காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி, மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக நாட்டு மக்களை ஒன்று திரட்டும் முயற்சியாக ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரை, தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து டிச. 24 இல் தில்லியை சென்றடைந்தது.
9 நாள் ஓய்வுக்குப் பிறகு ராகுலின் யாத்திரை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தில்லியில் யமுனா பஜாரில் உள்ள ஹனுமன் ஆலயத்தில் வழிபட்ட பின் ராகுல் யாத்திரையை தொடர்ந்தார். ஹனுமனைப் போல் கையில் கதை ஒன்றையும் அவர் வைத்திருந்தார்.
உத்தரப் பிரதேச மாநில எல்லையில் ராகுலின் யாத்திரை வரவேற்று பேசிய காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி, “ எனது சகோதரர் ஒரு போராளி. அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அவர் இதுவரை 3,000 கி.மீ. தொலைவுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளார். கெளதம் அதானி, அம்பானி சில தலைவர்களையும் ஊடகங்களையும் விலைக்கு வாங்கியிருக்கலாம். ஆனால், அவர்களால் எனது சகோதரரை விலைக்கு வாங்க முடியாது.
வெறுப்பு அரசியல், பிரிவினை அரசியல் எந்த பலனையும் கொடுக்காது. வேலையின்மைக்கு தீர்வு காண்பதிலும், பொருளாதார முன்னேற்றத்திலும் மோடி அரசு கவனம் செலுத்தட்டும். எனது சகோதருக்கு கெட்டபெயர் ஏற்படுத்த ஆட்சியாளர்கள் பல விதங்களில் முயன்று வருகின்றனர். எனது சகோதரர் உண்மையை மட்டுமே பேசுகிறார். சரியான பாதையில் செல்கிறார். அவரை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.
இந்த யாத்திரையில் பங்கேற்கும் அனைவரும் ஒற்றுமை, அன்பு, மரியாதை ஆகியவற்றை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள்.
நாட்டை ஒற்றுமைப்படுத்த ராகுல் மேற்கொண்டுள்ள ஒற்றுமை யாத்திரை வெற்றிப் பயணமாக அமையட்டும். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றும் கடினமான காரியம் அல்லை என்று பிரியங்கா கூறினார்.
இந்த யாத்திரையில் பங்கேற்க வருமாறு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ராஷ்ட்ரீய லோக தளம் கட்சி தலைவர் ஜெயந்த் செளதுரி ஆகியோருக்கு ராகுல் அழைப்பு விடுத்திருந்தார்.
யாத்திரையில் பங்கேற்காவிட்டாலும் அவரது பயணம் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் தெரிவித்திருந்தார். ஆனால், மாயவதியும், செளதுரியும் யாத்திரையில் பங்கேற்க மறுத்துவிட்டனர்.
ராகுலின் இந்த யாத்திரைக்கு மக்களிடையே பலத்த வரவேற்பு உள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத் கூறியிருந்தார். இதற்கு பிகார் முதல்வர் நிதீஷ்குமார், சிவசேனை கட்சியின் (உத்தவ் பிரிவு) சஞ்சய் ரெளத் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.