மங்கையர் மலர்

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

சுசீலா மாணிக்கம்

ஓவியம்: பத்மவாசன்

பாகம் - 46        

அதிகாரங்கள் 66,67,68 ‘வினைத்தூய்மை’ ‘வினைத்திட்பம்’ வினைசெயல்வகை

 ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர்.

மென்மேலும் உயர்ந்திட வேண்டும் என விரும்புபவர்கள் தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும் 

 (மதுராந்தகனின் மூடுபல்லக்கு பவனி இக்குறளுக்கு நல்லதோர் உதாரணம்.)

  "அப்படித்தான் செய்யவேண்டும், தாத்தா! இனிமேல் எப்போதும் அப்படியே செய்யுங்கள்! மூடு பல்லக்கில் மட்டும் அழைத்துவர வேண்டாம். அதனால் பல விரஸமான வதந்திகள் ஏற்படுகின்றன. ஒரு வேடிக்கையைக் கேளுங்கள், பழுவூர் இளையராணியின் மூடுபல்லக்கில் சில சமயம் என் சித்தப்பன் மதுராந்தகன் இரகசியமாக ஏறிக்கொண்டு ஊர் ஊராகப் போய் வருகிறானாம்! இப்படி ஒரு வதந்தி நாடெங்கும் பரவியிருக்கிறது!" என்று கரிகாலன் கூறி இடி இடியென்று சிரித்தான்.

          ஆனால், அங்கிருந்த மற்றவர்கள் யாரும் சிரிக்கவில்லை. ஒவ்வொருவர் மனத்திலும் ஒவ்வொருவிதக் கலக்கம் ஏற்பட்டது.

        வந்தியத்தேவன் தன் மனத்திற்குள் "ஐயோ! எப்பேர்ப்பட்ட  தவறு செய்துவிட்டோம்! இந்த வெறி பிடித்த மனிதரிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டோமே! ஒன்றையும் மிச்சம் வைத்துக்கொள்ளாமல் பகிரங்கப் படுத்தி விடுவார் போலிருக்கிறதே!" என்று எண்ணிக் கலங்கினான்.

பெரிய பழுவேட்டரையரின் உள்ளம் எரிமலையின் உட்பிரதேசத்தைப் போல், தீயும் புகையுமாகக் குழம்பிக் கொதித்துக் கனன்றது. தீயும் புகையும் எரிமலை வாயின் வழியாக வருவதற்கு முன்னால் உண்டாகும் பயங்கர உறுமலைப் போல் அவர் மீண்டும் தொண்டையைக் கனைத்துக்கொண்டார்.

         அவர் பேசுவதற்கு முன் பார்த்திபேந்திரன் ஓர் அடி முன்னால் பெயர்ந்து வந்து, "கோமகனே! பழுவூர் இளைய ராணியை நான் வெகு சிறிய காலந்தான் பார்த்துப் பழக நேர்ந்தது. அதற்குள்ளேயே அவர் எத்தகைய பத்தினித் தெய்வம் என்பதை அறிந்துகொண்டேன். பழுவூர் ராணியைப் பற்றி யாரேனும் அவதூறு கூற முற்பட்டால் அவனை அந்தக் கணமே என் வாளுக்கு இரையாக்குவேன்! இது சத்தியம்!" என்று சொன்னான்.

        கந்தமாறன் பின்னால் ஓர் அடி வந்து நின்று, "கையில் கத்தி எடுக்கவேண்டிய அவசியமே இல்லை; பழுவூர் இளையராணியைப் பற்றி அவதூறு கூறுகிறவனை என் கையினாலேயே கழுத்தை நெறித்துக் கொன்றுவிடுவேன். இது சத்தியம்!" என்றான்.

        இதைக் கேட்ட வந்தியத்தேவனும் ஒரு அடி முன் வந்து "நானும் அப்படித்தான்! பழுவூர் ராணியைப் பற்றி யாரேனும் தவறாகப் பேசினால், என்
கண் பார்வையினாலேயே அவனைச் சுட்டெரித்து விடுவேன்!"
என்றான்.

       "ஆஹாஹா! கொஞ்சம் பொறுங்கள். பார்த்தீர்களா, தாத்தா! தமிழ்ப் பெண் கௌரவத்தைக் காப்பாற்றுவதில் இவர்கள் எவ்வளவு  துடிப்புடன் இருக்கிறார்கள்! ஆனால், பழுவூர் இளைய ராணியைப்பற்றி யாரும் அவதூறு சொல்லவில்லைசொன்னால், நானும் கேட்டுக்கொண்டு சும்மா இருக்கமாட்டேன். இந்த வீராதி வீரர்கள் வரும் வரையில் அப்படி அவதூறு சொன்னவனை நான் உயிரோடு வைத்திருக்கமாட்டேன். பழுவூர் இளையராணியின் மூடு பல்லக்கைப் பற்றித்தான் குறை சொல்லுகிறார்கள்! அந்தக் கோழை மதுராந்தகன் பழுவூர் ராணியின் மூடு பல்லக்கில் ஊர் ஊராக இரகசியப் பிரயாணம் செய்கிறானாம்! எப்போது
ஆண் மகன் ஒருவன் மூடுபல்லக்கில் இரண்டு பக்கத்திலும் திரை விட்டுக்கொண்டு பிரயாணம் செய்கிறானோ
, அப்போது இளைய ராணியும் அப்படி பிரயாணம் செய்தால், சில அனர்த்தங்கள் விளையக்கூடும் அல்லவா?”

