*ஆண்டாண்டு காலமாய்
விபத்தின்றி வாகனம் ஓட்டி வரும்
வீரையா தாத்தா...
*சவரம் செய்கையில்
சிறு கீறல் கூட செய்யாத
அம்மாசிக் கிழவன்...
*துளி உப்பு கூடவோ, குறையவோ
செய்யாமல் சமைத்து வைக்கும்
சுந்தரி அக்கா...
*அழகும் நளினமும் குறையாமல்
மார்கழிக் கோலம் போடும்
அம்புஜம் ஆன்ட்டி...
*காஜா போடும் போது
விரலில் ஊசியைக் குத்திக்
கொள்ளாத ரமேஷ் மாமா...
இவர்களெல்லாம் கூட
போதிமரத்துப் புத்தர்கள் தான்!
கவனிக்கவோ
அங்கீகரிக்கவோ
ஆளில்லா விட்டால் கூட
கவனம் தவறியதே இல்லை!
2. உன் பார்வை ஒரு வரம்
ஒரு மழை பெய்து
முடிந்திருந்த நாளின்
மாலை நேரக்காற்றினைப் போல
பல மணி நேரங்கள்
ஓய்வில்லாப் பணிக்குப் பின்
ஆசுவாசப்படுத்திக் கொள்ள
நிறைவான தேநீர் போல
கடும் கோடையில்
ஜனத்திரளில் சிக்கி
கசகசத்து வீடு வந்து
உடல் கழுவும் குளிர் நீர் போல
சில ஆண்டுகள் பிரிந்திருந்து
சொந்த ஊரைப் பார்க்க
நுழையும் போது
எதிர்ப்படும் மண் வாசம் போல
உன் பார்வை எப்போதும்
உவப்பாகவே இருக்கிறதடி!