நம்முடைய அடுத்த தலைமுறையின் முக்கிய ஆதாரமாக விளங்கும் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு Birth Basix: Pregnancy Physiotherapy, Yoga and Lactation Support நிறுவனர் மற்றும் pelvic floor physiotherapist board certified Lactation Consultant டாக்டர் சோனாலி சந்தானம் அவர்கள் கல்கி ஆன்லைன் சார்பாக சந்தித்தோம்.
டாக்டர் சோனாலி, அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டுதல் மற்றும் பிரசவகால சிகிச்சைகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்குவதில் முனைவர் பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். மேலும், மகப்பேறு கால பிசியோதெரபி சிகிச்சை முறையில் அமெரிக்கன் போர்டின் சான்றிதழ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி எமது பிரத்யேக பேட்டியிலிருந்து...
தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு என்ன நன்மை?
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் காரணமாக சேயின் நலனை மட்டும் மேம்படுத்தப்படுவதில்லை. தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு கருப்பைவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. இதனால் தாய்ப்பால் கொடுப்பது என்பது குழந்தையின் நலனை மட்டும் சார்ந்தது அல்ல. தாயின் உடல்நலத்தையும் சார்ந்துள்ளது.
இன்னும் சொல்லப்போனால் தாய்ப்பால் விழிப்புணர்வு என்பது வெறும் தாயை மட்டும் குறிப்பிடும் விஷயமல்ல. தாய்ப்பால் விழிப்புணர்வு வாரத்தின் மிக முக்கியமான அம்சமே தந்தையின் அரவணைப்பு தாய்க்கும், குழந்தைக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்துவதுதான்.
தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு எலும்பு தேய்மான பிரச்சனை உருவாகுமா?
பொதுவாக இந்த கேள்வி எல்லா தாய்மார்களுக்கும் உண்டாகும். தாய்ப்பால் கொடுப்பதால் எலும்பு தேய்மான பிரச்சனை ஏற்படாது. தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்படும் என்பது உண்மை. குழந்தை பிறப்புக்கு முன்பு தன்னுடைய கால்சியத்தில் கவனம் செலுத்தாத பெண்களுக்கு குழந்தை பிறப்புக்கு பின்னர் கால்சியம் குறைபாடு உருவாக வாய்ப்புண்டு.
இந்த கால்சியம் பற்றாகுறையை பெண்கள் தவிர்க்க, மகப்பேறு காலத்தில் கால்சியத்திற்கு தேவையான உணவுகள், பாதாம், சீயா விதைகள் போன்ற பருப்பு வகைகள் எடுத்துக்கொள்ளவேண்டும். அதேபோல் மகப்பேறு காலத்தில் சரியான உடற்பயிற்சி, தேவையான ஓய்வு ஆகியவற்றை பின்பற்றினாலே குழந்தை பிறப்புக்கு பிறகான கால்சியம் குறைபாடு பிரச்னைகளை தவிர்க்கலாம்.
தாய்ப்பால் தொடர்பான கேள்விகளும் பதில்களும் நாளையும் தொடரும்...