தமிழ்நாடு சட்டப்பேரவையின் கடைசி நாளான இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் தனியார் நிறுவனங்களில் 8 மணி நேரத்துக்கு பதில் 12 மணி நேரம் பணியாற்றுவதற்கான சட்டம் முன்வடிவு மசோதாவை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார். இந்த சட்ட மசோதா சட்டப்பேரவை உறுப்பினர்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட மசோதாவின் மூலம் தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவை இந்த சட்ட மசோதவை எதிர்த்து வெளிநடப்பு செய்து இருப்பதோடு, இந்த சட்ட மசோதாவையும் எதிர்க்கின்றன.
இது குறித்து பேசிய அமைச்சர் கணேசன், "சில ஐடி நிறுவனங்கள் 12 மணி நேரம் வேலைக்கு சம்மதம் தெரிவித்ததால் இந்த சட்ட மசோதா கொண்டுவரப்படுகிறது. மற்றபடி தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் நேரம் 8 மணி நேரம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தொழிலாளர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் இந்த சட்டம் இருக்கும்" எனத் தெரிவித்து உள்ளார்.
இது குறித்துப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘மத்திய அரசு கொண்டு வந்ததற்காக இதைக் கொண்டு வரவில்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழகத்தை நோக்கி வருகின்றன. குறிப்பிட்ட சில தொழிலுக்கு மட்டுமே இது பொருந்தும். தொழிற்சாலைகளில் நெகிழ்வுத்தன்மை வர வேண்டும் என்பதற்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது. எந்தத் தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் பொருந்தும்’ என்று தெரிவித்து இருக்கிறார்.
இந்த சட்ட மசோதா குறித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘தொழிற்சாலைகளை பாதுகாக்கும் அதேநேரத்தில், தொழிலாளர் நலனையும் பாதுகாக்க வேண்டும்’ என்று தனது கருத்தைக் கூறி இருக்கிறார்.
‘தமிழ்நாடு அரசு கொண்டுவரும் இந்த சட்ட மசோதாவால் பல தனியார் ஊழியர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது மறைமுகமாகக் கட்டாயமாக்கப்படும்’ என சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ்நாடு அரசு கொண்டுவரும் இந்த சட்ட மசோதாவுக்கு பல தனியார் நிறுவன ஊழியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.