரி அவர்களின் நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும். லீலா சாம்ஸன் அவர்களுடைய 'ஸ்டேஜ் பிரசன்ஸ்' அலாதியானது. திருமதி நந்தினி ரமணி அவர்களிடம் இரண்டு மூன்று பாட்டுகளை நேரடியாக கற்றிருக்கிறேன். இவர்கள் அனைவருமே தத்தம் கலைத்திறமையால் என்னை ஈர்த்தவர்கள். என் வளர்ச்சிக்குக் காரணமானவர்கள்.

ரகுராமன் மற்றும் திருமதி வானதி ரகுராமன்

தமிழ் மொழியின் மீதான ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இணைந்தது என் வாழ்க்கையில் ஒரு மைல் கல் என்று சொல்லலாம். திருமதி வானதி மற்றும் ரகுராமன் இருவரிடமும் கிடைத்த  அறிமுகம் இலக்கியத்தின் பால் என்னைக்கொண்டு சேர்த்தது.

பள்ளி நாட்களில் தமிழ் என்றாலே காத தூரம் ஓடுவேன். நான் கல்லூரியில் பி.காம். தேர்ந்தெடுத்துப் படித்ததுகூட தமிழுக்குப் பதிலாக வேறு ஒரு பாடத்தை எடுக்கலாம் என்பதனால்தான். ஆனால், ரகுராமன் அவர்களைச் சந்தித்தபிறகு எப்படி என் உலகமே தலைகீழாக மாறியது என்பது பெரிய ஆச்சரியம். தமிழ் மொழியின் அழகைத் தெரிந்துகொள்ள இவ்வளவு காலம் பிடித்ததே என்று வருந்தினேன். அவர் தொல்காப்பியம் தொடங்கிப் பல நூல்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். என் ஆராய்ச்சிக்கு மூலகாரணம் அவர்தான். "நாட்டியத்தில் உனக்கு என்ன பிடிக்கும்?" என்று அவர் என்னைக் கேட்டபோது,  "நாட்டியத்தில் உள்ள நாடகத் தன்மை எனக்கு மிகவும் பிடிக்கும்" என்று கூறினேன்.  "இதைப் படி" என்று ஒரு நூலைத் தந்தார். அது 'கூத்த நூல்'. முழுமையானதொரு இலக்கண நூல். என் ஆராய்ச்சிக்கான அடிப்படையாகவும் 'கூத்த நூல்' அமைந்தது.

கலைமாமணி விருது

சங்க இலக்கியங்களை அடிப்படையாக வைத்து நீங்கள் தயாரித்த நாட்டிய நாடகங்கள் குறித்துக் கூறுங்களேன்…?

சென்னை இசைக்கல்லூரியின் தலைவராக திருமதி ராஜேஸ்வரி  அவர்கள் இருந்தபோது, தமிழில் ஏதாவது எடுத்துச் செய்ய முடியுமா என்று கேட்டார். சங்கத் தமிழ் இலக்கியத்திலிருந்து 'நற்றிணை'யை எடுத்துக் கொண்டேன்.  நற்றிணையின் 400 பாடல்களையும் எனக்கு பாடமாக எடுத்தார் ரகுராமன். நற்றிணையை ஆதாரமாக வைத்து 'சங்கமும்  சங்கமமும்' என்ற முழு நேர நாட்டிய நாடகத்தை 2006 ஆம் ஆண்டு, என்னிடம் இருந்த மிகக் குறைந்த அளவு மாணவர்களை வைத்துத் தயாரித்து வழங்கினேன். பேராசிரியர் எஸ் ராமநாதன் அவர்களின் புதல்வி திருமதி வானதி ரகுராமன் இதற்கு இசை அமைத்தார். இந்த நாட்டிய நாடகத்தை இயல் இசை நாடக மன்றத்தின் அன்றைய தலைவர் குன்னக்குடி திரு. வைத்தியநாதன் அவர்கள் மகிழ்ந்து பாராட்டினார்.

சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவில் புதுமையாக ஏதாவது செய்யலாமே என்று பேராசிரியர் பி எம் சுந்தரம் அவர்கள் சொன்னபோது 'தூது இலக்கியம்' செய்ய எண்ணம் ஏற்பட்டது. சிதம்பரத்தின் நாயகன், 'ஆடல் அரசன் நடராஜன்'தான் தலைவன். தலைவனுக்குத் தூதாக தலைவி (அம்பாள்) தன் சலங்கையை அனுப்பலாமே என்ற எண்ணம் ஏற்பட்டபோது, 'சிலம்பு விடு தூது' என்ற தலைப்பில் ரகுராமன் எழுதித் தந்தார். தலைவனும் ஆடுபவனாக இருப்பதால், தூதாக வரும் சிலம்பிற்கு பெருமதிப்பு தந்து அது சொல்வதைக் கேட்பார் என்ற பொருளில் அமைந்து மிகுந்த பாராட்டைப் பெற்றுத் தந்தது இந்தப் படைப்பு. சிதம்பரம் நடராஜர் பேரில் வந்த முதல் தூது இலக்கியம் என்று பாராட்டினார் பி எம் சுந்தரம் அவர்கள். 40 நிமிடங்கள் தயாரித்து வழங்கிய இந்தப் படைப்பை, பின்பு, 'ஸ்ரீ கிருஷ்ண கான சபை'யின் நடன விழாவில்,  ஒரு முழு நீள நாட்டிய நாடகமாக வழங்கவும் வாய்ப்பு கிட்டியது. இப்படி எல்லையில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நதிபோல என்னுடைய தமிழ் ஆர்வம் மிகுந்து,  மேடையில் படைப்பாக மலர்கிறது.

இருநூறுக்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களைத் தயாரித்து வழங்கி இருக்கிறீர்கள். உங்களுடைய வித்தியாசமான புதிய முயற்சிகளைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்?

தோண்டத் தோண்டச் சுரங்கமாக இருக்கிறது நம் இலக்கியங்கள். இதுவரை யாரும் அறிந்திராத, தொடாத இலக்கியத்தை எடுத்துச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கி, அதுவே, ஒரு போதையாக மாறிப்போனது.

புத்திசாலித்தனம் என்பது பற்றி வகுப்பில் பேச்சு வந்தபோது,  அதுவே, 'ஆளாவது எப்படியோ?' என்ற படைப்பாக உருவானது. குழந்தையை வெட்டிக் கொடுத்த சேனாபதியார், மனைவியைத் தீண்டாமல் இருந்த திருநீலகண்ட நாயனார் மற்றும் கண்ணப்ப நாயனார் என்ற மூன்று சைவ அடியார்களைப் பற்றியது. தளபதி, குயவன், காட்டுவாசி என்ற எந்த பேதமும் இறைவனுக்கு இல்லை. அவன் எதிர்பார்ப்பது பக்தர்களின் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வு ஒன்றைத்தான் என்பதே இதன் கருப்பொருள். முதன்முதலில் ராஜ்குமார் பாரதி அவர்களுடன் குழுவாக இணைந்ததும் அப்போதுதான்.

கலைமாமணி டாக்டர் திருமதி ருக்மணி ரமணி அவர்கள் எழுதி, ராஜ்குமார் பாரதி அவர்கள் இசையமைத்து 'சுந்தரகாண்டம்' வழங்கினோம். என்னுடைய மாணவர்கள், அவர்களுடைய மாணவர்கள் என்று 54 பேர் கொண்ட படைப்பு இது. சீதாதேவிக்கே திருப்புமுனையாக அமைந்தது சுந்தரகாண்டம் என்பது நமக்குத் தெரியும். இதில் பங்கு கொண்டவர்கள், பார்த்தவர்கள் என அனைவருக்கும் நிறைய நன்மைகள் கிட்டின என்பதை அறிந்ததும் காலம்காலமாக இருந்துவரும் நம்பிக்கை மேலும் உறுதி பெற்றது.

