Success journey of India's richest business woman Falguni Nair
Success journey of India's richest business woman Falguni Nair Akshat Mani Tripathi
மங்கையர் மலர்

இந்திய பணக்கார பெண் தொழிலதிபர் ஃபால்குனி நாயரின் வெற்றிப் பயணம்!

கண்மணி தங்கராஜ்
Mangayar Malar

ந்திய நாட்டின் மிகப்பெரிய பணக்காரப் பெண், ‘நைக்கா’ நிறுவனர் ஃபால்குனி நாயர். இந்தியாவின் இரண்டு பெண் கோடீஸ்வரர்களில் இவரும் ஒருவர். சாதிப்பதற்கு வயது ஒரு தடையே இல்லை என்பதை நிரூபித்துக்காட்டிய பெண்மணி இவர். யார் இந்த ஃபால்குனி நாயர்?

‘நைக்கா’ இது வெறும் பெயர் இல்லை; சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கான ஒரு பிராண்ட் என்றும் கூட சொல்லலாம். ஃபேஷன் துறையில் இருப்பவர்களுக்கு, அதிலும் குறிப்பாக அழகு மற்றும் ஆரோக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு, ‘நைக்கா’ என்ற பெயர் மிகவும் பிரபலம். அழகு சாதனங்கள் உள்ளிட்ட ஃபேஷன் பொருட்களை விற்பனை செய்கின்ற நிறுவனமே 'நைக்கா.' இது இந்திய அளவில் அழகு மற்றும் ஆரோக்கிய தயாரிப்பு விற்பனையில் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. இந்த நைக்கா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர்தான் ஃபால்குனி நாயர். முழுக்க முழுக்க தன்னுடைய சொந்த முயற்சியில் பில்லியனர் ஆன இவர், இந்தியாவின் முதல் பெண் தொழிலதிபராக விளங்குகிறார்.

பிறப்பு: 1963ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி மும்பையில் பிறந்தவர் ஃபால்குனி நாயர். இவரது குடும்பம் ஆரம்பத்திலிருந்தே வணிகத்தை அடிப்படையாகக் கொண்டது. ஃபால்குனியின் தந்தை இரும்புப் பொருட்கள் உற்பத்தி செய்யும் ஆலை நடத்தி வந்தவர். எனவே, ஃபால்குனிக்கும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பதே கனவாக இருந்துள்ளது. ஃபால்குனி மும்பையின் சிட்ன்ஹாம் வணிகவியல் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க வணிகப் பள்ளிகளில் ஒன்றாக விளங்கும் ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்)’ அகமதாபாத்தில் தனது ‘எம்பிஏ’ முதுகலைப் படிப்பையும் முடித்தார்.

வங்கிப் பணியாளராக தொடங்கிய பயணம்: தனது சொந்த முயற்சியில்தான் தொழில் துவங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த இவர், அதற்குத் தேவையான சேமிப்பில் தீவிரமாக ஈடுபடத் துவங்கினார். அதற்காக ‘ஏஎஃப் பெர்குசன்’ நிறுவனத்தில் பணியில் சேர்ந்து பின், அந்த வேலையை ராஜினாமா செய்தார். பின்னர் 1993ம் ஆண்டில் கோடக் மகிந்திரா குழுமத்தில் பணியாளராக சேர்ந்தார். 2005ம் ஆண்டில் கோடக் மகிந்திரா குழுமத்தின் முதலீட்டு வங்கிப் பிரிவான, ‘கோடக் மகிந்திரா கேப்பிடல்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், பின்னர் கோடக் மகிந்திரா நிறுவன பங்குப் பிரிவான ‘கோடக் செக்யூரிட்டிஸின்’ இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.

ஃபால்குனியின் ‘நைக்கா நிறுவனம்’: பின்னர் பல வருடங்களுக்குப் பிறகு ஃபால்குனி சொந்த தொழில் தொடங்குவதற்கான தன்னுடைய இலட்சியத்தை அடைய வேண்டும் என்ற முடிவை எடுத்தார். எனவே, தனது சொந்த சேமிப்பிலிருந்து சுமார் 20 லட்சம் முதலீட்டைக் கொண்டு தொழிலைத் துவங்கத் திட்டமிட்டார். அதன்படியே 2012ம் ஆண்டு ஃபால்குனி தனது ஐம்பதாவது வயதில் 'நைக்கா' என்ற ஆன்லைன் வணிக நிறுவனத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் வெறும் 60 தினசரி ஆர்டர்களுடன் தொடங்கிய 'நைக்கா' நிறுவனத்தின் பயணம், படிப்படியாக வளர்ச்சி அதிகரிக்கத் துவங்கியுள்ளது. அதன் மூலம் இன்று இந்திய அளவில் அழகு மற்றும் ஆரோக்கிய தயாரிப்பு விற்பனையில் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.

ஃபால்குனி நாயரின் தலைமையில் இயங்கும் இந்த நைக்கா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே நேரடி வணிகம் மட்டுமின்றி, ஆன்லைன் வர்த்தகத்திலும் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. மேலும், ‘நைக்கா’ தற்போது இந்தியாவின் மிக முக்கியமான பியூட்டி பிராண்டாக உருவெடுத்துள்ளது. தற்போது அதன் நிகர சொத்து மதிப்பு சுமார் 50,000 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

சொந்த வாழ்க்கை: சுயமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் பல பெண்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் ஃபால்குனி நாயருக்கு தற்போது 60 வயதாகிறது. இவரே தற்போது நைக்கா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்து வருகிறார். ஃபால்குனி நாயரின் கணவர் சஞ்சய் ‘கோல்பெர்க் கிராவிஸ் ராபர்ட்ஸ்’ நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதிக்கு அத்வைதா நாயர் மற்றும் அஞ்சித் நாயர் ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் இருவருமே நைக்கா நிறுவனத்தில்தான் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதிக்க வேண்டும் என்ற வேட்கையானது நம்மில் இருக்குமேயானால் அதற்கு இனம், நிறம், வயது, பாலினம் என எதுவுமே ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்துக்காட்டி இருக்கிறார் ஃபால்குனி நாயர்.

சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!

World Family Doctor Day: கொண்டாடப்பட வேண்டிய ஹீரோக்கள்! 

பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு எது?

5 Cool experiments for young science lovers!

உண்டியலின்றி உயர்ந்து நிற்கும் பாலாஜி!

SCROLL FOR NEXT