Tamil on Lufthansa plane  
கல்கி

ஜெர்மன் விமானத்தில் தமிழ்!

ரெ. ஆத்மநாதன்

- ரெ.ஆத்மநாதன், பிராங்க்பர்ட் - சென்னை விமானத்தில், 35,000 அடி உயரத்திலிருந்து...

நாம் உலக வல்லரசாவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகுமென்கிறார்கள்! அதே சமயத்தில் நம் பொருளாதாரம் விரைவாக வளர்ந்து கொண்டிருப்பதாக ஒரு சாராரும், இல்லையென்று மற்றொரு சாராரும் அரசியல் சதுரங்கம் ஆடிக் கொண்டிருப்பதை அனைவருமே அறிவோம்! இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, நாம் ஒன்றில் உலகத்தில் முதல் இடத்தை, சீனாவைப் பின்னுக்குத் தள்ளிப் பிடித்து விட்டோம்! - ஆம்! மக்கட்தொகையில் நாம்தான் உலகத்தில் நம்பர் ஒன்! இது எல்லோருமே ஒத்துக் கொண்ட உண்மை!

ஐரோப்பிய நாடுகளில் அவரவர் தாய்மொழியே அந்தந்த நாடுகளில் சிறப்புப் பெறுகிறது. நம் நாட்டைப் போல் ஆங்கில மோகத்தை அங்கு காண்பது அரிது.

சமீப காலங்களில் அமெரிக்கா, ஐரோப்பா என்று சுற்றி வரும் போதெல்லாம், மனதின் ஓரத்தில் ஓர் குறை மெல்ல தலை தூக்க ஆரம்பித்தது. 200 நாடுகளுக்கு மேலுள்ள பூமிப் பந்தில், மக்கள் எண்ணிக்கையில் முதலிடம் பிடித்துள்ள நமக்கு, அதற்கான அங்கீகாரத்தை மற்ற நாடுகள் அளிப்பதில்லையோ என்ற ஆதங்கமே அது!

சுவிசிலுள்ள செர்மட் என்ற மலை வாசஸ்தலத்தின் ஒரு ஹோட்டல் அறையில்  தங்கியிருந்தபோது, காலைச் சிற்றுண்டியை அவர்களே வழங்கினார்கள். பழங்கள், பழ ரசங்கள், பிஸ்கட்கள், ரொட்டிகள், முட்டை, சிக்கன் என்று ஏகப்பட்டவை இருந்தாலும், தென்னிந்திய உணவுகளான இட்லி, தோசை, வடையோ, இந்திய உணவு வகைகளான சப்பாத்தி, நாண் போன்றவையோ இல்லாதது ஏமாற்றமளிப்பதாகவே இருந்தது. அங்குள்ள நிர்வாகியிடம் இது குறித்துக் கேட்டபோது ஒரு ‘சாரி’யைப் பதிலாகக் கூறினார்!

அப்புறம் துணைவியாரோ, நம் இட்லி, தோசை போன்றவற்றைத் தயாரிக்க முன் கூட்டியே மாவினைத் தயார் செய்து பக்குவப்படுத்த வேண்டுமென்பதையும், மாவு புளிக்கவும் வேண்டும், அதே நேரம் அதிகமாகப் புளித்து விடவும் கூடாது (வரும்!ஆனால் வராது! போல) என்றும், நம் உணவுகளைத் தயாரிப்பதில் உள்ள சில ரிஸ்க்குகளைக் கூறி, அதனாலேயே நம் தென்னிந்திய உணவு வகைகள் அவ்வளவாகப் பிரபலமாகவில்லை போலும் என்று கூறியது ஏற்கத் தக்கதாகவே இருந்தது!

“ஐயா சாமி! ஜெர்மன் விமானத்தில் தமிழ்! என்று கட்டுரைக்கு தலைப்புப் போட்டு விட்டு, மாவரைத்துக் கொண்டிருக்கிறாயே!” என்று நீங்கள் முணகுவது எனக்கும் கேட்கிறது! என்ன செய்வது? தமிழ் எழுத்தாளர்களுக்கான பழக்க தோஷம்!தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது!

விஷயத்திற்கு வருகிறேன்.

சமீபத்தில் மதுரையிலிருந்து சென்னை வந்த விமானத்தில், விமானி ஒருவர் தமிழில் பேசியதுடன், விமானத்தின் இடது புறம் இருப்பவர்கள் மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் நகரின் அழகை நன்கு ரசிக்கலாம்  என்று கூறியதையும் வரவேற்று ‘வாட்ஸ் அப்’ பில் பலர் பாராட்டியிருந்தார்கள். நம் தமிழ் நாட்டிற்குள் தமிழ் பேசுவதே இப்பொழுதெல்லாம் பாராட்டப்படும் நிகழ்வாகி விட்டது!

22.08.24 காலை நாங்கள் சூரிக் நகரிலிருந்து 8.15 விமானத்தில் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் வந்து, அங்கிருந்து சென்னை விமானத்தைப் பிடித்தோம்.

சூரிக் - பிராங்க்பர்ட் பயண நேரம் ஒரு மணி நேரம் மட்டுமே! ஆனால் மற்றதோ…ஒன்பது மணி நேரத் தொடர் பயணம்! காலை 11.15 மணிக்கு பிராங்க்பர்ட்டை விட்டுப் புறப்படும் விமானம் இரவு 12.10 மணிக்குத்தான் சென்னையில் தரையிறங்கும்.

குறிப்பிட்ட நேரத்தில் விமானமும் கிளம்பியது. இருக்கையின் எதிரேயுள்ள சிறு திரையில் பயணிகள் இருக்கையின் பெல்ட் அணிவது குறித்தும், அவசர கால நடவடிக்கைகள் குறித்தும் ஜெர்மன், ஆங்கிலத்தில் அறிவித்தவர்கள். அதனைத் தொடர்ந்து தமிழிலும் அறிவித்தது, நம் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்பட்டது போலிருந்தது. மனதுக்கு மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் இருந்தது!

எனது அனுபவத்தில், இதுவே தமிழில் அறிவிப்பது முதல் முறை! ’லுப்தான்சா’ (Lufthansa) விமான நிறுவனத்திற்கு நன்றியையும்,பாராட்டுக்களையும் தெரிவிப்போம்.

இந் நிறுவனத்தைத் தொடர்ந்து இன்னும் பல விமான நிறுவனங்களும் சென்னை வரும் விமானங்களில் தமிழில் அறிவிப்புகளைத் தொடங்குவார்களென்று நம்புவோம்.

நம் தாய்த் தமிழ் உலக அரங்கில் உயர்வு பெறுவது சிறப்புக்குரியதல்லவா?

   தமிழறிந்ததால் வேந்தன் எனையழைத்தான்!

   தமிழ்க்கவியென்றே எனையவளும் காதலித்தாள்!

   அமுதென்று சொல்லுமிந்தத் தமிழ் என் ஆவி 

   அழிவதற்குக் காரணமாய் இருந்ததென்று

   சமுதாயம் நினைத்திடுமோ?ஐயகோ!

   தாய்மொழிக்குப் பழி வந்தால் சகிப்பதுண்டோ?

   உமையொன்று வேண்டுகின்றேன் மாசில்லாத 

   உயர்தமிழை உயிரென்று போற்றுமின்காள்!

என்ற பாவேந்தரின் வரிகள் விமான சத்தத்தையும் தாண்டி மனதுக்குள் ஒலிக்கிறது!

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT