Baluchari Saree Img Credit: Flipkart
மங்கையர் மலர்

புவியியல் சார்ந்த குறியீடு வழங்கப்பட்ட பலுச்சாரி புடவை பற்றித் தெரியுமா?

தேனி மு.சுப்பிரமணி

வங்காள தேசத்திலும் இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்திலும் உள்ள பெண்கள் அணியும் ஒரு வகை புடவை, பலுச்சாரி புடவை (Baluchari Saree) எனப்படுகிறது. இந்த வகைப் புடவை மேற்கு வங்காளத்தில் உருவானது. மேலும், புடவையின் மீது புராணக் காட்சிகளை சித்தரிப்பதற்காக அறியப்படுகிறது. 

தொடக்கக் காலங்களில் இது முர்சிதாபாத்தில் தயாரிக்கப்பட்டது. ஆனால், தற்போது மேற்கு வங்காளத்தின் விஷ்ணுபூரிலும், அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் மட்டுமே உண்மையான பலுச்சாரி புடவைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2011 ஆம் ஆண்டில், பலுச்சாரி புடவைக்கு இந்தியாவில் மேற்கு வங்காளத்திற்கான புவியியல் சார்ந்த குறியீடு வழங்கப்பட்டது.

வங்காளத்தின் துணி வரலாற்றில், பலுச்சாரி புடவைகள் மஸ்லினுக்குப் பிறகு வந்தது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள பலுச்சார் என்ற சிறிய கிராமத்தில் நெசவு செய்யப்பட்டு வந்த புடவைக்கு பலுச்சாரி புடவை என்ற பெயர் ஏற்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில், வங்காள நவாப் முர்சித்குலி கான், அதன் வளமான நெசவு பாரம்பரியத்தை ஆதரித்து, டாக்காவிலிருந்து முர்சிதாபாத்தில் உள்ள பலுச்சார் கிராமத்திற்கு இந்தப் புடவையைத் தயாரிக்கும் கைவினைக் கலைஞர்களைக் கொண்டு வந்து தொழில் செழிக்க ஊக்குவித்தார். ஒரு சமயம், கங்கை ஆற்றின் வெள்ளத்தால் கிராமம் மூழ்கிய பிறகு, தொழில்துறை பாங்குரா மாவட்டத்திலுள்ள விஷ்ணுபூர் கிராமத்திற்கு மாற்றப்பட்டது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மல்லபூம் இராச்சியத்தை ஜகத் மல்லன் என்பவன் ஆண்ட போது பலுச்சாரி புடவைகள் டசர் பட்டால் செய்யப்பட்டது. இந்தச் செழிப்பான போக்கு பின்னர், குறிப்பாக பிரித்தானிய ஆட்சியின் போது, அரசியல் மற்றும் நிதி காரணங்களால் குறைந்தது. பெரும்பாலான நெசவாளர்கள் தொழிலைக் கைவிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால், இது ஒரு அழியும் கைவினைப் பொருளாக மாறியது.

இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில், பிரபலக் கலைஞரான சுபோ தாக்கூர், பலுச்சாரி கைவினைப் பாரம்பரியத்தை மீண்டும் வளர்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார். விஷ்ணுபூர் எப்போதுமே அதன் பட்டுப் பொருட்களுக்கு பிரபலமானது என்றாலும், அவர் ஜாக்கார்ட் நெசவு நுட்பத்தை அறிய அக்சய் குமார் தாசு என்பவரை தனது விஷ்ணுபூருக்குச் சென்று, பட்டு காதி சேவா மண்டலின் அனுமான் தாசு சர்தாவின் நிதி மற்றும் தார்மீக ஆதரவுடன் பலுச்சாரியை அவர்கள் தறிகளில் நெசவு செய்யக் கடினமாக உழைத்தார்.

ஒரு காலத்தில் விஷ்ணுபூர் மல்ல வம்சத்தின் தலைநகராக இருந்தது. மேலும், மல்ல மன்னர்களின் ஆதரவின் கீழ் அவர்களின் காலத்தில் பல்வேறு வகையான கைவினைப்பொருட்கள் செழித்து வளர்ந்தன. சுடுமண் செங்கற்களால் செய்யப்பட்ட கோயில்கள் இந்த ஆட்சியாளர்களின் ஒரு சாதனையாகும். இந்தக் கோவில்களின் பெரும் தாக்கத்தை பலுச்சாரி புடவைகளில் காணலாம். கோவில்களின் சுவர்களிலிருந்து எடுக்கப்பட்ட புராணக் கதைகள் பலுச்சாரி புடவைகளில் நெய்யப்படுவது விஷ்ணுபூரில் ஒரு பொதுவான நிலையாக இருக்கிறது. 

பலுச்சாரி புடவைகள் உள்ளூரில் பாலுச்சாரி புடவைகள் என்று அழைக்கப்படுகின்றன. இன்று பெரும்பாலும் மகாபாரதத்திலிருந்தும், இராமாயணத்திலிருந்தும் அதன் காட்சிகள் சித்தரிக்கப்படுகின்றன. முகலாயர் காலத்திலும், ஆங்கிலேயர்களின் காலத்திலும், அவர்கள் புடைவையின் புட்டாவில் ஒரு சதுர வடிவில் அலங்கார உருவங்களை வைத்து நெசவு செய்தனர். மேலும் வங்காள நவாப்புகளின் வாழ்க்கையிலிருந்து பெண்கள் ஊக்கா புகைப்பது, நவாப்கள் குதிரை வண்டிகளை ஓட்டுவது போன்ற காட்சிகளை சித்தரித்தனர். மேலும், கிழக்கிந்திய நிறுவனத்தின் ஐரோப்பிய அதிகாரிகள் கூட இதில் சித்தரிக்கப்பட்டனர்.

ஒரு புடவையைத் தயாரிக்க இரண்டு கைவினைஞர்கள் கிட்டத்தட்ட ஒரு வாரம் வேலை செய்ய வேண்டும். முக்கியமாக இதில் பயன்படுத்தப்படும் பொருளான பட்டும், புடவையும் நெசவு செய்த பிறகு மெருகூட்டப்படுகிறது. இந்த புடவைகளைப் பெரும்பாலும் வங்காளத்தில் உள்ள மேல்தட்டு மக்களும், ஜமீந்தார் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் பண்டிகைக் காலங்களிலும், திருமணங்களின் போதும் அணிகின்றனர்.

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT