மங்கையர் மலர்

கூந்தல் பொலிவுக்கு கருஞ்சீரக எண்ணெய்!

மங்கையர் மலர்

ன்றைய தாய்மார்களின் பெரும் சவால், பெண் குழந்தைகளின் தலையில் உள்ள பேன் தொல்லைதான். இந்தத் தொல்லை சில பெரியவர்களுக்கும் உண்டு. முன்பெல்லாம் தாய்மார்கள் வீட்டில் இருந்தார்கள். அதனால் குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்து, பேன் சீப்பு போட்டு வாரி, ஈறு சீப்பால் ஈர்த்து, பேன்களை ஒழித்தார்கள். ஆனால், இன்றைக்கு தாய்மார்களும் வேலைக்குப் போவதால், கவனிக்க முடிவதில்லை. பள்ளிச் செல்லும் குழந்தைகளும், டீன்ஏஜ் பெண்களும் வாரம் ஒருமுறை மட்டுமே தலைக்குக் குளிக்க முடிகிறது. விளைவு? தலையில் தூசும், அழுக்கும் சேர்கிறது. வியர்வைப் பிசுபிசுப்பு, ஒருவித வாடை போன்றவற்றால் பேன்கள் எளிதாக உருவாகி விடுகின்றன. பேன்கள் அதிவிரைவில் பரவக்கூடியன. உடனே முட்டையிட்டு, குஞ்சு பொரித்துவிடும். இதனால் கூந்தல் மட்டுமல்லாது சீப்பும் சுத்தமாக இருக்க வேண்டும்.

பேன் போக்கும் தைலத்தை எப்படித் தயாரிப்பது என்று பார்ப்போமா?

பேன் போக்கும் எண்ணெய் (லைஸ் கில்லர் ஆயில்),

தேவையானவை: தேங்காய் எண்ணெய் – 1 கிலோ, கருஞ்சீரகம் – 400 கிராம், துளசி – 50 கிராம்.

செய்முறை: சீரகத்தில் ஆறு வகைகள் உள்ளன. இதில் கருப்பாக மிகச் சிறியதாக இருக்கும் சீரகம் கருஞ்சீரகம். இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். துளசி, இது தோட்டத்துப் பச்சிலை. பூ விற்பவர்களிடம் கிடைக்கும். பசுந் துளசியை ஆய்ந்து நிழலில் காய வைத்துக் கொள்ளவும். கருஞ்சீரகம் ஒரு கிருமிநாசினி, துளசியும் பூச்சிகளைக் கொல்லக்கூடியது.  கிருமிகளை அழிக்கக்கூடியது.

சுத்தமான தேங்காய் எண்ணெயை அடுப்பில் வைத்து, மிதமான தணலில் காய்ச்ச வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கருஞ்சீரகம் போட வேண்டும். சடசடப்பு ஒலி கேட்கும்.  ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும். இருபத்து நான்கு மணி நேரம் கழித்து எண்ணெயை வடிகட்டி சுத்தமான பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யலாம். நூறு சதவிகிதம் இயற்கையான மருந்து என்பதால் தீய விளைவுகளே இருக்காது என்று சொல்லி விற்கலாம். துளசி, சீரகம் இரண்டுமே விலை மலிவானவை. தேங்காய் எண்ணெய் மட்டுமே காஸ்ட்லியானது.

எப்படிப் பயன்படுத்துவது?

பெரிய பல் கொண்ட மர சீப்பால் அழுந்த வாரவும். கைப்பிடியளவு பேன் போக்கும் எண்ணெயை மயிர்க்கால்களிலும், கூந்தல் முழுக்கவும் தேய்க்கவும் நாற்பது நிமிடம் ஊறவிட்டு, தூய சீயக்காய் கொண்டு அலசவும் வெந்நீர் பயன்படுத்திக் குளிக்கவும். ஒரு டவலை இறுகக் கட்டிக்கொண்டு, உலரவிட்டுத் தட்டினால் பேன்கள் செத்து விழும். வாரத்தில் இருமுறை தொடர்ந்து தலைக்குத் தேய்த்துக் குளித்தால் நல்ல பலன் தெரியும்.

இந்த எண்ணெயை, பேன்கள் அடியோடு நீக்கும்வரை பயன்படுத்த வேண்டும். பேன்கள் இல்லை என்றால், இந்த ஆயிலை உபயோகிக்க் கூடாது.

பாத வெடிப்புப் பவுடர்!

நிறைய பெண்களுக்கு உடல் சூட்டினால் கால் பாதங்களில் அரிப்பும், பிளவும் காணப்படும். சிலருக்கு ரத்தம் கொட்டும்; வலியால் துடிப்பார்கள். இது வருடக்கணக்கால் இருந்தால் கால்கள் மட்டும் இல்லாமல் உள்ளங்கைகளிலும் வெடிப்புகள் பரவும். இதற்கு சித்த மருத்துவ முறைப்படி மருந்து சாப்பிடுவது சிறந்தது.

தேவையானவை: மருதாணி – 1 கிலோ, தூள் மஞ்சள் – ¼, வசம்புத் தூள் – 100 கிராம்.

மருதாணி உடலுக்குக் குளிர்ச்சி கொடுக்கக்கூடியது. மஞ்சள் கிருமிநாசனி மட்டுமல்ல; அழகுதரக் கூடியது. வசம்பு இதுவும் நுண்புழு கொல்லி, பாத வெடிப்புக்குக் காரணமான பாக்டீரியாவை அழிக்கும். இந்த மூன்று மூலிகைகளையும் தனித்தனியாக அரைத்து, சலித்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு மூன்றையும் சேர்த்துக் கலந்து நூறு கிராம் பாக்கெட்டிலோ அல்லது டப்பாவிலோ அடைத்து விற்கலாம்.

எப்படிப் பயன்படுத்துவது?

ந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து, இரவில் பாத வெடிப்பு உள்ள இடத்தில் தடவி, மறுநாள் தண்ணீரில் கழுவிக்கொள்ள வேண்டும். இதைத் தினமும் உபயோகிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

* பாத வெடிப்பு உள்ளவர்கள் அதிக நேரம் ஈரத் தரையில், நீரில் புழுங்கக் கூடாது.

* உடல் சூட்டைக் குறைக்க, உலர் திராட்சை ஊற வைத்த நீரையோ, கடுக்காய்த் தோல் போட்டு ஊரிய நீரையோ குடிக்கலாம்.

* இளநீர், வெந்தயத்தூள் கலந்த மோரைக் குடிக்க, உடல்காங்கை மட்டுப்படும்.

* வெடிப்பு இடுக்குகளில் அழுக்கோ, நோய்த்தொற்றோ ஏற்படாதவாறு பாதங்களைப் பாதுகாக்க வேண்டும்.

* மூலிகையின் மேல் நம்பிக்கைக்கொண்டு அன்புடனும் பாசத்துடனும் பொருட்களைத் தயாரிப்பதால் நல்ல பெயர் கிடைப்பதோடு, இதைத் தயாரித்து விற்பவருக்கு கணிசமான வருமானமும் கிடைக்கும்.

கென்யாவில் 'தேனீ வேலி' - யானைகளையும் மனிதர்களையும் காக்கும் நல்முயற்சி!

விண்வெளியில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?

தொற்று நோய்களைப் புரிந்துகொள்வது எப்படி?

வரமிளகாய் வத்தக்குழம்பும், ஸ்பைசி தொண்டக்காய் வறுவலும்!

இது தெரிஞ்சா இனி நீங்க பிரட் சாப்பிடவே மாட்டீங்க! 

SCROLL FOR NEXT