செய்திகள்

பணி ஓய்வுக்குப் பின்பும் மருத்துவம் படிக்கும் பெண்மணி!

கல்கி டெஸ்க்

ருத்துவப் படிப்பு என்பது பலரது கனவு. லட்சியம் என்று கூடக் கூறலாம். படிக்க வேண்டிய காலத்திலேயே படிக்கத் தடுமாறுபவர்களுக்கு மத்தியில் தனது பணி ஓய்வுக்குப் பின்பும் தனது தந்தையின் கனவை நிறைவேற்ற மருத்துவம் படித்து வருகிறார் ஒரு பெண்மணி. ஆம், மத்தியபிரதேசம் மாநிலம், அம்லா பகுதியைச் சேர்ந்தவர் வினோத் யாதவ் - சுஜாதா தம்பதியினர்.

சுஜாதாவுக்கு தற்போது 63 வயது ஆகிறது. இந்திய ராணுவப் பணியில் இருந்த இவர், எட்டு ஆண்டு காலப் பணிக்குப் பின்பு ஓய்வு பெற்று, எஸ்பிஐ வங்கியில் சேர்ந்து பணியாற்றினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வங்கியிலிருந்து பணி ஓய்வு பெற்ற சுஜாதாவுக்கு, மக்களுக்கு மருத்துவப் பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வந்திருக்கிறது. இந்த ஆர்வம் இவர் மனதில் புதிதாக முளைத்ததில்லை. ஏற்கெனவே இவரது தந்தை, சுஜாதாவின் இளவயதில் மருத்துவக் கனவை விதைத்ததினால் உண்டானதாகும்.

மருத்துவராகும் முயற்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி வந்தார். அதில் கடந்த ஆண்டு எழுதிய நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து காரைக்காலில் உள்ள மருத்துவக் கல்லூரில் மருத்துவம் படிக்க சுஜாதாவுக்கு இடம் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதத்துக்கு முன்பு மருத்துவம் படிக்கும் முதலாமாண்டு மாணவியாக கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறார் சுஜாதா.

இந்த நிலையில், சுஜாதா தனது 63ம் வயதில் மருத்துவம் படிக்கத் தொடங்கி இருப்பது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வினோத் யாதவ் – சுஜாதா தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். இவரும் ஒரு மருத்துவர் ஆவார். இவர் மத்தியப் பிரதேசத்தில் ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.  

இது குறித்து சுஜாதா கூறும்போது, “சிறு வயதில் எனது தந்தை என்னிடம் மருத்துவராகி ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார். அதை நினைத்துத்தான் இந்த வயதிலும் முறையாக மருத்துவம் படித்து ஏழைகளுக்கு சேவை செய்ய முடிவெடுத்து இருக்கிறேன். மேலும், எனது கிராமத்தில் சிறிய மருத்துவமனை ஒன்றை கட்டி அதில் ஏழை மக்களுக்கு மருத்துவப் பணி செய்ய வேண்டும் என்பதுதான் எனது ஆசை” என்று தெரிவித்து இருக்கிறார்.

அதிகளவு புரதச் சத்து தரக்கூடிய 6 வகை மாவுப் பொருட்கள்!

ஐயப்பனின் சபரிமலை பதினெட்டு படிகள் உணர்த்தும் தத்துவம்!

கோதுமைப் புல்லின் ஆரோக்கிய நன்மைகள்!

கார்த்திகை மாத சோமவார விரதம் மற்றும் சங்காபிஷேகம் ஏன் சிவபெருமானுக்கு விசேஷம்?

ஓ! இப்படித்தான் நம்ம உடல் வெப்பத்தை கட்டுப்படுத்துதா? 

SCROLL FOR NEXT