'சப்தவிடங்கஸ்தலம்' என்ற எங்களது படைப்பில் தேவாரங்களை மேடைக்குக் கொண்டு வந்தோம். இதில் திருநள்ளாறு ஸ்தலத்தை எடுத்துக்கொண்டபோது 'நளன்' கதையோடு முடித்தோம். முசுகுந்த சக்கரவர்த்தியும் நாரதரும் 'கதை சொல்லி'யாக பூலோகத்திற்கு இறங்கி வந்து, சப்தவிடங்க ஸ்தலங்களுக்கும் நம்மை ஒரு தெய்வீகப் பயணம் மேற்கொள்ளச் செய்வதுபோல அமைந்தது இப்படைப்பு.

ராஜ்குமார் பாரதியுடன்

கிளியை மையப்படுத்தி பல நாட்டிய நாடகங்கள் அரங்கேற்றி இருக்கிறீர்கள். அதைப் பற்றி?

ம்பாள் கையில் உள்ள கிளியைத் தூதாக அனுப்பலாமா என்ற வகையில் ஒரு கவிதையைப் படிக்க நேர்ந்தது. ஏற்கனவே தூது இலக்கியம் செய்திருந்தபடியால் ஒரு வர்ணம் அமைக்க முடிவு செய்தேன். "ஒரு பக்தை அம்பாளுக்குக் கிளியை தூதாக அனுப்புகிறார். ஆயிரம் கரங்கள் கொண்ட அன்னையின் அத்தனை கரங்களிலும் ஆயுதங்கள். அதற்கிடையே உன்னை மட்டுமே அன்போடு, பரிவோடு அவள் காதருகே வைத்திருக்கிறாள். உன்னை விட என் அவஸ்தைகளை அவளிடம் கொண்டு செல்ல யாரால் முடியும்?"  என்ற எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில். காஞ்சி பல்கலைக்கழகத்தின் டாக்டர் சங்கரநாராயணன் என்பவர் தெலுங்கு மொழியில் இதற்கான வரிகளை எழுதித் தந்தார். ராஜ்குமார் பாரதி அவர்கள் இசையமைக்க 2015 ஆம் வருடம் லண்டனில் இந்த வர்ணத்தை வழங்கினேன்.

மத்திய அரசின் உதவியுடன், கிளியை மையப்படுத்தி, 'சுக மார்க்கம்' என்ற முழு படைப்பும் பின்னாளில் உருவானது.  அனுமனின் வழிகாட்டலுடன், ஒரு கிளியின் உதவியுடன் ஸ்ரீராம லக்ஷ்மணர்களை துளசிதாசர் அடையாளம் கண்டுகொள்ளும்படியான ஒரு சூழ்நிலையை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட நாட்டிய நாடகம் இது.

சுக மகரிஷிக்கும் ரம்பைக்கும் இடையே ஒரு சம்வாதம். நமது 5 இந்திரியங்களும் சிருங்கார ரசத்தை அனுபவிக்கத்தான் என்று வாதாடும் ரம்பைக்கு, நம் ஐந்து இந்திரியங்களும் இறைவனைத் தரிசிக்க, அவனைப் பற்றிய விஷயங்களைக் கேட்க, அவருடைய நாமத்தை உச்சரிக்க என்று சதா இறைச்சிந்தனையில் மூழ்குவதற்குத்தான் என்று 'சுகர்' போதிக்கிறார்.

புரந்தரதாசர் எழுதிய ஒரு பாடலை தில்லானாவாக வழங்கினோம். அவருடைய மகன் உயிர் தவறிய சமயம், கிளியை உயிராகவும் உடலைக் கூண்டாகவும் உருவகப்படுத்தி, சுதந்திரம் கூட்டிற்குள் அடைப்பட்டுக் கிடக்கும்போது கிடைக்கிறதா அல்லது கூண்டைவிட்டு வெளியே பறக்கும்போது கிடைக்கிறதா என்று கேட்பதுபோல இது அமைந்தது. நான்கு வருடங்கள் இதற்காக உழைத்து 2018 ஆம் ஆண்டு ஜனவரி  மாதம் 'சுக மார்க்கம்' என்ற இப்படைப்பை மேடை ஏற்றினோம்.

