பெரு நாட்டில் உள்ள தங்க சுரங்கத்தில் திடீரென தீ பற்றி விபத்து ஏற்பட்டது அதில் 27 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அரேக்விபா பகுதியில் உள்ள லா எஸ்பெரான்சா சுரங்கத்திற்குள் உள்ள சுரங்கப்பாதையில், மின் கம்பிகள் தீ பிடித்து எரிந்ததால் தீ விபத்து ஏற்பட்டது என , பெரு காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞர் அலுவலகம் உறுதி செய்துள்ளனர்.
இந்த தீ மளமளவென சுரங்கம் முழுவதும் பரவியதால் தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். மேலும் சுரங்கத்தை சுற்றிலும் புகை மூட்டம் சூழ்ந்ததால் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. எனவே இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்தனர். பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் இந்த தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தென் அமெரிக்க நாடான பெரு தங்கம் உற்பத்தி செய்வதில் உலகளவில் முதன்மை வகிக்கிறது. அங்கு ஏராளமான தங்க சுரங்கங்கள் காணப்படுகின்றன. அதே சமயம் சுரங்கம் தொடர்பான விபத்துகள் அதிகம் நிகழும் நாடுகளுள் ஒன்றாகவும் திகழ்கிறது.
இங்கு, 100 அடிக்கும் கீழே, 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று முன்தினம் பணியாற்றி வந்தனர். அப்போது திடீரென தீப்பற்றி, சுரங்கம் முழுதும் பரவியது. தகவலறிந்து வந்த மீட்புப் படையினர், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதற்கிடையே மீட்பு படையினர் சுரங்கத்தில் சிக்கி கொண்ட தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் சுமார் 175 பேரை அவர்கள் பத்திரமாக மீட்டனர். எனினும் இந்த விபத்தில் சிக்கி 27 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சோகத்துடன் அங்கு திரண்டனர்.
இதில் 27 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த தீ விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக சுரங்கம் தீப்பிடித்தது தெரிய வந்துள்ளது.