மங்கையர் மலர்

Wisdom Tooth என்று சொல்லப்படக்கூடிய ஞானப்பல் என்றால் என்ன? அது அத்தனை முக்கியமானதா?

கார்த்திகா வாசுதேவன்

இன்று பல்வலி, பற்களின் வேர் சொத்தை என்று பல் மருத்துவரை அணுகும் 100 ல் 10 பேருக்கு இந்த ஞானப்பல் பிரச்சனை இருக்கிறது. அதென்ன ஞானப்பல்! இதற்கு ஏன் இப்படி ஒரு பெயர் வந்தது? பொதுவாக இந்த வகை பற்கள் ஆண்கள், பெண்கள் என இருதரப்பிலுமே 18 வயது வரை இந்தப் பற்களால் பெரிதாகப் பிரச்சனை இல்லை.18 முதல் 21 வயதுக்கு மேல் தான் இந்த பற்கள் முளைக்கின்றன.

18 வயதுக்கு மேல் நமது தாடையில் பல் ஈறுகளுக்கு அடியிலேயே மறைந்திருக்கும் இந்தப் பற்கள் அதை அடுத்துள்ள பற்களுக்கு எப்போதுமே பெரிய தலைவலியாகத்தான் அமைகின்றன.

ஞானபற்கள் முளைத்து வெளியில் வர நமது தாடையில் இடம் போதாது என்கிறார்கள் பல் மருத்துவர்கள். இதற்கு ஒரு சுவாரஸ்யப் பின்னணி உண்டு. ஆதியில் மனிதர்கள் வேட்டையாடி பச்சை மாமிசம் உண்டு வாழ்ந்து வந்த காலத்தில் அவர்களது தாடை அமைப்பு அகலமானதாகவும், வாய் பெரிதாகவும் இருந்திருக்கிறது. அப்போது அவர்கள் உணவை மிக நன்றாக மென்று தின்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். எனவே, அகன்ற தாடை அமைப்புடன் அன்றைய மனிதர்களுக்கு ஞானப்பற்களுடன் சேர்த்து மொத்தம் மூன்று கடைவாய்ப்பற்கள் இருந்தன. மற்ற இரண்டு கடைவாய்ப்பற்கள் இன்றும் நம் அனைவருக்கும் உண்டு. மூன்றாவது கடைவாய்ப்பல்லாக இந்த ஞானப்பல்லைச் சொல்கிறார்கள் பல் மருத்துவர்கள்.

இந்த மூன்றாவது கடைவாய்ப்பல்லின் உபயோகமானது உணவை சமைத்து உண்ணத் தொடங்கும் போது படிப்படியாகக் குறையத் தொடங்கியது. மனிதன் தனக்கான உணவை பல்வேறு விதமாக சமைத்து உண்ணத் தொடங்கியதும் அவனது தாடை அமைப்பு சுருங்கத் தொடங்கி விட்டது என்கிறார் திருச்சி ட்ரினிட்டி பல் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியரான டாக்டர். அபிஷேக் ஜான் பாபு. தாடை தான் சுருங்கியதே தவிர பற்களின் எண்ணிக்கை குறையவில்லை. அது அப்படியே தான் இன்றும் நீடிக்கிறது . ஆனால் தாடை சுருங்கியதால் மூன்றாவது கடைவாய்ப்பல்லான ஞானப்பல் முளைத்து வெளியில் வர வழியின்றி தனக்கு அருகில் இருக்கும் அடுத்த பல்லுக்கு தொல்லை கொடுக்கத் தொடங்கும் போது தான் பிரச்சனை ஆரம்பமாகிறது.

நாம் உணவு உண்ணும் போது இந்த மூன்றாவது கடைவாய்ப்பல், இரண்டாவதாக இருக்கும் கடைவாய்ப்பல்லை தொடர்ந்து இடித்துக் கொண்டே இருந்தால் முதலில்ஞானப்பல்லின் மேற்புறத்தில் இருக்கும் ஈறுகள் வீங்கத் தொடங்கும் . அது வீங்கத் தொடங்கும் போது நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் அதில் சிக்கி சிறிய அளவில் சலம் வெளியேறி இன்ஃபெக்சன் ஆரம்பித்தால் அது அடுத்தபடியாக பல் சொத்தைப் பிரச்சனையில் கொண்டு விடும். இதை

முதலிலேயே இனம் கண்டு உடனடியாக பல் மருத்துவர்களை அணுகினால் வேர் சிகிச்சை வரை செல்ல வேண்டிய அவசியமின்றி ஆரம்ப நிலையிலேயே சொத்தையான பல்லைச் சரி செய்து காப்பாற்றி விடலாம். அலட்சியப்படுத்தி நேரம் கடத்தினால் பிறகு அவஸ்தை தான் என்கிறார்கள் மருத்துவர்கள். பெரும்பாலானோருக்கு ஞானப்பல்லால் பிரச்சனை என்றால் உடனடியாக அதை அப்புறப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்பதே அனேக பல்மருத்துவர்களின் கணிப்பாக இருக்கிறது. சிலர் அதை மறுக்கவும் செய்கிறார்கள்.

உங்கள் வாயின் பின்புறத்தில் உள்ள மூன்றாவது கடைவாய்ப்பற்களான இந்த ஞானப்பற்கள் ஆரோக்கியமாக இருந்தால் அவற்றை அகற்ற வேண்டிய அவசியமில்லை. முழுமையாக வளர்ந்து அல்லது முழுமையாக முளைத்து வெளியில் வந்து சரியாக நிலைநிறுத்தப்பட்டு, எதிரெதிர் பற்களால் சரியாகக் கடிக்கும் நிலையில் உள்ளன என்றால் அவற்றால் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால், கிடைமட்டமாக வளர்ந்து பக்கத்தில் இருக்கும் இரண்டாவது கடைவாய்ப்பல்லை இடித்துப் புண்ணாக்கும் அபாயம் இருந்தால் அவற்றை நீக்கி விடுவதே உகந்தது என்பதே பல் மருட்துவர்களின் ஒருங்கிணைந்த கருத்து.

ஆகவே, ஞானப்பல் பிரச்சனை இருப்பவர்கள் ஆரம்பத்திலேயே அதைக் கண்டுணர்ந்து பல்மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. முடிந்தவரை வலியில் இருந்து தப்பலாம் அத்த்துடன் அது இரண்டாவது கடைவாய்ப்பல் தாண்டி பிற பற்களுக்கும் ஊறு விளைவித்து விடாமல் தடுக்கலாம்.

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

SCROLL FOR NEXT