மங்கையர் மலர்

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

சுசீலா மாணிக்கம்

ஓவியம்: பத்மவாசன்

பாகம் - 48        

அதிகாரங்கள் 70,71 ‘மன்னரைச்சேர்ந்தொழுகல்’, ‘குறிப்பறிதல்’

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில 

வேண்டுப வேட்பச் சொலல்

 

ஆட்சியாளருக்கு ஏதேனும் சொல்ல விரும்பினால், ஆட்சியாளரின் அப்போதைய மனநிலை, அறிந்து, தக்க காலத்தை எதிர்நோக்கி, வெறுப்பில்லாத வற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறு சொல்ல வேண்டும். 

(பெரிய பிராட்டியார் அரண்மனையில் ஆழ்வார்கடியான்) 

           "அம்மணி! தங்களுடைய மாமனார், மூன்று உலகும் கீர்த்தி பெற்ற பராந்தக சக்கரவர்த்தி, - அவருடைய பட்டப் பெயரால் விளங்கும் வீரநாராயணபுரத்துக்குப் போயிருந்தேன்... அங்கே வீரநாராயணப் பெருமாள் அல்லும் பகலும் தூங்காமல், கண் மூடாமல் மாகடல் போன்ற வீரநாராயண ஏரியைக் காத்து அருள் புரிந்து வருகிறார். அத்தகைய பெருமானுடைய கோயிலில் செங்கல் சுவர்கள் இடிந்து விழுந்து வருகின்றன. கோயில் இடிந்தால் ஏரிக்கரையும் இடிந்து நூறு நூறு ஊர்கள் பாழாகிவிடும். வீர நாராயணப் பெருமாளின் கோயிலைக் கற்றளியாக்கித் திருப்பணி செய்யவேண்டும்!" என்றான்.

             "ஆகட்டும்; செய்வோம்! அதைப்பற்றி விவரமாக என்னிடம் சொல்! இவர்கள் எல்லாரும் இப்போது போகட்டும்!' என்று சோழ குல மூதாட்டி கூறினார். 

         அந்தக் குறிப்பை உணர்ந்து ஈசான சிவபட்டர் உள்பட அனைவரும் வெளியேறிச் சென்றார்கள்.

      உடனே, செம்பியன் மாதேவி குரலைத் தாழ்த்திக் கொண்டு, "திருமலை! யாத்திரையில் எங்கெங்கே போயிருந்தாய்! என்னென்ன பார்த்தாய்? என்னென்ன கேள்விப்பட்டாய்? விவரமாய்ச் சொல்லு! ஏதோ முக்கியமான விஷயம் கொண்டு வந்திருக்கிறாய். அதனால்தான் அப்படிக் குறுக்கிட்டுப் பேசினாய், இல்லையா?" என்று சொன்னார்.

          ''ஆம், தாயே! முக்கியமான விஷயம் பல கொண்டு வந்திருக்கிறேன். ஆயினும் தங்கள் திருவுள்ளத்தை நோக்கிக் காத்திருப்பேன். ஆனால், காஞ்சியில் உள்ள இளவரசரைப் பற்றி ஏதோ சொல்லத் தொடங்கினீர்கள். அதற்காகவே தடை செய்தேன். சற்றுமுன் இங்கே இருந்தவர்களில் உண்மையானவர் யார், ஒற்றர் யார் என்று யாருக்குத் தெரியும்? நாட்டில் எத்தனையோ விபரீதங்கள் நிகழ்ந்து வருகின்றன. எப்போது யாரால் என்ன துரோகம் நடக்கும் என்று சொல்வதற்கில்லை!" என்றான் திருமலையப்பன்.

       பெரிய பிராட்டி பெருமூச்சு எறிந்தார். ''ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இரத்த பாசம் உள்ளவர்கள், - ஒருவரையொருவர் சந்தேகிக்கும்படி ஆகிவிட்டது. ஆதித்த கரிகாலன் ஒரு காலத்தில் என்னிடம் எவ்வளவு விசுவாசம் வைத்திருந்தான்? சொந்தத் தாயைக் காட்டிலும் நூறு மடங்கு அன்பும் மரியாதையும்கொண்டிருந்தானே? அவன் கூடவல்லவா என் பேரில் ஐயுறும்படி ஆகிவிட்டது. என் நாயகருடன் நானும் இந்த மண்ணுலகை விட்டுப் போயிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! என்னை வரக்கூடாதென்று தடுத்துவிட்டாரே? இங்கே செய்ய வேண்டிய பணிகளையும் கொடுத்து விட்டல்லவா போய் விட்டார்? என்ன துர்ப்பாக்கியசாலி நான்?" என்றார்.

       “அம்மா தங்கள் பதி முக்காலமும் உணர்ந்த மகான். ஜனக மகாராஜாவைப் போல் கலியுகத்தில் இந்தச் சோழ சிம்மாசனத்தில் வீற்றிருந்தார். தங்களை இருக்கும்படி அவர் சொல்லிப் போனது இந்த நாடு செய்த பாக்கியம். நூறு ஆண்டாகப் பல்கிப் பெருகி வரும் இந்தச் சோழப் பேரரசு சகோதரச் சண்டையினால் நசித்து நாசமாகாமல் காப்பாற்றும் பொறுப்பு தங்களைச் சார்ந்தது. தங்களாலேதான் அது முடியக்கூடியது."