       "கோமகனே! பராந்தக சக்கரவர்த்தியின் பேரனும் கண்டராதித்தருடைய திருமகனுமான மதுராந்தகத் தேவர் எதற்காக மூடுபல்லக்கில் பிரயாணம் செய்ய வேண்டுமாம்? எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே?" என்றான் பார்த்திபேந்திர பல்லவன்.

       "அதன் காரணமும் ஒரு வேடிக்கையான காரணந்தான்! மதுராந்தகன் மூடு பல்லக்கில் ஏறிக்கொண்டு ஊர் ஊராகப் போய்த் தன் கட்சிக்குப் பலம் திரட்டிக்கொண்டு வருகிறானாம்!"

        "எதற்காகப் பலம் திரட்டுகிறது?"

        "எதற்காகவா? என் தகப்பனாருக்குப் பிறகு சோழ ராஜ்ய சிம்மாசனத்தில் அவன் ஏறுவதற்காகத்தான்! எப்படி யிருக்கிறது கதை..?

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்  ஊரெய்தி உள்ளப் படும் 

செயல்திறனால் பெருமை பெற்று உயர்ந்தவரின் வினைத்திட்பமானது நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்.

 (வினைத்திட்பம்... நம் வந்தியத்தேவனைத் தவிர யாரைச் சொல்லிவிட முடியும். கோட்டைத் தளபதி சின்ன பழுவேட்டரையரையே ஏமாற்றிவிட்டு புலவர்கள் கூட்டத்துடன் கலந்து சுந்தர சோழரின் தரிசன மண்டபத்திற்குள் வந்துவிடும் நம் கதாநாயகன் வந்தியத்தேவன் முதல் முதலில் சுந்தர சோழரை பார்க்கும் தருணம்...)

"சக்கரவர்த்திப் பெருமானே! அபாயத்தைப் பற்றி சொல்வதற்கு நான் யார்? நம் வீர தளபதி சின்னப் பழுவேட்டரையரும், அரண்மனை வைத்தியரும், சாவித்திரி அம்மனை யொத்த மகாராணியும் இருக்கும்போது என்ன அபாயம் வந்துவிடும்? 'அபயம்' 'அபயம்' என்று தங்களிடம் நான் முறையிட்டுக் கொண்டேன். பழைய வாணர் குலத்துக்கு நான் ஒரு அறியாச் சிறுவன்தான் இப்போது பிரதிநிதியாக மிஞ்சியிருக்கிறேன். தங்கள் திருப்புதல்வர் மனம் மகிழும்படி சோழப் பேரரசுக்குத் தொண்டு புரிந்து வருகிறேன். எங்கள் பழைய பூர்வீக ராஜ்யத்தில் ஒரு சிறு பகுதியையாவது அடியேனுக்குத் திருப்பிக் கொடுக்க அருள் புரியவேண்டும். அரசர்க்கரசே! அபயம்! அபயம்! இந்த அறியாச் சிறுவன் தங்கள் அபயம்!” என்று வல்லவரையன் மூச்சு விடாமல் படபடவென்று பேசி நிறுத்தினான்.

       இதைக்கேட்ட பழுவேட்டரையரின் முகம் சுருங்கியது. சுந்தர சோழரின் முகம் மீண்டும் மலர்ந்தது. மகாராணியின் முகத்தில் கருணை ததும்பியது.

         "இந்தப் பிள்ளை பிறந்தவுடனே சரஸ்வதி தேவி இவனுடைய நாவில் எழுதிவிட்டாள் போலும்! இவனுடைய வாக்குவன்மை அதிசயமாயிருக்கிறது!" என்றாள் தேவி.

       இதுதான் சமயம் என்று வந்தியத்தேவன், "தாயே! தாங்கள் எனக்காகப் பரிந்து ஒரு வார்த்தை சொல்ல வேணும். நான் தாய் தந்தையற்ற அநாதை. வேறு ஆதரவு அற்றவன். என்னுடைய வேண்டுகோளை நானேதான் வெளியிட்டாகவேண்டும். பக்தனுக்குப் பரிந்து பார்வதிதேவி பரமசிவனாரிடமும், லக்ஷ்மிதேவி மகாவிஷ்ணுவிடமும் பேசுவதுபோல் தாங்கள் எனக்காகப் பேச வேண்டும். எங்கள் பூர்வீக அரசில் ஒரு பத்துக் கிராமத்தை திரும்பக் கொடுத்தாலும் போதும். நான் மிகவும் திருப்தி அடைவேன்!" என்றான்.