பரீட்சார்த்த முறையிலும் சில விஷயங்களை நான் செய்ய முயற்சித்திருக்கிறேன். சங்கீத கலாநிதி Dr. S. ராமநாதன் அவர்களின் நூற்றாண்டைக் கொண்டாட 'ராமநாதம்' என்ற ராகத்தில் ஒரு ஜதிஸ்வரம் இயற்றினோம். ஆரோகணத்தில் 'ராமப்பிரியா' அவரோகணத்தில் 'ஹம்சநாதம்' ராகங்களைக் கொண்டு ராஜ்குமார் பாரதி அவர்கள் இதை இயற்றினார். பஞ்சாட்சரத்தின் மேல் ஒரு பல்லவி இயற்றி பஞ்சநடையில் வழங்கியது, மஹிஷாசுரமர்த்தினியின் கதையை சிம்ஹ நந்தன தாளத்தில் அமைத்து 'சிம்ஹ நந்தினி' என்று பெயரிட்டு ஒரு அலாரிப்பு, அருணகிரிநாதரின் திருப்புகழில் கவுத்துவம், திருமால், முருகன் இருவரையும் போற்றும்வகையில் சிலேடையாக, கல்யாணி மற்றும் வசந்தா இரண்டு ராகங்களை இணைத்து 'கல்யாண வசந்தம்' ராகத்தில் தில்லானா எனப் பல.

'ஜகம் நீ அகம் நீ' என்ற தலைப்பில், இலங்கையில் ஒரு நவராத்திரியின்போது 9 நாட்களும் நிகழ்ச்சிகள் வழங்கினோம். 9 ராகங்களின் பெயர்கள் வரும் வகையில் 'நவராக மாலிகை'யாக, துர்கா-லட்சுமி-சரஸ்வதி ஆகிய மூன்று சக்திகளையும் கொண்டாடி, துர்கா, பாலினி, சிவசக்தி, கனகாங்கி, கமலா மனோகரி, அம்ருதவர்ஷிணி, சரஸ்வதி, பூர்ணசந்திரிகா, கல்யாணி ஆகிய ராகங்களில் அமைத்திருந்தார் ரகுராமன்.

இது தவிர 'சூரியன்' பெயரில் ஒரு 'சப்தம்'. சூரியகாந்தம், கீர்ணாவளி, ஜோதீஸ்வரூபிணி ஆகிய ராகங்களில் ரகுராமன் எழுதியதை இசையமைத்திருந்தார் அவருடைய மனைவி வானதி ரகுராமன்.

ஓவியர் கேஷவ் அவர்களின் ஓவியங்களை வைத்து  ஒரு தனி நடன நிகழ்ச்சி வழங்கினேன்.

இந்த ஆண்டும் இசை நாட்டிய விழாவிற்கென பிரத்தியேகமாக நிகழ்ச்சி வழங்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். இறை அருளோடு அதுவும் நிறைவேற வேண்டும்.

நாட்டியம் கற்கும் மாணவர்கள்

நாட்டியம் கற்கும் இந்நாள் மாணவர்கள் பற்றி…

நாட்டியம் கற்கும் மாணவர்கள் பலருக்கும் அவர்கள் போகும் திசை தெரிகிறது. திறமைசாலிகளாக, புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நிறைய 'எக்ஸ்போஷர்' இருக்கிறது. நான் எதையும் மேலோட்டமாக கற்றுத் தருவது கிடையாது. நாட்டியத்தோடு நம் வரலாறு, கலாசாரம், ராகம், கதை அல்லது தத்துவம் எதுவாக இருந்தாலும், எதையும் எனக்கென்று வைத்துக்கொள்ளாமல் கற்றுத் தருகிறேன். அவரவர் தன்மைக்கேற்றாற்போல அவர்களும் கிரகித்துக்கொள்கிறார்கள்.

