சங்ககாலங்களிலேயே ஆளுமை நிறைந்த பெண்மணியாகத் திகழ்ந்து புகழ்பெற்ற பெண்பாற் புலவர் ஔவையார், ஒருமுறை நான்கு கோடி பாடல்கள் பாடி ஆயிரம் பொற்காசுகளை பரிசாகப் பெற்றாராம். அந்நிகழ்வின் சுவாரஸ்ய பின்னணியைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஒருமுறை மரகத நாட்டில் செல்வந்தன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஓரளவுக்கு கவி பாடும் ஆற்றல் இருந்தது. எனவே கவி பாடுவதிலும், பாடுவதை கேட்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட அந்த செல்வந்தன் தன்னை நாடிவரும் புலவர்களை பாட வைத்து அவர்களுக்கு பரிசளிப்பது வழக்கம். ஆனால் இயல்பிலேயே அந்த செல்வந்தனிடம் கருமித்தனமும் அதிகமாக இருந்தது. அதனால் பாடும் எந்த ஒரு புலவருக்கும் அவன் பரிசினை முழுமையாக கொடுக்க மாட்டான். தனக்கு ஓரளவு கவி பாடுவதில் அறிவு இருப்பதால் ஏதோ ஓரிடத்தில் ஏதேனும் ஒரு பிழையை சுட்டிக்காட்டி தங்களுடைய பாட்டில் குறை இருக்கிறது என்று கூறி தான் கொடுப்பதாக சொன்ன பரிசை முழுமையாக கொடுக்காமல் சாதித்து விடுவான்.
இவ்வாறாக தன்னை நாடிவரும் புலவர்களிடம் மிகவும் குதர்க்கமாக பேசிக்கொண்டே இருந்த அந்த செல்வந்தன் ஒரு நாள் நான்கு கோடி பாடல்கள் பாடும் ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் தரப்போவதாக அறிவித்தான். எனவே அன்றைய நாளில் நான்கு கோடி பாடல்கள் பாடுவதற்காக வந்த புலவர்களை காட்டிலும், நான்கு கோடி பாடல்கள் பாடப்போவது யார்? என்று அறிந்து கொள்வதற்காக வந்த புலவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஏனெனில் வாழ்நாள் முழுக்க பாடினாலும் ஒருவரால் நான்கு கோடி பாடல்களை பாடுவது என்பது அவ்வளவு எளிதில் முடியாத ஒரு காரியம். மேலும் இப்படியான ஒரு அரிதான போட்டியை வெல்லப் போவது யார்? என்று அறிந்து கொள்வதற்காக அங்கே பொதுமக்களும் அதிக அளவில் கூடி விட்டார்கள். போட்டியில் பங்கேற்று வெற்றி பெறப் போவது யார் என்று அறிந்து கொள்வதற்கான ஆர்வம் நிமிடத்திற்கு நிமிடம் கூடிக் கொண்டே சென்றது.
இவ்வாறான சூழலில் மாபெரும் பெண்பாற்புலவரான ஔவையார் அங்கு வந்து சேர்ந்தார். போட்டியின் அறிவிப்பு என்ன என்பதையும் அதற்கான பரிசு தொகை பற்றியும் அறிந்து கொண்டார். மேலும் போட்டி வைத்த செல்வந்தனின் எண்ணம் ஒருவரை நான்கு கோடி பாடல்கள் பாட வைப்பது மட்டுமல்ல என்பதையும், புலவர்களை மட்டம் தட்டி அவமதிப்பதற்காகவே அவர் இவ்வாறு ஒரு போட்டியை அறிவித்திருக்கிறார் என்பதையும் அவ்வையார் நன்கு புரிந்து கொண்டார்.
எனவே அந்த கருமித்தனம் நிறைந்த செல்வந்தனுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என நினைத்து அவ்வையார் பாடல் ஒன்றை பாடினார். அவ்வையார் பாடிய பாடலை கேட்டு அங்கு நின்றிருந்த அனைவரும் மெய்சிலிர்த்து போயினர். அனைவரும் அவ்வையாரின் புத்தி கூர்மையையும், அறிவின் ஆழத்தையும் கண்டு வியந்து போயினர். செல்வந்தனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை! அவன் முகம் மிகவும் வாடிப் போய்விட்டது! தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு தான் அறிவித்தபடி ஆயிரம் பொற்காசுகளை அவ்வையாருக்கு பரிசாக அளித்தான். அத்தோடு மட்டுமன்றி இனிமேல் எந்த ஒரு புலவரையும் மட்டம் தட்டி பேசுவதில்லை என்றும், 'வல்லானுக்கு வல்லான் வையகத்தில் உண்டு' என்பதை தான் புரிந்து கொண்டதாகவும் மனம் திருந்தி கூறினான்.
நான்கு கோடி பாடல்களையும் உள்ளடக்கி அவ்வையார் பாடிய ஒரே பாடல் இதுதான்!
மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்;
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்;
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.
நம்மை மதிக்காத ஒருவரை மதித்து அவரது வீட்டிற்கு சென்று அவரது வாயில் படியை கூட மிதிக்காமல் திரும்புவது கோடி பொன் பெற்றதற்கு சமமாகும்.
சாப்பிடுங்கள்! சாப்பிடுங்கள் என்று வாய் வார்த்தைகளாக சொல்பவர் சிலர்! வீட்டுக்கு சென்றால் சாப்பிடுங்கள் என்ற வார்த்தையை கூட சொல்லாதவர்கள் சிலர்! அப்படிப்பட்டவர்கள் வீடுகளில் சென்று அங்கு ஒருவாய் தண்ணீர் வாங்கி அருந்தாமல் திரும்புவது கோடி பொன் பெறுவதற்கு சமமாகும்! உள்ளன்பு இல்லாதவர்களின் வீடுகளில் உணவருந்தாமல் இருப்பது கோடி பொன்னைத் தரும்!
கோடி ரூபாயை கொட்டிக் கொடுத்தாவது பண்பில் சிறந்தவர்களின் நட்பினை பெற்றுக் கொள்வது கோடி பொன் பெறுவதற்கு சமமாகும். நற்பண்புகளை ஒருங்கே பெற்ற நல்லோரை துணையாக கொண்டால் எத்தகைய துன்பத்தில் இருந்தும் நம்மால் எளிதில் தப்பித்துக் கொள்ள முடியும்.
மேலும் கோடி ரூபாயை கொட்டிக் கொடுத்தாலும் தன்னுடைய நேர்மையிலும் நடுநிலையிலும் இருந்து தவறாமல் இருக்கும் நாக்கினை பெறுவது கோடி பொன் பெறுவதற்கு சமமாகும்!
இவ்வாறாக நான்கே நான்கு கருத்துக்கள் மூலம் நான்கு கோடி பொன் பெறுவதற்கு சமமான கருத்துக்களை தம்முடைய ஒரே பாடல் மூலம் அவ்வையார் விளக்கி கூறிவிட்டார்!