         இதையெல்லாம் கேட்கக் கேட்கச் சுந்தர சோழருக்கு ஒரே வியப்பும் மகிழ்ச்சியுமாயிருந்தது. அவர் சின்னப் பழுவேட்டரையரைப் பார்த்து, “தளபதி! இந்த இளைஞனை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. தேவியின் முகத்தைப் பார்த்தால், இவனை மூன்றாவது பிள்ளையாகச் சுவீகாரம் எடுத்துக்கொண்டு விடலாமா என்றே யோசிப்பதாகத் தெரிகிறது. இவனுடைய கோரிக்கையை நிறைவேற்றி வைக்கலாம் அல்லவா? அதில் ஒன்றும் கஷ்டம் இராதே? உமது அபிப்பிராயம் என்ன?" என்றார்.

          "இதில் அடியேனுடைய அபிப்ராயத்துக்கு இடம் என்ன இருக்கிறது? இளவரசர் கரிகாலரின் கருத்தையல்லவோ அறிய வேண்டும்?" என்றார் தஞ்சைக் கோட்டைத்தளபதி.

          ''சக்கரவர்த்தி! இளவரசரைக் கேட்டால், பழுவூர்த் தேவரைக் கேட்கவேண்டும் என்று சொல்கிறார், பழுவூர்த் தேவரோ இளவரசரைக் கேட்கவேண்டும் என்கிறார். இரண்டு பேருக்கும் நடுவில் என் கோரிக்கை..."

        ''பிள்ளாய்! நீ கவலைப்படாதே! இரண்டுபேரையும் சேர்த்து வைத்துகொண்டே கேட்டுவிடலாம்!" என்றார் சக்கரவர்த்தி.

          பிறகு சின்னப் பழுவேட்டரையரைப் பார்த்து, "தளபதி! இளவரசனிடமிருந்து இந்தப் பிள்ளை ஓலை கொண்டுவந்தான். பழையபடி காஞ்சிக்கு நான் வரவேண்டும் என்றுதான் ஆதித்தன் ஓலையில் எழுதியிருக்கிறான். அங்கே புதிதாய்ப் பொன் மாளிகை கட்டியிருக்கிறானாம். அதில் நான் சில நாளாவது தங்க வேண்டுமாம்!" என்றார்.

        "இந்தச் சிறுவன் காஞ்சியிலிருந்து ஒரே மூச்சில் வந்திருக்கிறான். சில நாள் இவன் இங்கேயே தங்கி இளைப்பாறி விட்டுப் போகட்டும். வேறு ஆளிடம் ஓலையைச் கொடுத்தனுப்பலாம்."

       "அப்படியே செய்க. இளவரசன் வருகிறவரையிலேகூட இவன் இங்கேயே இருக்கலாம்!"

      இச்சமயம் மலையமான் மகள் எழுந்து நிற்கவே, சின்னப் பழுவேட்டரையர், "இன்று அதிக நேரம் தங்களுக்குப் பேசும் சிரமம் கொடுத்துவிட்டேன், மன்னிக்கவேணும். தேவி எச்சரிக்கை செய்யும் வரையில் நீண்டுவிட்டது" என்று சொன்னார்.

        "தளபதி! இந்தப் பிள்ளை நம் விருந்தாளி. இவனுக்கு வேண்டிய வசதிகள் செய்துகொடுங்கள். சக்கரவர்த்திக்கு மட்டும் உடம்பு சரியாயிருந்தால், இவனை நமது அரண்மனையிலேயே இருக்கச் சொல்லியிருக்கலாம்!" என்றாள் மலையமான் மகள்.

       ''நான் கவனித்துக்கொள்கிறேன், தாயே! தங்களுக்கு அந்தக் கவலைவேண்டாம். நன்றாய்க் கவனித்துக் கொள்கிறேன்" என்றார் சின்னப் பழுவேட்டரையர். 

பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்

இருள்தீர எண்ணிச் செயல்.

வேண்டிய பொருள் - ஏற்ற கருவி - தக்க காலம் - மேற்கொண்ட தொழில் -உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்...

பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும் மயக்கம் தீர எண்ணி ஆராய்ந்து  செய்து விட்டுப் புதினம் படிப்போர் இதயங்களையெல்லாம் மயக்கத்துக்குள்ளாக்கியது எவ்விதத்தில் நியாயம் வந்தியத்தேவரே!?!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

உங்க பெண் குழந்தைக்கு இந்த உணவுகளைக் கட்டாயம் கொடுக்கவும்!  

நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைக்கவும் சுவாரஸ்யமாக மாற்றவும் யாரால் முடியும்?

SCROLL FOR NEXT