இந்தியாவில் ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர், பலாங்கிர், பர்கர், பௌது மற்றும் சுபர்ணபூர் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் சம்பல்புரி புடவை (Sambalpuri sari) என்பது கையால் நெய்யப்படும் ஒரு மரபு வழியிலான புடவை வகையாகும். இந்தப் புடவையினை ஒடிசாவில் 'சம்பால்புரி பந்தா' என்கின்றனர். இந்தப் புடவை நெசவு செய்வதற்கு முன் வார்ப் மற்றும் நெசவு ஆகியவை அச்சு - சாயமாக இருக்கும். இந்தியாவில் உள்ள பெண்கள் பொதுவாகப் பயன்படுத்தும் சேலையின் அளவைப் போன்றே இந்தப் புடவையும் 5 1/2 மீட்டர் நீளமுடையதாக இருக்கிறது.
மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் இந்தப் புடவைகளை விரும்பி அணியத் தொடங்கிய பின்பு, இந்தப் புடவைகள் ஒடிசா மாநிலத்திற்கு வெளியேப் பிரபலமடைந்தன. 1980 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டுகளில், இப்புடவைகள் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தன.
(சகுந்தலா தேவி என்ற ஹிந்திப் படத்தில் வித்யா பாலன் முழுமையாகச் சம்பல்புரி புடவையையே அணிந்திருப்பார் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளலாம்.)
ஒடிசாவின் சம்பல்பூரில் உருவாக்கப்பட்ட இப்புடவைகள் அவற்றின் தனித்துவமான தோற்றத்திற்காக உலகளவில் புகழ் பெற்றவை. இவை அடிப்படையில் கையால் நெய்யப்பட்டவை; மற்றும் சாயமிடுதல் நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகின்றன. இதில் நெசவாளர்கள் முதலில் ஒரு தறியில் நெசவு செய்வதற்கு முன் நூல்களை சாயமிடுதல் செய்கிறார்கள். இது 'பந்தா நுட்பம்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நுட்பத்தைப் பயன்படுத்துவதன் நன்மை என்னவென்றால், அது சாயமிட்ட பிறகும் அதன் வடிவமைப்பில் எந்த மாற்றமுமில்லாமல் இருக்கிறது. பிரகாசமான மற்றும் துடிப்பான வண்ணங்கள் மற்றும் தனித்துவமான வடிவங்கள் இந்தப் புடவையின் சிறப்புகளாக இருக்கின்றன. இந்தப் புடவைகள் பருத்தி மற்றும் பட்டுப் பயனர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன.
சம்பல்பூர் புடவைகளின் மற்ற தனித்துவமான நிலை, பூக்கள், சக்கரங்கள், சங்குகள், தாமரைகள், மாம்பழங்கள், பட்டாம்பூச்சிகள், யானைகள், மயில்கள், நாட்டுப்புற மற்றும் கலாச்சார மரபுகள் போன்ற ஒடிசா மாநிலக் கலாச்சாரத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய சில வடிவங்களைப் பயன்படுத்துவதாகும். சம்பல்புரி புடவைகள் அது நெய்யப்பெற்ற ஊர்களின் பெயர்களான பராபலி, பாப்தா, சோனேபுரி, போம்காய் போன்ற பல வகைகளில் கிடைக்கிறது.
உதாரணமாக, சோனேபூர் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 16 கிமீ தொலைவில் உள்ள சாகர்பாலி என்ற கிராமத்தில் 500 நெசவாளர் குடும்பங்கள் வசிக்கின்றனர். இது சம்பல்புரி புடவையின் கோட்டையான சோனேபூரில் உள்ள மிகப்பெரிய நெசவுக் கிராமங்களில் ஒன்றாகும். இந்தக் கிராமத்தில் நெசவு செய்யப்படும் புடவைகள் அனைத்தும் சோனேபுரி புடவைகள் என்று அழைக்கப்படுகின்றன.
சம்பல்புரி புடவைகள் கருப்பு, சிவப்பு, நீலம், வெள்ளை, ஆரஞ்சு போன்ற துடிப்பான வண்ணங்கள் இருப்பதால் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருக்கின்றன. மாறுபட்ட பார்டர்கள் அத்தகைய புடவைகளின் அழகுக்கு மேலும் அழகைச் சேர்க்கின்றன. இப்புடவைக்குப் பயன்படுத்தப்படும் துணிகள் பெரும்பாலும் தூயப் பருத்திகள் அல்லது பட்டுகள். மற்றவற்றை விட விலை அதிகம். நீண்ட காதணிகள் மற்றும் வளையல்கள் போன்ற மரபு வழியிலான ஆபரணங்களுடன் கூடிய சம்பல்புரி புடவைகள் பிரபலமானவை.
இந்தச் சேலையைத் தொடர்ந்து பாதுகாக்க, வேதிப்பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இது புடவையின் நிறம் மற்றும் துணி மீது தீங்கு விளைவிக்கும். அதற்கு பதிலாக, ஷாம்புகள் அல்லது சவர்க்காரம் பயன்படுத்தப்படுத்தலாம். இயந்திரங்களில் சலவை செய்யக் கூடாது. கையால் அலசிப் போட்டால் போதுமானது. இதேப் போன்று இப்புடவைகளை உலர்த்தும் போது, சூரியக் கதிர்கள் நேரடியாக வரும் இடங்களைத் தவிர்க்க வேண்டும்.
கைத்தறியில் நெய்யப்பட்ட துணியால் தயாரிக்கப்பட்டு, இந்தியா முழுவதும் பிரபலமான சம்பல்புரி புடவைகளுக்கான நெசவுத் தொழிலை ஊக்குவிக்கவும், இத்தொழிலைக் காக்கவும், ஒடிசாவில் உள்ள சம்பல்பூர் மற்றும் பெர்காம்பூர் (பெர்காம்பூர் பட்டா) ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்ட கைத்தறி பட்டுப் புடவைகளுக்கு இந்திய அரசின் புவியியல் குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது.