ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு போல இருந்த உலகத்துண்டை பார்த்த பயணி அதிர்ந்து போனார். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர், இது ஏர் இந்தியாவின் கேட்டரிங் பார்ட்னர், காய்கறி நறுக்க பயன்படுத்தும் இயந்திரத்தில் இருந்து வந்தது எனத் தெரியவந்தது.
இரு தினங்களுக்கு முன்பு ஏர் இந்தியா விமானத்தில் பெங்களூர் - சான் பிரான்சிஸ்கோ பயணம் செய்த மாதுர்ஸ் பால் என்பவர் தனது X பக்கத்தில் பதிவு ஒன்றைப் போட்டார். அந்த பதிவில் ”ஏர் இந்தியாவின் உணவுகள் கத்தி போல வெட்டக்கூடியவை. அவர்கள் கொடுத்த உருளைக்கிழங்கு மற்றும் அத்திப்பழ சாலெட்டில் பார்ப்பதற்கு பிளேடு போல இருக்கும் உலகத்துண்டு ஒன்று இருந்தது. தெரியாத்தனமாக வாயில் போட்டு மென்ற பிறகுதான் எனக்கு ஏதோ தட்டுப்படுவது போல உணர்வு வந்தது. அதை உடனடியாக துப்பிவிட்டேன். அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் இல்லை” எனப் பதிவிட்டிருந்தார். இந்த நிகழ்வு கடந்த ஜூன் 9ம் தேதி நடந்துள்ளது.
இதைத்தொடர்ந்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையுமான FSSAI, நேற்று விமான கேட்டரிங் நிறுவனமான TajSATS-க்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஒருவேளை அந்த கூர்மையான உலோகத் துண்டை அவர் விழுங்கி இருந்தால் என்ன ஆகி இருக்கும்? இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதானவை என்றாலும், தெரியாத்தனமாக உலோகத்துண்டு, கூர்மையான பொருட்கள், கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றை விழுங்கிவிட்டால் அவை நம் உடலில் நீண்ட கால தாக்கங்களை ஏற்படுத்தும்.
கூர்மையான உலோகத்துண்டு, கண்ணாடி போன்றவற்றை விழுங்கினால் அவை உணவு குழாய், வயிறு, குடல் போன்ற உறுப்புகளை கிழித்து ரத்தப்போக்கு, தொற்று மற்றும் பிற சிக்கல்களை ஏற்படுத்தும்.
உலகத்துண்டு குடலில் சிக்கிக்கொண்டால், அது குடல் அடைப்புக்கு வழிவகுக்கும். இதனால் வயிற்று வலி, குமட்டல், வாந்தி, மலச்சிக்கல் போன்ற அச்சுறுத்தல்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம். இது சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிருக்கே ஆபத்தானதாக மாறிவிடும்.
சில அரிய சந்தர்ப்பங்களில் கூர்மையாக இருக்கும் கண்ணாடி மற்றும் உலோகத்துண்டை விழுங்குவது உயிரையே பறித்துவிடும். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் வயிற்றில் தங்கினால், அவை கேன்சரைக் கூட ஏற்படுத்தலாம். எனவே, இதுபோன்ற பொருட்களை தெரியாத்தனமாக விழுங்கினால் உடனடியாக மருத்துவரை நாடுவது முக்கியம்.
ஒரு பக்கம் என்னடான்னா அமேசான் பார்சலில் பாம்பு வருது. மறுபக்கம் விமான சாப்பாட்டுல பூச்சி, பிளேடு எல்லாம் கெடக்குது. இதெல்லாம் பார்க்கும்போது ஒன்னே ஒன்னுதான் கேட்க தோனுது.
நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?