ஒடிசா மாநிலத்தின் பாலசோர் பகுதியில் கடந்த மாதம் 2ம் தேதி மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று அடுத்துடுத்து மோதிக் கொண்டதில் 293 பேர் உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கி எடுத்தது. இந்த விபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்த விபத்துக் குறித்து ரயில்வே பாதுகாப்பு அணையர், ‘இது மனிதத் தவறால் நிகழ்ந்த விபத்து’ என்று இந்திய ரயில்வே அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.
அந்த அறிக்கையில் அவர், “சிக்னல் பிரிவில் பணியாற்றும் தொழிலாளர்கள்தான் இந்த விபத்துக்குக் காணரம். மற்றபடி தொழில்நுட்பக் கோளாறுகள், இயந்திரக் கோளாறு மற்றும் நாச வேலைகள் காரணமாக இந்த விபத்து நிகழவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ரயில்வே துறையில் வேண்டிய மட்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட பிறகும், அதுகுறித்த ஆய்வுக்கான நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத சில அதிகாரிகளின் அலட்சியப்போக்கே இந்த விபத்துக்கான காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சிக்னல் பணியில் குறைபாடுகள் மற்றும் இரண்டு பாதைகளை இணைக்கும் சுவிட்சுகளில் பிரச்னை இருந்திந்தால் அது சம்பந்தமாக ரயில்வே நிலையத்துக்கு புகார் அளிக்கப்பட்டிருந்தால், ஊழியர்களால் அது சரிசெய்யப்பட்டு இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக சிபிஐ இந்த விபத்தில் குற்றவியல் சதி ஏதும் உள்ளதா என விசாரணை நடத்தி வந்தது. அதைத் தொடர்ந்து, அருண்குமார் மஹந்தா, எம்.டி.அமீர் கான் மற்றும் பப்பு குமார் ஆகிய மூன்று பேரை சிபிஐ கைது செய்து இருக்கிறது. இதில் அருண்குமார் பாலசோர் ரயில் நிலைய மூத்த பொறியாளர், அமீர் கான் இளம் பொறியாளர், பப்பு குமார் தொழில்நுட்பவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இந்த மூன்று பேரின் அலட்சியப்போக்காலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, இவர்கள் மூன்று பேரின் மீதும் கொலை வழக்கு இல்லாமல், culpable homicide என்ற பிரிவிலும் ஆதாரங்களை அழித்த குற்றச்சாட்டின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பெரும்பாலானவர்கள் இந்த சட்டப் பிரிவு குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை. `culpable homicide' என்பது இறப்பை உண்டாக்கும் நோக்கத்தோடு அல்லது இறப்பை உண்டாக்கக்கூடிய உடல் காயங்களை உண்டாக்கும் நோக்கத்தோடு அல்லது அதுபோன்றச் செயலால் இறப்பு உண்டாகும் என்று தெரிந்தும் அந்தச் செயலைச் செய்து இறப்பை உண்டாக்குவது எனப்படுகிறது.