      "எனக்குத் தோன்றவில்லை. என் சொந்த மகனே நான் சொல்வதைக் கேட்கவில்லை என்று ஏற்பட்டபிறகு மற்றவர்களை நான் எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? இருக்கட்டும்; ஒற்றர்களைப் பற்றிச் சொன்னாயே? இங்கே யார் ஒற்றர்களை அனுப்பியிருக்க முடியும்? இளவரசன் ஆதித்த கரிகாலன் அனுப்பியிருப்பான் என்று நினைக்கிறாயா? என் பேரில் அவனுக்கு அவ்வளவு அவநம்பிக்கை வந்துவிட்டதா?" என்றார் சிவபக்த சிரோன்மணியான மாதரசி.

    "என்னுடைய இருகாதினாலும் கேட்டேன் தாயே! இல்லாவிட்டால் இளவரசர் கரிகாலர் தங்கள் பேரில் ஐயப்படுவார் என்பதை நான் ஒரு நாளும் நம்பியிருக்க மாட்டேன்..."

            "என்ன கேட்டாய், திருமலை? உன் காதினால் என்ன கேட்டாய்?"

          ”மாமல்லபுரத்துக் கற்கோயில் ஒன்றின் அருகில் உட்கார்ந்து அவர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன்...' 

     "அவர்கள் என்றால் யார்?"

             ''இளவரசர் ஆதித்த கரிகாலர் ஒன்று, திருக்கோவலூர் மலையமான் இரண்டு, பல்லவப் பார்த்திபேந்திரன் மூன்று,- இவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். இருளடைந்த கற்கோயிலுக்குள் நான் மறைந்திருந்து கேட்டேன். மலையமானும் பார்த்திபேந்திரனும் வெகு ஆத்திரமாகப் பேசினார்கள். இரண்டு பழுவேட்டரையர் களும் தங்கள் குமாரர் மதுராந்தகத் தேவரும் சேர்ந்து சதி செய்து சக்கரவர்த்தியைச் சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்களாம். அதில் தங்களுக்கும் சம்பந்தம் இருக்கத்தான் வேண்டும் என்று மலையமான் கூறினான். அதை மற்றவர்கள் ஆமோதித்தார்கள். தஞ்சாவூர்மீது படையெடுத்துச் சென்று சக்கரவர்த்தியை விடுவித்துக்கொண்டு வரவேண்டும் என்று பார்த்திபேந்திரன் சொன்னான். அதையும் மற்ற இருவரும் ஆமோதித்தார்கள், ஆனால், சக்கரவர்த்தியைச் சண்டையின்றிக் காஞ்சீபுரத்துக்குக் கொண்டுவர இன்னும் ஒரு முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று இளவரசர் கூறினார். அதன் பேரில் சக்கரவர்த்திக்கு ஓலை எழுதி ஒருதூதனிடம் கொடுத்து அனுப்பத் தீர்மானித்தார்கள். அந்தத் தூதன் யார் என்பதையும் நான் கண்டுகொண்டேன். அவன் சாதாரணத் தூதன் அல்ல. மகா சாமர்த்தியசாலி; வீரபராக்கிரமசாலி. தூதன் வேலையோடு ஒற்றன் வேலையையும் செய்யக் கூடியவன். அவனுடன் நான் பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன். நான் தட்டியில் நுழைந்தால் அவன் கோலத்துக்குள் நுழையப் பார்த்தான். அவன் ஒன்றுமே தெரியப்படுத்தாமல் என்னிடமிருந்து பல விஷயங்களைக் கிரஹிக்கப் பார்த்தான். குடந்தை சோதிடர் அவனிடம் தமது கை வரிசையைக் காட்டினார். அதுவும் பலிக்கவில்லை. பிறகு அவன் தஞ்சாவூருக்குச் சென்று சக்கரவர்த்தியிடம் ஓலையைக் கொடுத்துவிட்டான் என்று கேள்விப்படுகிறேன்...' 

        "அப்புறம் என்ன நடந்தது? அதற்குச் சக்கரவர்த்தி என்ன மறுமொழி சொன்னாராம்? "

            "மறு நாளைக்கு விடை எழுதித் தருவதாகச் சொன்னாராம். அதற்குள் அவன் பேரில் பழுவேட்டரையர் களுக்கு ஏதோ சந்தேகம் வந்துவிட்டது. அவர்களுடைய கட்டுக் காவல்களையெல்லாம் மீறிக்கொண்டு அவன் எப்படியோ தப்பித்துச் சென்று விட்டானாம்!"

         அப்படியானால் அவன் மிக சமார்த்தியசாலிதான்; சந்தேகமில்லை. அப்புறம் நீ என்ன செய்தாய்? காஞ்சீபுரத்திலிருந்து கிளம்பிய பின்...?"