தன்னம்பிக்கையோடு, குருவின் பேரில் நம்பிக்கையோடு வரும் குழந்தைகள் நல்ல வளர்ச்சி காண்கிறார்கள். ஒவ்வொரு குழந்தையையும் பார்த்து, புரிந்து அவர்களுடைய சுவைக்கேற்றாற்போல், அவர்களுடைய ரசனைக்கேற்றாற்போல் கற்றுத் தருகிறேன். 'என் குழந்தையின் வாழ்க்கையில் பெரிய மாறுதலை ஏற்படுத்தி இருக்கிறீர்கள்' என்று பெற்றோர்கள் சொல்லும்போது அதுவே எனக்குக் கிடைத்த பெரிய விருதாக உணர்கிறேன். தாயும் குருவும் வேறல்ல என்ற உண்மையும் புரிகிறது.

ஸ்ரீ முத்ராலயாவின் இதரப் பணிகள் குறித்து...?

கொரோனா காலகட்டத்தில் 18 மாத டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி வகுப்பைத் தொடங்கினேன். அதன் இறுதியில் நடன சமுதாயத்திற்குப் பயன்படும் வகையில், இந்தப் பயிற்சி வகுப்பை மேற்கொண்ட 9 மாணவர்கள் ஒன்பது பிரிவுகளில் நாட்டிய இலக்கணம் குறித்து எழுதிய கட்டுரைகளைத்  தொகுத்து 'லக்ஷண லகரி' என்று புத்தக வடிவில் கொண்டு வந்திருக்கிறது 'ஸ்ரீ முத்ராலயா'. செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று வெளியிடப்பட்டது.

ரகுராமன் அவர்கள் தமிழில் எழுதிய புத்தகத்தை 'ஹிஸ்டரி ஆஃப் தமிழ் டான்ஸ்' என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறேன். அவருடைய 'நடன கலைச்சொல் களஞ்சியம்', 'Shall we know Natya' என்ற தலைப்பில் 25 கட்டுரைகள் கொண்டு நான் எமுதிய புத்தகம்,  தவிர, தமிழ்நாடு நாடக மன்றத்தின் நிதி உதவியுடன் 'கூத்த நூல் சுவை'யை 'இந்திய பாரம்பரியத்தின் சுவை' என்ற தலைப்பில் வழங்கி இருக்கிறேன்.

ஒரே துறையில் சக எண்ணம் கொண்ட நண்பர்கள் இணைந்து 'பிரயத்தனம்' எனும் ஒரு அமைப்பை உருவாக்கினோம். அடுத்த தலைமுறை ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையில் ஒரு புத்தகம் ஒன்று வெளியிட்டிருக்கிறோம். டாக்டர் ஜெ ஜெயலலிதா நுண்கலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆசிரியர் பயிற்சிக்கான ஒரு டிப்ளமா ஒன்றும் வழங்குகிறோம். நடனம் பயிலும் மாணவியருக்கு 'கிரேட்' (grade) தேர்வுகளும் இதன்மூலம் நடத்துகிறோம். பிரயத்தனம் நடத்தும் ஒரு YouTube சேனலும் உள்ளது.

‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்ற எண்ணத்துடன் ஒவ்வொரு நாளையும் எதிர்கொண்டு செயல்படுகிறேன்.

நவம்பர் மாதம் 5-ஆம் தேதி சென்னை வாணி மஹாலில் நடக்கவிருக்கும் ஸ்ரீ முத்ராலயா நடனப் பள்ளியின் வெற்றிவிழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்து விடைபெற்றார் Dr.லக்ஷ்மி ராமஸ்வாமி.

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

சர்க்கரைவள்ளிக்கிழங்கில் உள்ள இனிப்பான ஆரோக்கிய நன்மைகள்!

நாய்கள் ஏன் செருப்பை அடிக்கடி கடிக்கின்றன தெரியுமா?

உங்கள் திறமைகளை வெளிக்காட்டத் தயங்காதீர்கள்!

நீரிழிவு எச்சரிக்கை: இந்த 5 பழக்கங்கள் இருப்பவர்கள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT