தஞ்சை மாவட்டத்தின் கடலோரக் கிராமமான மனோராவில் மீனவர் சுப்ரமணியன் என்பவர் விரித்து வைத்த வலையில் டுகோங்ஸ் எனப்படும் அரிய வகை கடல் பசு ஒன்று நேற்று முந்தினம் இரவில் சிக்கிக் கொண்டது. மீனுக்காக முதல்நாள் இரவு மீனவர் விரித்திருந்த வலையில் அரிய வகை கடல்பசு சிக்கிக் கொண்டது மறுநாள் காலையில் தனது வலையை சோதிக்க வரும் போது தான் மீனவருக்குத் தெரிய வந்தது. கடல்பசு சிக்கிக் கொண்ட செய்தி அறிந்ததும் மீனவர் சுப்ரமணியன் உடனடியாக வனத்துறை அதிகாரிகள் மற்றும் கடற்பசு பாதுகாப்புக் குழுவினர் இருவருக்குமே தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்ததுமே ஓம்கார் ஃபவுண்டேஷன் ஆய்வாளர்கள் குழு (கடற்பசு பாதுகாப்புக் குழு) மற்றும் வனத்துறை அதிகாரிகள் குழு என இரு தரப்பினருமே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அங்கிருந்து பாதுகாப்பான முறைகளைப் பின்பற்றி வலையில் சிக்கிய கடல் பசுவை மீண்டும் கடலில் திருப்பி விடும் பணியை மேற்கொண்டனர். இதற்கான காணொளியை ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு, மீனவருக்கான பாராட்டுகளுடன் டுவிட்டரில் பகிர்ந்திருந்தார்.
சுப்ரியா சாஹுவின் பாராட்டு…
ஓம்கார் கடற்பசு பாதுகாப்புக் குழுவின் ஆய்வாளர்களில் ஒருவரான அகில் தம்பியும் அக்கறையுடன் தமக்கு கடல்பசு சிக்கிய விவரத்தை தெரிவித்ததில் மீனவர் சுப்மணியனைப் பாராட்டியிருந்தார்.
டுகோங்ஸ் என்பவை கடல் பாலூட்டிகளான மனாட்டிகள் பிரிவைச் சார்ந்தவை , இந்தோ-மேற்கு பசிபிக் முழுவதும் சுமார் 40 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இவை மிக அரிதாகவே காணப்படுகின்றன. ஒரு காலத்தில் பலதரப்பட்ட குடும்பமாக வாழ்ந்து வந்த Dugongidae இன் இன்றைய வாழும் ஒற்றைப் பிரதிநிதி இதுவாகும். அதன் நெருங்கிய நவீன உறவினர் என்றால், ஸ்டெல்லரின் கடல் பசுவைச் சொல்லலாம், அதுவும் கூட 18 ஆம் நூற்றாண்டில் கடல் வேட்டையடுதலில் முற்றிலுமாக அழிந்துபோனதாகக் கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது.