கர்ப்பப்பை என்பது பெண்களுக்கு இடுப்பு பகுதியில், சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடல் இடையே அமைந்துள்ள முக்கிய இனப்பெருக்க உறுப்பு ஆகும். பெண்களுக்கு அதிகமான பிரச்னை கர்ப்பப்பையில் தான் ஏற்படுகிறது. மாதவிடாயின் போது அதிகப்படியான வலி, அதிக இரத்தப் போக்கு, பிசிஓடி, பிசிஓஎஸ், மகப்பேறு பிரச்னை என பல பிரச்னைகள் இருக்கின்றன.
இது போன்ற பிரச்னைகள் உருவாக முக்கிய காரணம் நம் உணவு முறைகளில் மாற்றம், ஹார்மோன் சமநிலையின்மை போன்றவை தான். பொதுவாக, கர்ப்பப்பைகள் முட்டைகளை உற்பத்தி செய்கின்றன. கர்ப்பப்பையின் முக்கிய செயல்பாடு குழந்தையை சுமந்து வளர்ப்பது. எனில், பெண்களுக்கு கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருப்பது மிக அவசியம் அல்லவா?
அதை சரியான முறையில், கவனித்துக் கொள்வது ஒவ்வொரு பெண்ணின் கட்டாய கடமை. உங்கள் கருப்பையை சரியான முறையில் எப்படி கவனித்துக் கொள்வது? அதை பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்!
பல பெண்கள் கர்ப்பப்பை பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கின்றனர். எந்த ஒரு பிரச்னையும் ஆரம்பத்திலே சரி செய்தால், பின் விளைவுகளில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். உங்கள் கர்ப்பப்பை எந்த பாதிப்பும் இன்றி சீராக இயங்க, அடிக்கடி கருப்பப்பையை சுத்திகரிக்க வேண்டும். கவலை வேண்டாம். வீட்டில் கிடைக்கும் இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் பானமே இதற்கு சிறந்த மருந்து. அதை எப்படி தயாரிக்க வேண்டும் என்று பார்க்கலாம்!
கர்ப்பப்பையை சுத்திகரிக்கும் பானம்:
தேவையான பொருட்கள்:
சீரகம் - 1 ஸ்பூன்
அஜ்வைன்(ஓமம்) - ½ ஸ்பூன்
உலர் இஞ்சி தூள் - 1/4 ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
வெல்லம் - சிறிய துண்டு
செய்முறை
ஒரு கடாயை எடுத்து சீரகம், அஜ்வைன், உலர் இஞ்சி தூள் ஆகியற்றை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். இதனுடன் நெய் சேர்த்து நன்கு கலந்து, பொன்னிறமாக மாறியவுடன் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்க்கவும். 2 கிளாஸ் தண்ணீர் வைத்தால் 1 கிளாஸ் வற்றும் வரை இந்த பானத்தை கொதிக்க விட வேண்டும். அதனை வடிகட்டினால் கர்ப்பப்பையை சுத்திகரிக்கும் கஷாயம் தயார்.
இந்த கஷாயத்தை மாதவிடாய் சுழற்சி ஏற்படுவதற்கு 10 நாட்களுக்கு முன் அருந்த வேண்டும். 7 நாட்களுக்கு தொடர்ந்து இதை குடித்து வந்தால், ஆரம்பத்திலேயே கர்ப்பப்பை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
கர்ப்பப்பையை சுத்திகரிக்க இந்த பானம் சிறந்த மருந்து. ஆனால் நீண்ட நாட்களாக கர்ப்பப்பை பிரச்சனை இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.