தமிழகத்தின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு முக்கியமான உத்தரவைப் பிறப்பித்து இருக்கிறார். அந்த உத்தரவில், ‘‘தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பராமரிப்பின்றி, மக்களால் கைவிடப்பட்ட திறந்வெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் குவாரி குழிகள் ஆகியவை மக்களுக்குப் பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றன. இதனால் சில உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.
அதனால் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் தங்கள் மாவட்டத்தில் பராமரிப்பின்றி, மக்களால் கைவிடப்பட்ட திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், கட்டுமானப் பள்ளங்கள் மற்றும் குவாரி குழிகள் போன்றவற்றை கள ஆய்வு செய்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதோடு, அதுகுறித்த விவரம் மற்றும் கணக்கெடுப்பும் நடத்த வேண்டும். மேலும், அதுபோன்ற பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் வராத வண்ணம் உறுதியான உயரத்தில் பராபெட் சுவர்கள் எழுப்பப்பட வேண்டும்.
குவாரி குழிகளில் தேங்கியுள்ள நீரில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் குளிப்பதனால் ஏற்படும் விபத்தை தடுக்க உரிய பாதுகாப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். குத்தகை காலம் முடிந்து செயல்பாடின்றி கிடக்கும் குவாரி குழிகளை உரிய வேலி அமைத்து பாதுகாக்க சம்பந்தப்பட்ட குத்தகைதாரர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இதுபோன்ற பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள அந்தந்த மாவட்டத்துக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் பசுமை நிதி மற்றும் மாவட்ட கனிம நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதேபோல், சாலைகளில் செல்பவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, சாலைப் பணிகளை மேற்கொள்ளும்போது ஏற்படும் குழிகள் மற்றும் பள்ளங்களை வலுவான தடுப்புகளைக்கொண்டு பாதுகாக்க வேண்டும். அதுமட்டுமின்றி, எச்சரிக்கை பலகை மற்றும் எதிரொளிப்பான் போன்றவற்றை அமைக்க வேண்டும்.
கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளின் பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் 11.02.2010 மற்றும் 06.08.2010 ஆகிய தேதிகளில் பிறப்பித்த உத்தரவில் கண்ட அனைத்து விதிமுறைகளையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். இந்தப் பணிகளை திறம்பட செயல்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையின் கீழ் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பங்குதாரர்கள் ஆகியோர்களை ஒருங்கிணைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இது சம்பந்தமான செயல் திட்டத்தை வரும் 25.08.2023ம் தேதிக்குள் அரசுக்கு அறிக்கையாக அளிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் 30.09.2023க்குள் முடிக்க வேண்டும்” என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.