        "நேரே இங்கு வருவதற்காகவே புறப்பட்டேன். வழியில் வீர நாராயணபுரத்தில் பெருமாளைத் தரிசிக்கத் தங்கினேன். தங்கிய இடத்தில் பெருமாள் அருளினால் ஒரு இரகசியத்தை அறியும்படி நேர்ந்தது..." 

        "அது என்ன? இன்னும் ஒரு ரகசியமா?"

        "ஆம், தாயே! கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் அன்று இரவு ஒரு பெரிய விருந்து என்று தெரித்தது. அந்த விருந்துக்குப் பெரிய பழுவேட்டரையர் வந்தார். அவருடன் இளையராணியின் பல்லக்கும் வந்தது"

       “திருமலை எல்லாம் அவளுடைய செயல்தான். இந்தச் சோழ நாட்டுக்கு இப்போது நேர்ந்திருக்கும் ஆபத்து அந்தப் பெண்ணால் ஏற்பட்டதுதான்! அவளை நீ சந்தித்துப் பேச முடிந்ததா?

        ''முடியவில்லை. அம்மா! முடியவில்லை! தங்கள் கட்டளையின் பேரில் அந்தப் பெண் பாம்பை என் சகோதரியாகப் பாவித்து எத்தனை வருஷம் வளர்த்தேன்! எங்கெல்லாம் தேடி அலைந்து பிரபந்த பாசுரங்களைக் கற்றுக்கொண்டு வந்து அவளுக்குக் கற்பித்தேன்! அதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் என் நெஞ்சம் கொதிக்கிறது! பெரிய பழுவேட்டரையரின் ராணியான பிறகு அவள் என்னைப் பார்க்கக்கூட மறுக்கிறாள்!....

         ''அதற்காக வருத்தப்பட்டு என்ன பயன்? இந்த உலகத்து மனிதர்களின் காரியங்கள் இப்படித்தான். நினைப்பது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக முடிகிறது... அப்புறம் கடம்பூரில் நடந்தது என்ன?"

"பல்லக்கிலே வந்தவள் நந்தினிதான் என்று எண்ணிக்கொண்டு எப்படியாவது அவளைச் சந்திப்பது அல்லது ஓலை எழுதி அனுப்பியாவது எச்சரிக்கை செய்வது என்ற உத்தேசத்துடன் கடம்பூருக்குச் சென்றேன். பெரும் அபாயத்துக்குத் துணிந்து கடம்பூர் மாளிகையின் வெளிச் சுவர் ஏறிக் குதித்தேன். அப்போதுதான் அந்த அதிசயமான மர்ம இரகசியம் தெரியவந்தது..."

          "திருமலை! உன் வழக்கமே இப்படித்தான். மேலும் மேலும் ஆவலைக் கிளப்புவாயே தவிர, செய்தியைச் சொல்ல மாட்டாய். அது என்ன அப்படிப்பட்ட அதிசயமான மர்ம இரகசியம்?"

           ''மன்னிக்க வேண்டும், தாயே! அதைச் சொல்லுவதற்கே தயக்கமாயிருக்கிறது. மூடுபல்லக்கில் இருந்தது பழுவூர் இளைய ராணி அல்ல. பழுவேட்டரையர் தாம் போகுமிடமெல்லாம் இளையராணியை அழைத்துக் கொண்டு போகிறார் என்று நாம் எல்லாரும் எண்ணிக்கொண்டிருந்தோமே, அது பெரிய தவறு...''

         "பழுவட்டரையர் பின் யாரை மூடு பல்லக்கில் வைத்து அழைத்துப் போகிறார்? அந்தக் கிழவரின் பெண் சபலத்துக்கு அளவே இல்லையா?"

       "மூடு பல்லக்கில் இருந்தது ஸ்திரீ அல்ல, தாயே!”

        "ஸ்திரீ இல்லை என்றால்?... எந்த ஆண் மகன் அப்படி மூடு பல்லக்கில் மறைந்துகொண்டு வருவான்?"

        "மன்னிக்க வேண்டும், அம்மா! மூடுபல்லக்கில் மறைந்து வந்தது. தங்களுடைய திருக்குமாரர் மதுராந்தகத்தேவர்தான்!"

    செம்பியன்மாதேவி சிறிது நேரம் திகைத்து நின்றுவிட்டார்.

      ''கடவுளே நான் செய்த குற்றத்துக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?” என்று தமது வாய்க்குள்ளே சொல்லிக் கொண்டார். 

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் 

மாறாநீர் வையக்கு அணி  

ஒருவர் சொல்லாமலேயே அவருடைய முகத்தை நோக்கி அவர் கருதியக் குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகிற்கு ஒரு அணிகலன் ஆவான்.

 வையக்கு அணி நம் ஆழ்வார்க்கடியான்தானே...

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

உங்க பெண் குழந்தைக்கு இந்த உணவுகளைக் கட்டாயம் கொடுக்கவும்!  

நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைக்கவும் சுவாரஸ்யமாக மாற்றவும் யாரால் முடியும்?

SCROLL FOR NEXT